Published : 28 Mar 2020 02:23 PM
Last Updated : 28 Mar 2020 02:23 PM
டாக்டர் கு. கணேசன்
இது ‘கரோனா’ காலம். கோவிட்-19 எனும் புதிய நோயை சார்ஸ் கரோனா வைரஸ்-2 உருவாக்கியிருக்கிறது. உலகம் முழுவதிலும் இந்தப் புதிய நோய் பரவி 10,000-க்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கிவிட்டது. அவர்களில் அநேகர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம்.
மூத்த வயது மட்டுமல்ல; அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருந்ததும் ஒரு முக்கியக் காரணம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
‘நோய் எதிர்ப்பாற்றல்’ என்பது என்ன?
ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை/ நோயை/ உடலில் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சினையை (உதாரணம்: ஒவ்வாமை) முதலில் நம் உடலே எதிர்த்துப் போராடும். இந்தப் போராட்டத்துக்கு ஆற்றல் தருவதற்கு உடலில் ‘தற்காப்பு மண்டலம்’ (Immune system) இருக்கிறது. ரத்தமும் நிணநீரும் இணைந்துள்ள மண்டலம் இது. இவை தரும் போராட்ட ஆற்றலைத்தான் ‘நோய் எதிர்ப்பாற்றல்’ (Immunity) என்கிறோம். இந்தப் போராட்டத்தில் உடல் வெற்றிபெற்றால் நமக்கு நோய் வராது; வருவதாக இருந்த ஓர் ஆரோக்கியப் பிரச்சினை வராமலே நின்றுவிடும். மாறாக, இந்தப் போராட்டத்தில் நோய்க் கிருமியோ அந்நியப் பொருளோ வெற்றி பெற்றுவிட்டால் உடலில் நோய்ப் பாதிப்பு வந்துவிடும்.
‘நோய் எதிர்ப்பாற்றல்’ எப்படிக் கிடைக்கிறது?
நமக்கு நோய் எதிர்ப்பாற்றல் இரு வழிகளில் கிடைக்கிறது. தாயின் ரத்தம் வழியாக இயற்கையிலேயே கிடைப்பது ஒரு வழி (Innate immunity). இது நம் பிறக்கும்போதே உடலில் இயல்பாக இருப்பது. ‘செயற்கை நோய் எதிர்ப்பாற்றல்’ (Acquired immunity) என்பது அடுத்த வழி. பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பாற்றலை செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. சுருக்கமாகச் சொன்னால் தடுப்பூசிகள் மூலம் கிடைப்பது.
‘நோய் எதிர்ப்பாற்றல்’ எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்குமா?
இருக்காது. ஒருவருடைய வயது, அவரது உடலின் ஆரோக்கிய நிலை, போட்டுக்கொண்ட தடுப்பூசிகள், உணவுமுறை, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை, சுற்றுச்சூழல் போன்ற பல காரணிகள் அவருக்கான நோய் எதிர்ப்பாற்றலைத் தீர்மானிக்கின்றன. பிறந்த குழந்தைக்கு ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கும் இயற்கை நோய் எதிர்ப்பாற்றலுடன் தாய்ப்பால் மூலமும் இது கிடைப்பதால் முழுமையான நோய் எதிர்ப்பாற்றல் காணப்படும்.
பிறகு அந்தக் குழந்தை வளர்ச்சியடையும்போது ஊட்டச்சத்து கொண்ட முறையான உணவுமுறையையும் உடற்பயிற்சி மூலம் சீரான வாழ்க்கைமுறையையும் பின்பற்றி, நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்தால், வயதுக்கு ஏற்ப எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டால் வாழ்க்கையின் கடைசிவரை அந்த நோய் எதிர்ப்பாற்றல் சரியாகவே இருக்கும். மாறாக, இந்தக் காரணிகளில் ஒன்றிரண்டு சரியாக அமையவில்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறையத் தொடங்கிவிடும். அதைக் காலத்துடன் கவனித்துச் சரி செய்யாவிட்டால், வயதாகும்போது நோய் எதிர்ப்பாற்றல் இல்லாமலே போய்விடும்.
நோய் எதிர்ப்பாற்றல் எப்படிக் குறைகிறது?
ஊட்டச்சத்துக் குறைவது இதற்கு முதற்காரணம். புகைபிடிப்பதும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் அடுத்த காரணங்கள். நவீன வாழ்க்கைமுறை உருவாக்கியுள்ள துரித உணவுப்பழக்கம், உடற்பருமன், உறக்கம் குறைவு, உடற்பயிற்சிக் குறைவு, மன அழுத்தம் போன்றவையும் உடலில் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைத்துவிடுகின்றன.
மாசடைந்த சூழலிலும், மக்கள் நெருக்கமான இடங்களிலும் வசிப்பவர்கள், கதிரியக்கம் அதிகம் வெளிப்படும் பணிகளில் உள்ளவர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. அடிக்கடி நோய்த்தொற்றுகளால் அவதிப்படுபவர்களுக்கும் மருந்து, மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவோருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. சரியான வயதில் முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறுபவர்களுக்கும் இதே பிரச்சினை ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பாற்றல் குறைவதை எப்படி அறிந்துகொள்வது?
சிறிய வேலைகளைச் செய்தால்கூட உடலில் சோர்வு ஏற்படும். அடிக்கடி ஏதாவது ஒரு தொற்று ஏற்படும். உதாரணமாக மாதாமாதம் சளி, ஜலதோஷம், காய்ச்சல் என வந்தால், ஒவ்வாமை ஏற்பட்டால், காயங்கள் ஆறத் தாமதமானால் இதைச் சந்தேகப்பட வேண்டும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாதது, அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண், சிறுநீரகத் தொற்று, பசிக்குறைவு, செரிமானக்கோளாறு, வயிற்றுப்போக்கு போன்றவை நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது என்பதைக் காட்டும் மற்ற அறிகுறிகளில் அடங்கும்.
இதைத் தெரிந்துகொள்ளப் பரிசோதனைகள் உள்ளனவா?
இதற்கெனச் சிறப்புப் பரிசோதனைகள் எவையுமில்லை. பொது ஆரோக்கியம் சரியாக உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளும் பரிசோதனைகளே இதற்கும் மேற்கொள்ளப்படும்.
நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? * கர்ப்பிணிக்குக் கர்ப்பகாலக் கவனிப்பு உரிய வகையில் இருக்க வேண்டும். |
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT