Published : 29 Feb 2020 09:22 AM
Last Updated : 29 Feb 2020 09:22 AM
கனி
எளிமையாகக் கிடைக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யாப் பழம். இந்தப் பழத்தில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி, லைக்கோபின், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. கொய்யாப் பழம், பல நன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.
கொய்யாப் பழம் மட்டுமல்லாமல் கொய்யாவின் இலையும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் இருக்கும் எண்பது சதவீத நீர்ச்சத்து மனிதத் தோலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
கொய்யாப் பழம் அளிக்கும் நன்மைகள்…
ஜீரணத்துக்கு உதவுகிறது
கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், அன்றாடம் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டுவருவது ஜீரண மண்டலத்தைச் சீராக்குவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கொய்யாப் பழத்தில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய 12 சதவீத நார்ச்சத்து உள்ளது.
குறையும் ரத்தச் சர்க்கரை அளவு
கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைவதாகப் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொய்யாப் பழ இலைத் தேநீர் அருந்துவது நீண்டகால அடிப்படையில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொய்யாப் பழத்தையும் கொய்யா இலைத் தேநீரையும் தொடர்ந்து அருந்தலாம்.
மாதவிடாய் வலியைக் குறைக்கிறது
மாதவிடாயின் போது பல பெண்கள் வயிற்று வலியை எதிர்கொள்கின்றனர். கொய்யாப்பழம் மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கிறது. மாதவிடாயின் போது கொய்யாப் பழ இலைகளை உட்கொண்ட பெண்கள், மாதவிடாய் வயிற்றுவலியிலிருந்து பேரளவு நிவாரணம் பெற்றதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பேறுகாலத்துக்கு நல்லது
கொய்யாப் பழத்தில் இருக்கும் ஃபோலேட் ஊட்டச்சத்து பேறுகாலத்துக்கு அத்தியாவசமானது. இந்த ஊட்டச்சத்து வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை, தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதய நலம்
கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின்கள் இதயம் பாதிக்கப்படாமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், கொய்யாவில் அதிக அளவில் இருக்கும் பொட்டாசியம், கரையும் நார்ச்சத்து ஆகியவை இதய நலனைப் பேணுகின்றன. ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய்கள் உருவாவதிலிருந்து இந்தப் பழம் தடுக்கிறது.
பேறுகாலத்துக்கு நல்லது
கொய்யாப் பழத்தில் இருக்கும் ஃபோலேட் ஊட்டச்சத்து பேறுகாலத்துக்கு அத்தியாவசமானது. இந்த ஊட்டச்சத்து வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை, தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும்
கொய்யாப் பழத்தில் இருக்கும் மக்னீசியம், உடலில் இருக்கும் நரம்புகள், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவுகிறது. இது மன அழுத்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. மக்னீசியம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
தோல் நலன்
கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் மனிதத் தோல் பாதிப்படைவதிலிருந்து தடுக்கின்றன. அத்துடன், வயதான தோற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது. கொய்யாப் பழ இலைகளை அரைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களைக் குணப்படுத்த உதவும். பருக்களை உருவாக்கும் பாக்டீரியாவைக் கொய்யாப் பழ இலைகள் கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது
வைட்டமின் சி ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் தொற்றுகளும் நோய்களும் ஏற்படுகின்றன. வைட்டமின் – ‘சி’யை எடுத்துகொள்வதற்குச் சிறந்த வழியாகக் கொய்யாப் பழம் இருக்கிறது.
ஒரு கொய்யாப் பழம், அன்றாடத் தேவைக்கான வைட்டமின் ‘சி’ சத்தை வழங்குகிறது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி அளவைவிட இரண்டு மடங்கு கூடுதலான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கியமான பங்கை வகிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT