Last Updated : 01 Aug, 2015 03:01 PM

 

Published : 01 Aug 2015 03:01 PM
Last Updated : 01 Aug 2015 03:01 PM

வீடுகளில் புற்றுநோயை வளர்க்கிறோமா?

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிவைத்து, தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவு எடுத்துச் செல்கிறீர்களா? வயல்-தோட்டங்களுக்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைக் கையாளுபவரா? வீடுகளில் தொட்டதற்கெல்லாம் கிருமிநாசினியால் சுத்தம் செய்பவரா? அப்படியானால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், உங்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதை ஒருவர், இருவர் அல்ல, 28 நாடுகளைச் சேர்ந்த 174 விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள்.

மூடநம்பிக்கை

உடலை உருக்குலைத்து உயிருக்கு உலை வைக்கும் புற்றுநோய், பலருக்கும் மரணத்தையும் வரவழைத்துவிடுகிறது. இன்றைக்குச் சர்வசாதாரணமாக மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய் எப்படி வருகிறது? சுற்றுச்சூழல் சீர்கேடு, புகைப் பழக்கம், புகையிலை பயன்பாடு மூலம் வருகிறது என்றுதான் உடனடியாகப் பதில் வரும்.

இவை மட்டும்தான் காரணமா? இல்லவே இல்லை. வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள்.

புதிய காரணிகள்

என்னென்ன பொருட்கள் அப்படிப் புற்று நோயை உண்டாக்குகின்றன? அவை பல்வேறு வடிவங்களில் மருந்துகளாக, ரசாயனங்களாக, பிளாஸ்டிக்குகளாக, பூச்சிக்கொல்லிகளாக, கிருமி நாசினிகளாக நம்மைச் சுற்றி இருக்கின்றன. இந்த கருதுகோளை மையமாக வைத்துத்தான் மருத்துவ விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

பூச்சிக்கொல்லிகளில் இருந்து பிளாஸ்டிக் சேர்ப்பான்கள் வரையிலான பொருட்கள் புற்றுநோய்க்கு எப்படிக் காரணமாகின்றன என்பது தொடர்பான இந்த ஆய்வில், இந்திய விஞ்ஞானிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். உலகச் சுகாதார நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆய்வு, நம்முடைய வீட்டைச் சுற்றிப் புற்றுநோய் காரணிகள் எப்படி உள்ளன என்பதைப் புட்டுப்புட்டு வைக்கிறது.

நம்மைச் சுற்றி

விஞ்ஞானிகள் 85 ரசாயனங்களை ஆய்வு செய்ததில் 11 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 50 ரசாயனங்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அம்சங்கள் குறைந்தளவு இருப்பதாகவும், 13 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தொடக்க நிலை காரணிகளைப் பெற்றிருப்பதாகவும், எஞ்சிய 22 ரசாயனங்களில் மட்டும் புற்றுநோயை உண்டாக்கும் வீரியம் இல்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சரி, எந்த ரசாயனங்கள், சேர்ப்பான்கள் மூலம் புற்றுநோய் வருகிறது?

பூச்சிக்கொல்லிகள், காளான் கொல்லிகள், பிளாஸ்டிக்குகளில் கலக்கப்படும் சேர்ப்பான்கள், பி.வி.சி., பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் உணவு டப்பாக்கள் செய்யப் பயன்படும் பாலி கார்பனேட் பொருட்கள், கிருமிநாசினிகள், ஒப்பனை பொருட்கள் செய்யப் பயன்படும் ரசாயனங்கள், வலி நிவாரண மருந்துகள் செய்யப் பயன்படும் அசிட்டமினாஃபென் மற்றும் பீனோபார்பிட்டால் பொருட்கள், கட்டுமானம் மற்றும் பெயிண்ட்களில் உள்ள தீப்பிடிக்கும் பண்பு கொண்ட பொருட்கள், கறையை நீக்க உதவும் ரசாயனம் போன்ற அனைத்துமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வல்லமை படைத்தவை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

