Published : 31 Oct 2015 01:47 PM
Last Updated : 31 Oct 2015 01:47 PM

நலம் நலமறிய ஆவல்: இன்றைய பிரச்சினைக்கு ‘அது’தான் காரணமா?

எனக்கு இப்போது வயது 22, பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எட்டாம் வகுப்பு படித்தபோது சுயஇன்பப் பழக்கம் ஏற்பட்டது. 11-ம் வகுப்பு படித்தபோது, அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டேன். என்னுடைய இடதுபக்க உடலில், குறிப்பாக இடப்பக்கக் கழுத்து, இடப்பக்க இடுப்பு, இடது கால் ஆகிய இடங்களில் வலிக்கிறது. கல்லூரி முடித்த காலத்தில், இந்த வலி ஏற்பட ஆரம்பித்தது. இதற்கு என்னுடைய சுயஇன்பப் பழக்கம் காரணமாக இருக்குமா? இந்த வலியைப் பற்றி பெற்றோர், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்குச் சங்கடமாக இருக்கிறது. உங்களின் உதவி தேவை...

- பிரபாகரன்

இக்கேள்விக்கு செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர் பதில் அளிக்கிறார்:

உங்களுடைய தற்போதைய மனநிலையை உங்கள் கேள்வி அழுத்தமாக உணர்த்துகிறது. சிறு வயதில் நீங்கள் செய்தவை அனைத்தும், அந்த வயதில் ஏற்படும் மனக்கிளர்ச்சியால் நடந்தவை. அதனால் இந்த வயதில் பாதிப்பு ஏற்படுவது அரிதுதான்.

நல்ல உணவு பழக்கத்தையும், சீரான உடற்பயிற்சியையும் நீங்கள் கடைப்பிடித்தால் போதும். 'உணவே மருந்து' என்ற சித்த மருத்துவக் கூற்றுப்படி உங்கள் உடலுக்கும் உழைப்புக்கும் ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்து உரிய நேரத்தில் சுவைத்துச் சாப்பிடவும்.

உணவில் கீரை - குறிப்பாக முருங்கை, அரைக்கீரை, வெந்தயக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது. பழங்களில் கொய்யா , மாதுளை, பேரீச்சை மற்றும் அத்தி நல்லது. சிறுதானியக் கஞ்சி அல்லது அது சார்ந்த உணவைத் தினம் ஒரு வேளை உட்கொள்ளவும். உடல் சூட்டைக் குறைக்க வாரம் இரு முறை நல்லெண்ணெய் குளியல் அவசியம்.

எந்த நேரத்திலும் விளையாட்டுக்குக்கூடத் தீய பழக்கங்களை உரசிப் பார்க்காதீர்கள். தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. மற்றபடி ரொம்ப கவலைப்பட வேண்டாம், உங்கள் கால்வலிக்கும் சுயஇன்பத்துக்கும் தொடர்பில்லை. வேறு பிரச்சினை இருக்கலாம்.

நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-2



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x