Published : 18 Jul 2020 09:29 AM
Last Updated : 18 Jul 2020 09:29 AM
தமிழகத்தில் கரோனா தொற்றுத் தொடக்கத்தில் சென்னையிலும், பிறகு சென்னையின் அண்டை மாவட்டங்களிலும் அதிகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது சென்னையில் கரோனா தொற்று சற்று மட்டுப்படத் தொடங்கிவிட்டாலும், சென்னையின் அண்டை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பெரிதாகக் குறையவில்லை.
தொடக்கத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் குறைந்த நோய்த் தொற்றாளர்களுடன் நிம்மதியாக இருந்தன. ஆனால், கடந்த 2-3 வாரங்களாக நிலைமை தலைகீழாக மாறிவருகிறது. நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை காட்டுத்தீ போல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டால்தான், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், கள அளவில் பரிசோதனைகள் அதிகரிக்க முடியாத நிலைமையே இருக்கிறது. காரணம், மாவட்ட அளவில் பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள் அதிக எண்ணிக்கையில் இல்லை.
இதனால் பரிசோதனை செய்துகொள்ள வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, அந்த வரிசைப்படி அடுத்தடுத்த நாட்களில் பரிசோதனைக்கு வருமாறு அறிவுறுத்தப்படு கிறது. இந்த வகையில் ஒருவருக்குப் பரிசோதனை செய்ய சராசரியாக 5 நாட்கள் ஆகிவிடுகின்றன. அது மட்டுமல்லாமல் பரிசோதனை எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பரிசோதனை முடிவு கிடைக்க மேலும் 5 நாட்கள் ஆகிவிடுகின்றன. குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குப் பிறகே ஒருவருக்கு பரிசோதனை முடிவு கிடைக்கிறது.
இந்நிலையில், அறிகுறியற்ற ஒருவர் தனக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் கட்டுப்பாட்டுடன் இருப்பாரா என்பது சந்தேகம்தான். இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட நபர், வீட்டில் வாழும் சக குடும்ப உறுப்பினர்களுக்கும் வெளியில் இருப்பவர்களுக்கும் நோய்த்தொற்றைப் பரப்பாமல் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இப்படி அவர்களுக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்படுவது தாமதமாவதன் மூலம் கரோனா தொற்று மேலும் பலருக்குப் பரவுகிறது. அது மட்டுமல்லாமல் கரோனா தொற்று பாதிப்பு அமைதியாக இருந்து, சட்டென்று மூச்சுத்திணறல் நிலைக்கு செல்வதும், சிலர் இறப்பதும்கூட நிகழ்கிறது.
அடிப்படையே பிரச்சினை
ஊரடங்கு மூலம் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்பட்டு தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் மருத்துவக் கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், பல நோய்த்தொற்றுப் பரவலியல் நிபுணர்களும் மருத்துவர்களும் முன்பே எச்சரித்ததுபோல், சென்னை பெருநகர்ப் பகுதியைத் தவிர்த்த மற்ற பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று தற்போது தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் என்ன தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன? தமிழகத்தில் பரவத் தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்ட பின்னரும் உரிய பரிசோதனை வசதிகள் இல்லையென்றால் நோய்த்தொற்று எப்படிக் கட்டுப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.
பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் பெரிதாக வெளி யாகின்றன. ஆனால், நடைமுறை யதார்த்தம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதேபோல் நோய்த்தொற்று தீவிரமடையாத காலத்தில் வென்டிலேட்டர் கருவிகள் வாங்குவது பற்றி தேசிய அளவில் பெரிய விவாதமும், வென்டிலேட்டர் கருவிகள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இன்றைக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உரிய நேரத்தில் கிடைப்பதுகூடப் பிரச்சினையாக இருக்கிறது. நோய்த்தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் நோயைக் கட்டுப்படுத்துவதில் பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகள் உரிய எண்ணிக்கையில் தேவை. இல்லாத நிலையில் பரிசோதனைகளை எப்படி அதிகரிக்க முடியும்? நோயை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
அது மட்டுமல்லாமல், சென்னை பெருநகர மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவ நிபுணர் களைப் போன்றவர்கள் எல்லா மாவட்டங்களிலும் இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. உரிய மருத்துவ வசதிகள் அருகில் இருப்பதற்கான சாத்தியமும் குறைவு. இந்த நிலையில் தீவிர நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் எப்படிக் காப்பாற்றப்படப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில், தமிழக மாவட்டங்களில் கரோனா தொற்று எப்படி கட்டுப்படுத்தப் போகிறது?
- நந்தன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT