Published : 20 May 2014 02:37 PM
Last Updated : 20 May 2014 02:37 PM

தாய்ப்பாலுக்கு இணையான தானியம்

நாடு முழுவதும் கேழ்வரகு, கேப்பை, ராகி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த உறுதிமிக்க தானியம் அதிக சக்தி தரும் உணவு. அதனால், கடுமையாக உழைப்பவர்கள் கேழ்வரகு சார்ந்த உணவை விரும்புகிறார்கள். ஏனென்றால், உடலுக்குத் தேவைப்படும் சக்தியைக் கேழ்வரகு உடனடியாகத் தரும்.

அதிக ஊட்டச் சத்தையும், அதற்கு இணையாக நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உணவாகவும் திகழ்கிறது கேழ்வரகு. அதன் காரணமாக நிச்சயமாக, இதை அற்புத உணவு எனலாம்.

அமோக விளைச்சல்

தக்காணப் பீடபூமி, ஜார்க்கண்ட் சமவெளிப் பகுதி, கார்வால் மலைப் பகுதி என முற்றிலும் மாறுபட்ட நிலப்பகுதிகளில் விளைகிறது. இந்தத் தானியத்தை விளைவிக்க அதிகக் கவனிப்பு தேவையில்லை, வறண்ட சூழ்நிலையிலும்கூடச் செழித்து வளரும்.

இது பயிர் நோய்களையும் பூச்சிகளையும் எதிர்த்து நிற்கக்கூடியது என்பதால், விவசாயிகளுக்குப் பொய்த்துப் போகாமல் பலன் கிடைக்கும். சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 1,000 கிலோ விளைவதன் மூலம் இந்தியாவில் விளையும் சிறுதானியங்களில் மிக அதிக மகசூலைத் தருவதாகத் திகழ்கிறது கேழ்வரகு.

ஊட்டச்சத்துகள்

பிறந்த குழந்தை முதல் 90 வயது வரை உள்ளவர்கள் சாப்பிட ஏற்றதாக இந்தத் தானியம் திகழ்கிறது. 100 கிராம் கேழ்வரகில் உள்ள கால்சியத்தின் அளவு 34.4 கி. எளிதாக ஜீரணமாகக்கூடிய தானியம் என்பதால், தென்னிந்தியாவில் மாவாக மாற்றப்பட்டு, பாலுக்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்குக் கூழாகக் கொடுக்கப்படுகிறது.

கேழ்வரகில் உள்ள புரதம், பாலில் உள்ளது போன்ற முழுமையான புரதம். அதன் காரணமாக லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்குச் சிறந்த மாற்று உணவாக இருக்கிறது. இதிலுள்ள மற்றொரு ஆரோக்கிய அம்சமும் முக்கியமானது. குறைந்த கிளைசிமிக் உணவு என்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.

நாம் மறந்துவிடக் கூடாத மற்றொரு விஷயம், மற்ற சிறுதானியங்களைப் போலவே குளூட்டன் இல்லாத உணவும்கூட. அதனால், குளூட்டன் அலர்ஜி இருப்பவர்களும் இதைச் சாப்பிடலாம்.

தென்னிந்தியாவில் கேழ்வரகு தோசை, உப்புமா, கூழ் ஏன் அல்வாகூடத் தயாரிக்கப்படுகிறது. அதேநேரம் இதை மாவாகத் திரித்துச் சாப்பிடும்போது, இதிலுள்ள நார்ச்சத்து அதிகரிக்கிறது.

அதனால் எப்பொழுதெல்லாம் கோதுமை மாவைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்பொதெல்லாம் பாதி கேழ்வரகு மாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

புதிய பிரபலம்

இப்படிப் பல்வேறு பலன்களைத் தரும் மறக்கப்பட்ட உணவாக இருந்த கேழ்வரகு, பலரும் விரும்பும் அற்புத உணவாக வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இப்போது பல முன்னணி நிறுவனங்களும் கேழ்வரகு பிஸ்கட் தயாரிப்பதில் பெருமிதத்துடன் ஆர்வம் காட்டிவருகின்றன.

இப்படிப் புதிய அபிமானத்தைப் பெற்று வேகமாகப் பிரபலமடைந்து வரும் கேழ்வரகு, சுவை மிகுந்த உள்ளூர் உணவு பண்பாட்டில் நீண்டகாலம் இடம்பெற்ற தொடர்ச்சியைக் கொண்டிருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

காலனி ஆட்சிக் காலத்தில் முரட்டுத் தானியமாகக் கருதப்பட்ட கேழ்வரகு, இப்போது சூழலியல் ரீதியிலும், ஊட்டச்சத்து ரீதியிலும், சுவைரீதியிலும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுச் சிறுதானியங்களிலேயே சிறப்பு பெற்ற உணவாகத் திகழ்கிறது.

உலகப் புகழ்பெற்ற சூழலியலாளர் வந்தனா சிவா, நவதான்யா நிறுவனத் தைத் தொடங்கியவர். நவதான்யா நிறு வனத்தின் தற்போதைய இயக்குநர் மாயா கோவர்தன். பண்பாடு, பாரம்பரிய அறிவு, மறக்கப்பட்ட உணவு ஆகியவற்றை மீட்கும் பணியில் நவதான்யா ஈடுபட்டுள்ளது.

(சுருக்கமான மொழிபெயர்ப்பு)

© தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: வள்ளி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x