Published : 04 Jan 2020 10:56 AM
Last Updated : 04 Jan 2020 10:56 AM
கனி
நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியமிருக்காது என்பது புகழ்பெற்ற பழமொழி. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், ஆப்பிளைச் சில உணவுப் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிடும்போதும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும்போதும் இன்னும் கூடுதல் நன்மைகள் தருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீரும் ஆப்பிளும்
‘கிரீன் டீ’யுடன் ஆப்பிளைச் சேர்த்து சாப்பிடும்போது, இரண்டிலும் இருக்கும் ஆக்ஸிஜெனேற்றத் தடுப்பான்கள் சேர்ந்து ‘வாஸ்குலர் எண்டோதெலியல் வளர்ச்சிக் காரணி’ (VEGF) என்ற மூலக்கூற்றைத் தடுக்கின்றன. புதிய ரத்த நாளங்கள் அல்லது ‘ஆன்ஜியோஜெனிஸிஸ்’ உருவாக்கத்துக்கு இந்த மூலக்கூறுதான் காரணம். இந்த ஆன்ஜியோஜெனிஸிஸ், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதற்குக் காரணமாக இருக்கின்றன. கிரீன் டீயுடன் ஆப்பிளைச் சேர்த்து சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவும்.
ஷாப்பிங் செல்வதற்கு முன் ஆப்பிள்
உணவுப் பொருட்களை வாங்க செல்வதற்கு முன் ஆப்பிள் ஒன்றைச் சாப்பிட்டுவிட்டுச் செல்வது சிறந்தது என்று சொல்கின்றனர் கோர்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பான ஓர் ஆராய்ச்சியில், உணவுப் பொருட்கள் அங்காடிக்குச் செல்வதற்கு முன், 120 பேரில் சிலருக்கு ஆப்பிளும், சிலருக்கு குக்கீஸும், சிலருக்கு எதுவும் கொடுக்காமலும் அனுப்பியிருக்கின்றனர். ஆப்பிள் சாப்பிட்டுவிட்டுக் கடைக்குச் சென்றவர்கள், மற்றவர்களைவிட 28 சதவீதம் அதிகமான பழங்கள், காய்கறிகளை வாங்கியிருந்தது இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது.
மதிய உணவுக்குப் பின் ஆப்பிள்
மதிய உணவுக்குப் பின்னான இடைவேளையில் ஆப்பிள் சாப்பிடுவது சிறந்தது. ஆப்பிள்களில் ‘பெக்டின்’ என்ற கரையும் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து உங்கள் வயிற்றை நிரப்பும் ஆற்றல் கொண்டது. வயிறு நிரம்பியிருப்பதால், உடலின் ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கும். அது இன்சுலின் சுரப்பையும் மேம்படுத்த உதவும். மாலை நேரத்தில் தேவையற்ற சக்கை உணவு சாப்பிடுவதையும் இது தவிர்க்க உதவும்.
சாக்லெட்டும் ஆப்பிளும்
சாக்லெட்டுடன் ஆப்பிளைச் சேர்த்து சாப்பிடுவது உங்கள் ரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவும். ஆப்பிளில் குவர்செடின் (quercetin) என்ற ஃபிளவனாய்டு உள்ளது. அதேபோல், சாக்லெட்டில் கேட்டெச்சின் (catechin) என்ற ஃபிளவனாய்டு அதிக அளவில் உள்ளது. இந்த குவர்செடின், கேட்டெச்சின் ஆகிய இரண்டும் சேரும்போது, அது ரத்த உறைவையும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆரஞ்சு, ஆப்பிள்
ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய இரண்டு பழங்களும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். இந்த இரண்டு பழங்களில் இருக்கும் குறிப்பிட்ட ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களைப் பாதுகாக்கும். வாழைப்பழத்திலும் இந்தத் தன்மை இருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் ஆகிய மூன்று பழங்களும் மூளை பாதிப்படைவதிலிருந்து தடுக்க உதவுகின்றன. அல்சைமர் நோய் போன்ற பாதிப்பு ஏற்படுவதைவும் தடுக்கின்றன.
அன்றாடம் ஒரு ஆப்பிள்
அன்றாடம் ஒரு ஆப்பிள் சாப்பிடுதால் பக்கவாதத்தைத் தடுக்க முடியும். பழங்கள், காய்கறிகள் உட்கொள்ளும் பழக்கத்தைப் பத்து ஆண்டுகளுக்கு 20,069 மனிதர்களிடம் டச்சு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். அன்றாடம் 25 கிராம் வெள்ளை நிறப் பழங்கள், காய்கறிகள் (ஆப்பிள், வெங்காயம், பேரிக்காய், காளான்) ஆகியவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்குப் பக்கவாதப் பாதிப்பு 9 சதவீதம் குறைந்ததாக இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT