Published : 23 May 2020 09:02 AM
Last Updated : 23 May 2020 09:02 AM
விக்னேஷ் ராம்
நாவல் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தேவையில்லை. சமூகத்தில் பெரும் பாலோருக்கு நோய்த் தடுப்பாற்றலை, அதாவது சமூக நோய்த் தடுப்பாற்றலை ஏற்படுத்திவிட்டால் நாவல் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டில் இது சாத்தியமா? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு சமூக நோய்த் தடுப்பாற்றல் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.
சமூக நோய்த் தடுப்பாற்றல் (Herd immunity) என்ற சொல்லை இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1923-ம் ஆண்டில் முன்வைத் தார்கள். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிக் கூட்டத்தில் தடுப்பூசி போடப்படாத எலிகளுக்கும் நோய்த்தொற்று இல்லாததையே, அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள். தனிப்பட்ட ஒரு நபரின் நோய் எதிர்ப்பாற்றலானது, அந்த நபரை நோய்களிடம் இருந்து காப்பதுபோல், ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு இருக்கும் நோய்த் தடுப்பாற்றல், மற்றவர்களையும் காப்பதுதான் 'Herd immunity / Community immunity' எனப்படும் சமூக நோய்த் தடுப்பாற்றலின் அடிப்படை.
எப்படி நடைபெறுகிறது?
ஒரு சமூகத்தில் இரண்டு வழிகளில் சமூக நோய்த் தடுப்பாற்றலை ஏற்படுத்த முடியும். பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையானது நோயை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிரான தடுப்பூசியை பெரும்பான்மை மக்களுக்கு போடுவது. பெரும்பான்மை மக்களுக்கு போடப்படும் தடுப்பூசி, வைரஸ் தொற்றின் சங்கிலித்தொடரை உடைத்தெறிவதால், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களையும் அது காக்கிறது. இந்தியாவில் சின்னம்மை, போலியோ போன்ற நோய்கள் தற்போது இல்லாமல் போனது, தடுப்பூசியால் கிடைத்த நோய்த் தடுப்பாற்றலால்தான். மற்றொரு முறையானது இயற்கையான வழியில் நோய்த்தொற்றை அதன் போக்கில் சமூகத்தில் பரவவிட்டு, குணமடைந்த பெரும்பான்மையான மக்கள் பெற்ற நோய்த் தடுப்பாற்றல் மூலம் நோயற்ற மற்றவர்களையும் காப்பதே சமூக நோய்த் தடுப்பாற்றல்.
நாவல் கரோனா வைரஸால் ஏற்படும் கோவிட்-19 என்னும் பெருந்தொற்றுக்குத் தடுப்பூசியோ மருந்துகளோ இல்லாத நிலையில், நோய்த்தொற்றின் மூலம் பெரும்பான்மையான் மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றலை உருவாக்கி, அதன்மூலம் நோய் தொற்றாத மற்றவர்களையும் காக்க முடியும் என்பது சில அறிவியலாளர்களின் கருத்து. பெரும்பான்மையினருக்கு நோய்த் தடுப்பாற்றல் உண்டான நிலையில், வைரஸ் தொற்றின் சங்கிலித்தொடர் அறுபடும் என்பது தான், இதன் பின்னால் உள்ள அறிவியல்.
ஸ்வீடனின் முயற்சி
உலக நாடுகள் பெரும்பாலும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு அடைப்பைப் பின்பற்றியபோது, ஸ்வீடன் மட்டும் இன்றுவரை ஊரடங்கு எதுவுமின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அநாவசியப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தினாலும் கூட, பள்ளிகள், அலுவலகங்கள், உணவகங்கள் மூடப்படாமல் இயல்பு வாழ்க்கை அங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வயது முதிர்ந்தோரை வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்திவிட்டு, இளவயதினருக்கு எந்த தடையும் அங்கு விதிக்கப்படவில்லை. சமூக நோய்த் தடுப்பாற்றலை உருவாக்குவதுதான் இந்தச் செயல்பாடுகளின் நோக்கம் என்ற கருத்தை மறுக்கும் ஸ்வீடன் அரசு, மருத்துவ அறிவியலாளர்களின் உருமாதிரி ஆய்வுகளின் அடிப்படையில் இந்த உத்தியைக் கையாள்வதாக அறிவித்துள்ளது.
குறைவான மக்கள்தொகை (நாட்டின் மொத்த மக்கள்தொகையே சென்னை மாநகரின் மக்கள்தொகை அளவுதான்), நேர்த்தியான உள்கட்டமைப்பு வசதிகள், மக்கள் குறித்த தரவுத்தளம் (Database) போன்றவற்றால் அவர் களுக்கு இது சாத்தியமாகிறது. ஸ்வீடனில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும், அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விடவும் அதிகமாகவே உள்ளது. இப்படி இறப்பவர்களில் பெரும்பாலோர் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். இந்த உத்தியை உள்நாட்டு, உலக அறிவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளபோதும், ஸ்வீடன் மிகுந்த நம்பிக்கையுடன் இதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்வீடனின் இந்த உத்தி மக்களைக் காக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் சாத்தியமா?
சரியும் பொருளாதாரம் - மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு நம் நாட்டில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்திவரும் வேளையில், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து சமூக நோய்த் தடுப்பாற்றல் மக்களை முழுமையாக மீட்டெடுத்துவிடுமா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது.
எத்தனை சதவீத மக்களை இப்படி நோய் தாக்கினால், வலிமையான சமூக நோய்த் தடுப்பாற்றல் உருவாகும் என்பதற்கு அந்த வைரஸின் அடிப்படை இனப்பெருக்க எண்ணைக் (R0) கொண்டு கணக்கிட்டு அறிய வேண்டும். கரோனா வைரஸின் R0 இரண்டு என்ற அடிப்படையில், சமூக நோய்த் தடுப்பாற்றல் தோன்றுவதற்கு சுமார் 70 சதவீத மக்கள்தொகையை இந்த நோய் தாக்கி, அதன்மூலம் நோய்த் தடுப்பாற்றல் கிடைக்க வேண்டும்.
நம் நாட்டின் மக்கள்தொகையான 138 கோடியில், 70% என்பது 97 கோடி பேருக்கு இந்த நோய் தாக்கினால் மட்டுமே சமூக நோய்த் தடுப்பாற்றல் சாத்தியம். இந்தியாவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,19,115 பேர் மட்டுமே. அத்துடன் நம் நாட்டின் மருத்துவ வசதிகளைப் பற்றியும் இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம் நாட்டில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோரில் சுமார் 3% மரணமடைகிறார்கள். இந்தக் கணக்கின்படி பார்த்தால், மேற்கண்ட உத்தியை நடைமுறைப்படுத்தினால் 2.7 கோடி மக்கள் பலியாகக்கூடும். அத்துடன் அறுபது வயதைக் கடந்த முதியோர், ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர், குறைவான நோய்த் தடுப்பாற்றல் கொண்டவர்கள் போன்றோர் இதன் மூலம் அதிக ஆபத்தை எதிர்கொள்வார்கள். இப்படிப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
சில கேள்விகள்
நாவல் கரோனா வைரஸ் (SARS-CoV-2) ஒரு புதிய வைரஸ் வகை என்பதால், இதைப் பற்றிய நமது புரிதல் மிகவும் குறைவு. மக்களிடையே கோவிட்-19 தாக்கியபின் வரும் நோய்த் தடுப்பாற்றல் எந்த அளவுக்கு, எவ்வளவு காலத்துக்கு வீரியமாக இருக்கும் என்பதும், குறைவான அறிகுறிகளுடன் குணமடைந்த மக்களுக்கும் நோய்த் தடுப்பாற்றல் போதுமான அளவு இருக்குமா என்பதும் முக்கியக் கேள்விகள்.
தடுப்பூசி இல்லாத நோய்க்கு சமூக நோய்த் தடுப்பாற்றைலைப் பெறுவது மிகவும் ஆபத்தான முயற்சி என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் சமூக நோய்த் தடுப்பாற்றலைவிட கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதுதான் இப்போதைய அவசியத் தேவை. அதுவரை சமூக இடைவெளியைப் பேணுதல், தேவையற்ற பயணம் - கூட்டத்தைத் தவிர்த்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலமே நாவல் கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க முடியும்.
R0 என்றால் என்ன? ஒவ்வொரு தொற்றுக்கிருமியும் பரவும் வேகத்தை அடிப்படை இனப்பெருக்க எண் எனப்படும் ‘R0 ' மூலம் குறிப்பிடுவர். எதிர்ப்பாற்றல் அற்ற ஒரு சமூகத்தில் புதிதாக தோன்றும் ஒரு தொற்றுக்கிருமி, முதலில் எத்தனை பேரைத் தொற்றுகிறது என்பதை, இந்த R0 எண் குறிக்கிறது. இந்த அடிப்படை இனப்பெருக்க எண்ணானது ஒன்றுக்குக்கீழ் இருந்தால், அந்தத் தொற்று அதிகம் பரவாது என்பதால் பாதகம் இல்லை. கரோனா வைரஸின் ‘R0' 2.5 என்பதால், முதல் கட்டமாக சராசரியாக 2.5 பேருக்கு பரவும் இந்த நோய்த்தொற்று, அடுத்தக்கட்டப் பரவலில் 6.25 (1 x 2.5 x 2.5) பேருக்கும், அடுத்த நிலைப் பரவலில் 15.63 (1 x 2.5 x 2.5 x 2.5) பேருக்கும் பரவும். இவ்வாறாக அடுக்கேற்ற முறையில் பதினான்காம் நிலைப் பரவலில் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு இது பரவியிருக்கும். இதன்மூலம் இதன் தொற்று வேகத்தை அறிந்துகொள்ளலாம். மேலும், ஒரு சமூகத்தில் எத்தனை பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், வலுவான சமூக நோய்த் தடுப்பாற்றல் தோன்றும் என்பதை (R0 - 1)/R0 என்ற சூத்திரத்தின் மூலம் கணிப்பதற்கும் இந்த R0 எண் அவசியமாகிறது. |
கட்டுரையாளர், மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழக மருத்துவ நுண்ணுயிரியல் நிபுணர்
தொடர்புக்கு: vignesh@unikl.edu.my
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT