Published : 10 Oct 2015 12:21 PM
Last Updated : 10 Oct 2015 12:21 PM
என் சகோதரருக்கு வயது 30. பிறந்ததிலிருந்தே அவருக்கு வலிப்பு நோய் உண்டு அவர் தினசரி encorate 500 மி.கி. இரண்டு முறையும், clobazam 10 மி.லி. இரவிலும் எடுத்துவருகிறார். ஆனால், இத்தனையும் இருந்தும் தூங்கும்போதே அவருக்கு வலிப்பு வந்துவிடுகிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய எடை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வீட்டுக்குள் அவர் தவழ்ந்தே செல்கிறார். மனநலம் குன்றியவர். அவருக்கு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்.
- இப்ராஹிம், மின்னஞ்சல்
இந்தக் கேள்விக்குச் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெ. பாஸ்கரன் பதிலளிக்கிறார்:
உங்கள் சகோதரர் சிறு வயது முதலே வலிப்புக்கு மருந்து எடுத்துக்கொண்டும் வலிப்பு இன்னும் கட்டுப்படவில்லை என்று அறிகிறேன். அவருக்கு செரிப்ரல் பால்ஸியும் இருக்கக்கூடும்.
காரணம் என்ன?
# மூளையில் குறைபாடு - கட்டி, நீர்க் கட்டி, ரத்தவோட்டக் குறைபாடு, இன்ன பிற காரணங்கள் இருந்தால் வலிப்பு உடனே கட்டுப்படாது.
# கொடுக்கும் மருந்தின் அளவு குறைவாக இருக்கலாம். ரத்தத்தில் தேவையான அளவு வலிப்பு மருந்து இல்லையென்றாலும் வலிப்பு வரும்.
# நீங்கள் கூறியுள்ள encorate மருந்து நோயாளியின் எடையைக் கூட்டும் - அது ஒரு பக்க விளைவு. மேலும் உங்கள் சகோதரர் நடப்பதில்லை என்பதால், உடலுக்கு எந்த அடிப்படை உடற்பயிற்சியும் கிடைப்பதில்லை. அதுவும் எடை கூடுவதற்குக் காரணமாகும்.
என்ன செய்ய வேண்டும்?
# மருத்துவ ஆலோசனையுடன் encorate மாத்திரையை நாளொன்றுக்கு மூன்றாக அதிகப்படுத்தலாம். (அதேநேரம், கல்லீரல் சரியாக இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்).
# புதிய வகை வலிப்பு மருந்தை - லேவேற்றியாசிடம் , சோனியாசமைட் போன்றவை - உரிய மருத்துவர் ஆலோசனையுடன் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
# தூக்கம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.
# நோய்த்தொற்று ஏதும் வராமல் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதி தொடர்ந்து வெளிவரும். பல்வேறு மருத்துவ முறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பதில் அளிப்பார்கள். வாசகர்கள் முக்கியமான மருத்துவ சந்தேகங்களை தொடர்ந்து அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT