Published : 01 Feb 2020 11:30 AM
Last Updated : 01 Feb 2020 11:30 AM

வாழ்வின் முடிச்சுகள்

சுபா ஸ்ரீகாந்த்

உயிர் வேதியியலில் எம்.எஸ்ஸி முடித்தவுடன் எனக்குத் திருமணம் உறுதியானது. வாய்த்த கணவர் அன்பானவர், அனுசரணைமிக்கவர் என்பதால், வாழ்வில் நித்தமும் மகிழ்ச்சி நிறைந்து வழிந்தது. ஒரு மகன், ஒரு மகள் எனக் குடும்பமும் சட்டென விரிந்தது. இயல்பாகவே பெருத்த உடல்வாகைக் கொண்டிருந்த நான், குழந்தைகளின் வரவுக்குப் பின் இன்னும் அகலமாகி, எடையில் சதமடித்தேன்.

அதிக எடை காரணமாக அதற்கு ஏற்ற உடல் உபாதைகளும் ஏற்பட்டன. நடந்தால் மூச்சு வாங்குவது மட்டுமல்லாமல்; முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவை ஏற்பட்டன. இந்த வலிகள் எனக்குப் பழகிப் போனதாலும், அது வாழ்வின் இயல்பாக மாறிப் போனதாலும் அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வலிகளுடனான வாழ்வும் எனக்கு இனிதாகவே சென்றது.

மரண அவஸ்தை

இந்த நிலையில், மூன்று ஆண்டு களுக்கு முன்னர், ஒரு மாலை வேளையில், பச்சை மிளகாயையும் காய்ந்த மிளகாயையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலில் பூசியது போல, ஒரு தாங்க முடியாத எரிச்சல், எனது வலது கால் முட்டியின் கீழிலிருந்து கணுக்கால்வரை ஏற்பட்டது. மரண அவஸ்தை அது.

நேரமாக நேரமாக எரிச்சலின் அளவும் அதிகரித்தது. குளிர்ந்த நீரைக் காலில் ஊற்றிப் பார்த்தேன். ஃபிரிஜ்ஜிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்து காலுக்கு ஒத்தடம் கொடுத்துப் பார்த்தேன். எரிச்சல் நின்றபாடில்லை. உள்ளூர ஒருவித அச்சமும் என்னை ஆட்கொண்டது. கணவரை செல்போனில் அழைத்து எனது அவஸ்தையைத் தெரிவித்தேன். அடுத்த 15 நிமிடங்களில் வீட்டுக்கு வந்த அவர், உடனடியாக என்னைக் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

ரத்த குழாய் சுருள்கள்

என்னிடம் நடந்ததைக் கேட்டு அறிந்த மருத்துவர், என்னைப் படுக்கையில் படுக்கும் படி சொன்னார். நான் அணிந்திருந்த பேண்டை முட்டுக்கு மேலே தூக்கிவிட்டுக் காலைப் பரிசோதித்தவர், இந்த ரத்தக் குழாய்ச் சுருள்கள் எப்போதிருந்து இருக்கின்றன என்று கேட்டார். “நினைவில் இல்லை. அது ரொம்ப ஆண்டுகளாக உள்ளன” என்று சொன்னேன். “பயம் ஒன்றுமில்லை, உங்களுக்கு ‘வெரிகோஸ் வெயின்’ பிரச்சினை இருக்கிறது. காலில் ஏற்பட்டிருக்கும் எரிச்சலுக்கும் அதுவே காரணம்” என்றார். டாப்ளர் ஸ்கேன் எடுத்து வரும்படி சொல்லி, பரிந்துரைச் சீட்டை என்னுடைய கணவரிடம் நீட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘வெரிகோஸ் வெயின்’ என்றால் என்னவென்று அவரிடமே கேட்டேன்.

‘வெரிகோஸ் வெயின்’

“இதயத் துடிப்பால் ரத்தக்குழாய்கள் வழியாக உடல் முழுவதும் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் பாய்கிறது. இந்த ரத்தம் உடல் திசுக்களால் பயன்படுத்தப்பட்டு ஆக்சிஜனேற்றம் அடைந்த பின், மீண்டும் இதயத்தை நோக்கிப் பயணிக்கும். இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் உள்ள உறுப்புகளால், குறிப்பாகக் கால் பகுதியில் பயன்படுத்தப்பட்ட ரத்தம் மீண்டும் இதயத்துக்குச் செல்லும்போது, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கிச் செல்ல வேண்டும்.

இதற்கு உதவும் வகையில், ரத்தநாளங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகள் ஒருவழிப் பயணத்தை மட்டுமே அனுமதிக்கும். அதாவது, மேலே செல்லும் ரத்தத்தை மீண்டும் கீழ் நோக்கி வர அனுமதிக்காது. சில காரணங்களால், ரத்த நாளங்கள் தளர்ச்சி அடைந்து, அளவிலும் பெரிதாகும்.

இதனால், வால்வுகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளி அதிகரிக்கும். அப்போது மேலே செல்ல வேண்டிய ரத்தம் புவி ஈர்ப்பு விசை காரணமாக, கீழ் நோக்கிப் பயணிக்கத் தொடங்கும். கீழ்நோக்கிப்போகும் ரத்தம், ரத்தக் குழாயைச் சுருளச்செய்யும். இதனால், உங்கள் காலில் இருப்பதைப் போல் ரத்தக் குழாய்கள் புடைத்துக்கொண்டு பழுப்பு அல்லது நீல நிறத்தில் வெளியே தெரியும்” என்று மருத்துவர் விளக்கினார்.

அது யாருக்கு ஏற்படும்?

“எனக்கு ஏன் அது ஏற்பட்டது?” என்று கேட்டேன். “நீண்ட நேரம் நின்று பணி செய்கிறவர்கள், முதியவர்கள், உயரமாக இருப்பவர்கள், அதீத உடல்பருமன் கொண்டவர்கள், மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், சில கர்ப்பிணிகள் போன்ற வர்களுக்கு இந்தப் பிரச்சினை ஏற்படும் சாத்தியம் அதிகம்.

பரம்பரையாகவும் இது ஏற்படக்கூடும். பெரும்பாலும் இந்தப் பிரச்சினை பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு பெண். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். உடல்பருமன் வேறு உங்களுக்கு அதிகம். ‘வெரிக்கோஸ் வெயின்’ பாதிப்பு உங்களுக்கு ஏற்பட்டதற்கு இவையும் காரணங்களாக இருக்கலாம்” என்றார்.

திறந்தவழி அறுவைசிகிச்சை

மறுநாள் காலையிலேயே சென்று டாப்ளர் ஸ்கேன் எடுத்துவிட்டு, மீண்டும் வந்து எங்கள் மருத்துவரைச் சந்தித்தேன். அறிக்கையை நிதானமாகப் படித்தார். இந்தப் பாதிப்பு உங்களது காலில் ஐந்து இடங்களில் ஏற்பட்டு இருக்கிறது. ’லேசர் சிகிச்சை’ மூலம் இதை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்று சொன்னார்.

அந்த மருத்துவர், ‘வாஸ்குலர்’ அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால், ”உங்களது மருத்துவமனையிலேயே பண்ணிவிடலாம்தானே” என்று கணவர் கேட்டார். “லேசர் சிகிச்சை வசதி இங்கு இல்லை. இங்கே பண்ணுவதாக இருந்தால், திறந்த வழி அறுவைசிகிச்சை செய்ய வேண்டி நேரிடும். இந்த முறையில், பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய் உள்ளே ‘கதீட்டர்’ என்னும் மெல்லிய குழாயைச் செருகி, வெரிகோஸ் வெயின் முற்றிலுமாக உருவி வெளியே எடுக்கப்படும்” என்றார்.

எங்களுடைய மருத்துவரின் மேலிருந்த நம்பிக்கை காரணமாக, லேசர் சிகிச்சை வேண்டாம் என்று முடிவெடுத்து, அவரிடமே அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று தீர்மானித்தோம். என்னுடைய அம்மாவை அழைத்து, வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி சொன்னேன். மறுநாளே மருத்துவமனைக்குச் சென்றேன். எங்களுடைய விருப்பப்படி அறுவை சிகிச்சையை அவரே மேற்கொண்டார். இரண்டு மணிநேரம் அறுவைசிகிச்சை நடந்ததாக கணவர் கூறினார். அடுத்த மூன்று நாட்களில் நான் வீட்டை அடைந்துவிட்டேன்.

கைகளில் உள்ளது மகிழ்ச்சி

மூன்றாண்டுகள் ஓடி விட்டன. மருத்துவரின் அறிவுரைப்படி, நீண்ட நேரம் நிற்பதில்லை. நிற்கும்போதும், வேலை செய்யும்போதும் காலுக்கு ‘ஸ்டாக்கிங்ஸ்’ (Stockings) போட்டுக்கொள்கிறேன். தூங்கும்போது கால்களைத் தலையணையின் மீது வைத்துக்கொள்கிறேன்.

முக்கியமாக, தினமும் தவறாமல் உடற்பயிற்சிசெய்து, எனது எடையை வெகுவாகக் குறைத்துவிட்டேன். வெரிகோஸ் வெயின் பிரச்சினை இன்று என்னைவிட்டு முற்றிலும் அகன்றுவிட்டது. ரத்தக் குழாயின் சுருள்களை மட்டுமல்ல; வாழ்வின் முடிச்சுகளையும் அகற்றுவது நமது கைகளில்தான் உள்ளது!

கட்டுரையாளர் தொடர்புக்கு: shubasrikanth@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x