Published : 14 Dec 2019 10:44 AM
Last Updated : 14 Dec 2019 10:44 AM

சிகிச்சை டைரி: தீராத ஒற்றைத் தலைவலி

முகமது ஹுசைன்

தலைவலியை ஒரு பிரச்சினையாக உணரும்போது எனக்கு 15 வயது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்ற காலகட்டம் அது. அறிவியல் பரீட்சைக்கு மும்முரமாகப் படித்துக்கொண்டு இருந்தேன். திடீரென்று தலையைப் பிளக்கும் வலி ஏற்பட்டது.

இடப்புறக் கண் இமையின் மேல் யாரோ சுத்தியலால் அடிப்பது போன்று ‘விண்விண்’ என்று வலித்தது. பின் மண்டைவரை வலித்தது. புத்தகத்தைப் பார்க்க முடியவில்லை. படிக்க முடியவில்லை. தேர்வுக்குப் படிக்க முடியவில்லையே என்ற இயலாமையில் அழத் தொடங்கினேன்.

அம்மா கொடுத்த மாத்திரை

தலைவலி அம்மாவுக்கு அடிக்கடி வரும் என்பதால், “தலைவலிக்கா இப்படி அழுகிற?” என்று சிரித்தபடியே ‘மெட்டாசின்’ மாத்திரையை அம்மா எனக்குக் கொடுத்தார். மாத்திரை போட்ட 30 நிமிடங்களில் தலைவலி காணாமல் போனது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மாத்திரை எடுத்துக்கொண்டால், தலைவலி போய்விடும் என்பது மனத்தில் ஆழமாகப் பதிந்துபோனது.

அதன் பின்னர், தலைவலி வரும்போது எல்லாம் ‘மெட்டாசின்’ எடுத்துக்கொள்வது வாடிக்கையானது. +2வரை இரண்டு மாதத்துக்கு ஒருமுறையோ மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ வந்த தலைவலி, கல்லூரியில் படிக்கும்போது மாதத்துக்கு ஒருமுறை வரத் தொடங்கி யது. 30 நிமிடங்களில் தலைவலியைப் போக்கிய ‘மெட்டாசின்’ மாத்திரை, ஒரு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளத் தொடங்கியது. கல்லூரி இறுதியாண்டில், தலைவலியைப் போக்க மிகவும் சிரமப்பட்ட ‘மெட்டாசின்’, இறுதியில் வேலைசெய்வதை நிறுத்திக்கொண்டது.

எனக்கு மைக்ரேன்

கல்லூரி மருத்துவரிடம் சென்றபோது, “உனக்கு மைக்ரேன் உள்ளது” என்று சொன்னார். ‘மைக்ரேன்’ என்ற வார்த்தையை அப்போதுதான் கேள்விப்பட்டேன். இன்று போல் அன்று ‘இண்டர்நெட்’ வசதி இல்லை என்பதால், அவரிடமே அப்படியென்றால் என்னவென்று கேட்டேன். “மைக்ரேன் என்றால் ஒற்றைத் தலைவலி. அது எதற்கு வருகிறது, எப்படி வருகிறது, எப்போது வரும் என்பதை எல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாது.

தலைவலி வந்தால் அதைத் தாங்கிக்கொள்வது மட்டுமே ஒரே வழி” என்று சொல்லி, ‘காம்பிஃபிளாம்’ மாத்திரையை எனக்குப் பரிந்துரைத்தார். தொடக்கத்தில் தலைவலியைக் குணப்படுத்திய அந்த மாத்திரை, ஆறே மாதங்களில் வேலைசெய்வதை நிறுத்திக்கொண்டது. அந்த நேரத்தில்தான், தலைவலியுடன் வாந்தியும் வரத் தொடங்கியது.

சித்தியின் தோழி கொடுத்த மாத்திரை

சித்தியின் தோழி ஒருவர் மருத்துவராக இருக்கிறார். அவர் எனது வீட்டுக்கு வந்திருந்தபோது, ‘ஐபுஜெசிக்’ மாத்திரையை எனக்குப் பரிந்துரைத்தார். ‘பாரசிட்டமாலுடன் ‘கஃபைன்’ கலந்தது ‘காம்பிஃபிளாம்’ என்றால், ‘பாரசிட்டமால்’ உடன் ‘காஃபைன்’, ‘புருஃபென்’ கலந்தது ‘ஐபுஜெசிக்’. இந்த மாத்திரை தலைவலிக்கு நல்ல தீர்வை அளித்தபோதும், மாத்திரையைப் போட்டவுடன் வயிற்றில் எரிச்சலும் ஏற்பட்டது.

நாளடைவில் அந்த மாத்திரையால் எனக்கு அல்சரும் ஏற்பட்டது. வயிற்று வலியைக்கூடத் தாங்கிக்கொள்ளலாம், தலைவலியைத் தாங்க முடியாது என்பதால், ‘ஐபுஜெசிக்’ மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள், தலைவலிக்குத் தீர்வாக இந்த மாத்திரை மட்டுமே இருந்தது. பின்னர், அந்த மாத்திரையும் தலைவலியைக் குணப்படுத்தத் தவறியது.

தடைசெய்யப்பட்ட மருந்துகள்

கோயம்புத்தூரில் வசித்தபோது, அங்குள்ள மருத்துவர், எனக்கு ‘வாசோ கிரைன்’ மாத்திரையைப் பரிந்துரைத்தார். அந்த மாத்திரை நல்ல தீர்வை அளித்தாலும், குமட்டல், தலைசுற்றல் உள்ளிட்ட அசௌகரியங்களையும் ஏற்படுத்தியது. அந்த மாத்திரையை ஓராண்டு பயன்படுத்தி இருப்பேன் என்று நினைக்கிறேன். அபாயகரமான பக்கவிளைவுகள் காரணமாக அந்த மாத்திரையின் விற்பனைக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது. பின்னர் அந்த மாத்திரைக்கு இணையான ‘மைக்ரனில்’ மாத்திரையைப் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால், ஆறு மாதங்களுக்குள் அந்த மாத்திரையின் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது.

மருத்துவரின் கற்பனை

நண்பரின் அறிவுரையின் பேரில், தூத்துக்குடியிலிருந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவரைச் சந்தித்தேன். எல்லாப் பரிசோதனைகளையும் எடுத்துப் பார்த்தார். தலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனையும் எடுத்துப் பார்த்தார். எல்லா முடிவுகளும் நார்மலாகவே இருந்தன. பேசிக்கொண்டிருக்கும்போது சிறுவயதில் எனக்கு ‘பிரைமரி காம்பிளாக்ஸ் (காசநோய்)’ இருந்தது என்றேன்.

உடனே, காசநோய்க்கான ‘மாண்டோ’ டெஸ்ட் எடுக்கும்படி சொன்னார். மறுநாள் அவரைப் பார்க்கச் செல்லும்போது, பரிசோதனை ஊசி போட்ட இடம் சற்று வீங்கியிருந்தது. அதைப் பார்த்தவுடன், அவருக்கு எதையோ கண்டுபிடித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. “சைனஸில் காசநோய் தொற்று ஏற்பட்டிருக்கு. அதனால்தான் உனக்குத் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது’ என்று சொன்னபடியே, காசநோய்க்கான சிகிச்சையை ஆரம்பித்தார். எனக்கு என்னவோ அவரின் விளக்கம் சற்று உறுத்தலாகவே இருந்தது.

வழிகாட்டிய நண்பர்

தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்ததும், மருத்துவராக இருக்கும் என் நண்பரைச் சந்தித்து நடந்ததைக் கூறினேன். அவர் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார். எது எப்படியோ, அது ஒரு நல்ல கற்பனை என்று சொல்லி மீண்டும் சிரித்தார். அப்படியானால், கையில் ஏன் வீக்கம் ஏற்பட்டது என்று கேட்டேன். ‘மாண்டோ’ டெஸ்டின் முடிவுகளை நாம் முழுவதும் நம்ப முடியாது. ஒருமுறை காசநோய் ஏற்பட்டால், அதன்பின்னர் எப்போது இந்தப் பரிசோதனையை எடுத்தாலும், பெரும்பாலும் அது பாஸிட்டிவாகவே இருக்கும் என்று சொன்னவன், எனது திருப்திக்காகக் காசநோய் பரிசோதனைகளை எடுத்து வரச் சொன்னான்.

அந்தப் பரிசோதனை முடிவு கள் எல்லாம் நெகட்டிவாகவே இருந்தன. பின்பு, அண்ணா நகரிலிருந்த ஒரு நரம்பியல் மருத்துவரிடம் என்னை அனுப்பிவைத்தான். நரம்பியல் மருத்துவர், ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட எல்லாப் பரிசோதனை ரிப்போர்ட்டுகளையும் வாங்கிப் பார்த்தார். பின்பு கண்ணைப் பரிசோதித்தார். கண் பரிசோதனைக்கும் எழுதிக்கொடுத்தார். கண்ணின் பவர் நார்மலாகவே இருந்தது. பின்பு, என்னைப் பார்த்து ‘இது சாதாரண மைக்ரேன் தலைவலிதான். பயப்படத் தேவை இல்லை’ என்று சொன்னார். அது ஏன் ஏற்படுகிறது என்று அவரிடம் கேட்டேன்.