புதிய கண்டுபிடிப்பு

அதேநேரம், மேற்சொன்ன பொருட்கள் எல்லாமே புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் என ஆணித்தரமாகச் சொல்ல முடியாது என்கிறார் லண்டன் புருனல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஹெமாத் யசாய் விளக்கமும் அளித்துள்ளார். புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆரம்பக் கட்டக் காரணிகள், இந்தப் பொருட்களில் இருப்பது பற்றி நிரூபிப்பதற்குக் கூடுதல் ஆய்வு நடத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது இன்னொன்றைக் கண்டுபிடித்தது குறித்து விஞ்ஞானிகள் வியப்பு தெரிவித்துள்ளார்கள்.

அதாவது பிளாஸ்டிக் சேர்ப்பான்களில் உள்ள ரசாயனங்கள், சோப்புகள், பற்பசைகள், சுத்தம் செய்ய உதவும் கிருமிநாசினிகளில் சேர்க்கப்படும் ரசாயனக் கலவை போன்றவை மனித உடல்நலனில் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சேர்மானங்களைக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. இந்த ஆய்வின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் நம் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துச் சந்தேகம் எழலாம். இதுபற்றி அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலி மற்றும் சார்பியல் சிறப்பு மருத்துவர் அசார் ஹுசேனிடம் கேட்டோம்.

நம்மைச் சுற்றி

“சுற்றுச்சூழலில் உள்ள புற்றுநோயைத் தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் (கார்சினோஜென்) புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணம். ஆஸ்பெஸ்டாஸ், கார்பன், கரி பொருட்கள், புகை ஆகியவற்றுக்குக் கார்சினோஜென் தன்மை உண்டு. இன்றைக்குச் செயற்கை தயாரிப்புகள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் பெருகிவிட்டது.

உணவு வகைகள் பார்ப்பதற்கு ஆசையைத் தூண்ட வைக்க வேண்டும் என்பதற்காக வண்ணக் கலவைகள் சேர்க்கப்படுகின்றன. மேலும், ருசியைக் கூட்டும் கலவையும் சேர்க்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படங்கள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் புற்றுநோய் வரக்கூடும் என்றும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

பிளாஸ்டிக் வேண்டாம்

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக் கலன்களில் தண்ணீர், உணவை எடுத்துச் செல்கிறார்கள். பிளாஸ்டிக்குக்குத் தரக் கட்டுப்பாடு இருக்கிறது. அதன்படிதான் பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதா என்பது சந்தேகம்தான். நாம் வாங்கும்போதும், தரக் கட்டுப்பாட்டைப் பரிசோதித்து வாங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை வெயிலில் வைத்துப் பயன்படுத்துவதும், தொடர்ந்து அதைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பதும் கூடாது.

பிளாஸ்டிக் வினை புரியும் தன்மை கொண்டது. தண்ணீருடனோ, சாப்பாட்டுடனோ வினைபுரிந்து, அதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது. ரசாயனப் பயன்பாடுகளைக் குறைத்துக்கொள்வதும் ஆரோக்கியத்தைக் காக்கும்" என்கிறார் அசார் ஹுசேன்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு காலத்தில் புற்றுநோய் தாக்கியவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. வயதானவர்களைத் தாக்கும் நோயாகவே, அது கருதப்பட்டது. இன்றோ அந்த நிலை இல்லை. ஏழை, பணக்காரர், சிறார், பெரியவர்கள் என வேறுபாடு இல்லாமல் பரவலாக மக்களைத் தாக்கும் நோயாக மாறிவிட்டது.

அடுத்த 20 ஆண்டுகளில், புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் முடிச்சு போட்டுப் பார்க்கும்போது, நம் வீட்டைச் சுற்றியே புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களை நாம் வளர்க்கிறோமோ என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியிருக்கிறது. இந்தக் காரணிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பும் பொறுப்பும் நமக்கு மட்டும்தான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x