Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

நுரையீரலைப் பட்டாசுகளால் தாக்கலாமா?

டாக்டர் பார்த்திபன் மாரிமுத்து

தீபாவளிக்குப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். கோவிட்19இன் பிடியில் கிக்கித்தவிக்கும் இந்தக்கால கட்டத்தில், வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடமுடியுமா? அப்படிக் கொண்டாடுவது சரியா?

இந்த ஆண்டில் கரோனா வைரஸ் தாக்கத்தால் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்து பலர் தவிக்கிறார்கள். நோயைக் கையாள்வதற்கு மருந்துகளோ தடுப்பூசிகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் கோவிட்-19 நுரையீரலைத் தாக்கும் என்று உறுதியாகத் தெரியும். இந்தநிலையில், நுரையீரலைத் தாக்கும் நச்சுப்புகையை உண்டாக்கும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவது மனித இனத்துக்குப் பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும். தற்போது மட்டுப்பட்டுவரும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையையும் அது உருவாக்கக்கூடும்.

நச்சுப் புகை

தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகள் வெளிப்படுத்தும் புகையில், நச்சுத்தன்மை மிகுந்த சல்பர் டைஆக்சைடு (SO2), கார்பன் டைஆக்சைடு (CO2), கார்பன் மோனாக்சைடு (CO) போன்ற வேதிப் பொருள்கள் இருக்கும். அவை காற்றில் அடர்த்தியான கரித்துகள்களையும், அலுமினியம், மாங்கனீஸ், காட்மியம் போன்றவற்றையும் கலக்கின்றன. இவை நுரையீரலில் சளியையும் நீரையும் கட்டச் செய்யும். காய்ச்சல் ஏற்படக்கூடும். இந்தப் பருவகாலத்தில் இப்படித்தானே இருக்கும் என்று பலரும் இந்த அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக்கொள்வது வாடிக்கையே. ஆனால்,கோவிட்-19இன் கொடூரத் தாக்கம் இருக்கும் இந்தாண்டில், பட்டாசுப் புகையால் முதியவர்கள், நோயாளிகள் மோசமாக பாதிக்கப்பட நாம் காரணமாக இருப்பது சரியான செயலாக இருக்குமா?

பட்டாசுப் புகைக்கும் கோவிட்-19க்கும் நுரையீரல் மட்டுமே இலக்கு. அத்துடன் மழை, குளிர்காலத்தில் பட்டாசுப் புகை வளிமண்டல மேலடுக்குக்குச் செல்லாமல், கீழேயே தங்கி சுவாசமண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும். இது மக்களைத் துன்பத்துக்கு ஆளாக்குவது ஒவ்வொரு தீபாவளியிலும் நடக்கிறது. நகரங்களில் ஏற்கெனவே காற்று மாசு பட்டிருக்கும்போது, பட்டாசுப் புகையை உண்டாக்கி, அது வெளிப்படுத்தும் நஞ்சை நுரையீரலில் ஏற்றினால், கோவிட்-19 தாக்கம் மீண்டும் தீவிரமடையும் ஆபத்திலேயே முடியும். இந்தக் காரணங்களை உணர்ந்துதான் டெல்லி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஒடிசா, ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளன.

நம்முடையகடமை

நீரிழிவு, சிறுநீரக/ கல்லீரல் நோய்கள், ஆஸ்துமா, காசநோய் போன்ற நோய்கள் ஏற்படுத்தும் சுவாசக்கோளாறுகளுக்கும் பட்டாசுப் புகை நச்சு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்; மூச்சுத்திணறலையும் உண்டாக்கும். கரோனாவால் எப்போது நுரையீரல் பாதிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு, தீபாவளிப் பட்டாசுப்புகை ஒரு சாபக்கேடாக மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்தப் பிரச்சினையை மனத்தில் கொண்டு முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருமே பட்டாசு வெடிக்காமல் புகையின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதே நல்லது. புகையும் மாசும் இன்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது சாத்தியமே. அதுவே அனைவருக்கும் நலம் பயக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x