மைக்ரேன் ஏன் எற்படுகிறது?

“மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகளின் சுவர் ஏதோ ஓர் ஒவ்வாமை காரணமாகத் தடித்துவிடும். இதனால், அந்த நரம்புகளின் விட்டம் குறுகிவிடும். நரம்புக் குழாயின் அளவு சிறுத்துவிடுவதால், அதன்வழியே செல்லும் ரத்தம் மிகுந்த சிரமத்துடன், முட்டி மோதிச் செல்லும். இதன் காரணமாகத்தான் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

நீங்கள் நன்கு யோசித்துப் பார்த்தால், ஒற்றைத் தலைவலி எப்போதும் ஒரே இடத்தில் ஏற்படாது. அதாவது, ரத்த ஒட்டம் எங்கே தடைபடுகிறதோ அங்கேதான் இந்தத் தலைவலி ஏற்படும். பொதுவாக, இந்த வலி, ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், ஒரு பகுதி முழுவதும் பரவியிருக்கும்” என்று சொன்னார்.

அவர் சொல்வது எனக்குச் சரியென்று பட்டது. பின்பு, மூளைக்குச் செல்லும் நரம்பை இளக வைக்கும் முயற்சியில், வலிப்பு நோய்க்குக் கொடுக்கக்கூடிய மருந்தில் குறைந்த அளவை எனக்குப் பரிந்துரைத்தார். “மூன்று மாதங்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள். வலி சரியாகிவிட்டால் உங்கள் அதிர்ஷ்டம். இல்லையென்றால், வலியுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள்” என்று சொன்னபடி மருந்துச் சீட்டைக் கையில் நீட்டினார். மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எனக்குத் தலைவலி மீண்டும் வரத் தொடங்கியது.

தலைவலிக்கு ஊசியா?

ஒருமுறை வந்த தலைவலி, மயக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வீரியத்துடன் இருந்தது. அருகிலிருந்த ஒரு மருத்துவரிடம் சென்றேன். அவர் முதன்முறையாக, ‘ஓவிரான்’ ஊசியைப் போட்டார். பின்பு வலி போகும்வரை வெளிச்சத்தைப் பார்க்காமல், கண்ணைக் கட்டி படுக்கும்படி செய்தார். பத்தே நிமிடங்களில் தலைவலி பறந்துபோனது. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதன் பின்னர், ஓவிரான் மட்டுமே தலைவலிக்கான தீர்வு என்று ஆனது.

எந்த ஊருக்குச் சென்றாலும், ஓவிரான் ஊசியைக் கையோடு எடுத்துச் செல்ல தொடங்கினேன். ஒவிரான் போடக் கூடாது, அது கிட்னியைப் பாதிக்கும் என எனக்கு அந்த ஊசியைப் போடுவதற்கு முன் மருத்துவர்கள் தவறாமல் சொல்வார்கள். கிட்னி பயத்தில், சில மாதங்கள், சித்த மருத்துவம் எடுத்துப் பார்த்தேன், ஹோமியோபதி மருத்துவம் எடுத்துப் பார்த்தேன், யுனானி மருத்துவமும் எடுத்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப் பலனளிக்கவில்லை. ஓவிரான் மட்டுமே எனக்குப் பலன் அளித்தது.

ஓடினால் ஓடுமா தலைவலி?

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, உடலின் எடையைக் குறைப்பதற்காக, ஜாக்கிங் செய்யத் தொடங்கினேன். ஒரு நாளைக்கு ஒரு கிலோமீட்டர் எனத் தொடங்கிய ஜாக்கிங், ஆறே மாதத்தில், ஒரு நாளைக்கு 14 கி.மீ. என உயர்ந்தது. ஜாக்கிங் எனது பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தது. வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தியது. நேரத்துக்குச் சாப்பிடத் தொடங்கினேன். நேரத்துக்குத் தூங்கத் தொடங்கினேன்.

உடலின் எடையும் 25 கிலோ அளவுக்குக் குறைந்தது. முக்கியமாக. ஜாக்கிங் செல்லத் தொடங்கிய அன்றிலிருந்து எனக்குத் தலைவலியே ஏற்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எனக்குத் தலைவலியே வரவில்லை. இப்போது ஜாக்கிங் செல்வதில்லை. மீண்டும் தலைவலி. மீண்டும் ஓவிரான். ஆனால், ஜாக்கிங் சென்றால், தலைவலி போய்விடும் என்ற நம்பிக்கை மட்டும் இன்றும் உள்ளது.

தொடர்புக்கு:
mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x