Published : 14 Dec 2019 10:09 AM
Last Updated : 14 Dec 2019 10:09 AM

மருத்துவம் தெளிவோம் 13: உயிரை மீட்கும் முக்கிய உதவி!

டாக்டர் கு. கணேசன்

விபத்தாலோ நோயாலோ பாதிக்கப்பட்டு சுயநினை விழந்த ஒருவருக்குச் சுவாசமும் இதயத் துடிப்பும் நின்றிருந்தால், அந்த நபருக்குச் சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் மீட்கும் வகையில் தரப்படும் அவசர முதலுதவிக்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை’ (Cardio Pulmonary Resuscitation - CPR) என்று பெயர். குடும்பத்தில் குறைந்தது ஒருவராவது இந்த முதலுதவியைத் தெரிந்துவைத்திருப்பது அவசரத்துக்கு ஆருயிர் காக்க உதவும்.

இந்த உயிர் மீட்புச் செயல்முறையில் வாய்மீது வாய் வைத்து மேற் கொள்ளப்படும் செயற்கை சுவாச முறையும், மீண்டும் மீண்டும் மார்பை அழுத்தி இதயத் துடிப்பையும், அதன் பலனாக ரத்த ஓட்டத்தையும் தூண்டும் செயல்முறையும் அடங்கும். சுயநினைவிழந்தவர் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு முன்னர், அவருடைய இதயத்துக்கும் மூளைக்கும் இதர முக்கிய உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் கிடைத்து, இதயம் மீண்டும் இயங்குவதற்கு இந்த முதலுதவி முறை உதவுகிறது.

உயிரை மீட்கும் முதலுதவி – பொதுவான செயல்முறை

இளம் வயது கடந்த ஆண், பெண் இருபாலருக்கும் செய்யப்படும் முதலுதவி முறை இது. முதலில், பயனாளியின் உடல்நிலையை ஆராய வேண்டும். முக்கியமாக, சுவாசப் பாதை சரியாக உள்ளதா அல்லது தடைபட்டுள்ளதா என்பதையும், நாடித் துடிப்பு சீராக உள்ளதா அல்லது சீர்கெட்டுள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். சுவாசமும் நாடித் துடிப்பும் சீர்கெட்டிருப்பது உறுதி யானால், ‘இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை’யைத் தொடங்க வேண்டும்.

கைக்குழந்தைகளுக்கான செயல்முறை

குழந்தை பிறந்து 28 நாட்கள் ஆனவர்களை ‘பச்சிளம் குழந்தைகள்’ (Neonates) என அழைக்கிறோம். பச்சிளம் குழந்தைகள் ஏதாவது ஓர் அந்நியப் பொருளை விழுங்கிவிடும். அது தொண்டைக்குழியில் சிக்கி சுவாசத்தை நிறுத்திவிடும். இம்மாதிரியான பச்சிளம் குழந்தைக்கு முதலுதவி மேற்கொள்ள வேண்டுமானால், மீட்பாளர் தன் இடது உள்ளங்கையால் அக்குழந்தையைத் தலைகீழாகத் தாங்கிக்கொண்டு, அதன் முதுகில் மீட்பாளரின் வலக் கையால் 15 முறை தட்ட வேண்டும். இவ்வாறு மொத்தம் ஐந்து சுழற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஒரு கைக்குழந்தைக்கு இதை மேற்கொள்ளும்போது, முதலுதவி செய்பவர் தன்னுடைய வாயைக் குழந்தையின் வாயிலும் மூக்கிலும் வைத்து ஊதி செயற்கை சுவாசம் தர வேண்டும். பச்சிளம் குழந்தையின் மார்பை அழுத்தி இதய அழுத்தம் தருவதற்கு இரண்டு விரல்களை மட்டும் (ஆட்காட்டி விரல், நடுவிரல்) பயன்படுத்தினால் போதும். ஐந்து சுழற்சிகள் இதய அழுத்தம் கொடுத்துவிட்டு, ஒரு சுழற்சி செயற்கை சுவாசம் தர வேண்டும். குழந்தையின் மார்பு 2 செ.மீ. அளவுக்குக் கீழே செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கான செயல்முறை

எட்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு இதைச் செய்யும்போது, பெரியவர்களுக்கு மேற்கொள்வதுபோல், முதலுதவி செய்பவர் குழந்தையின் மூக்கை விரல்கள் கொண்டு மூடி, குழந்தையின் வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை வலுவாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும். ஏற்கெனவே பெரியவர்களுக்குச் சொன்ன முறைப்படி இதய அழுத்தம் கொடுக்க வேண்டும். 15 முறை இதய அழுத்தம் கொடுத்துவிட்டு, இரண்டு சுழற்சிகள் செயற்கைச் சுவாசம் தர வேண்டும். குழந்தையின் மார்பு 3 செ.மீ. அளவுக்குக் கீழே செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

யாருக்கு இது தேவை?

விபத்துகள் மூலம் அடிபட்டு மயக்கத்தில் உள்ளவர்கள், மாரடைப்பு போன்ற இதய நோய்களால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி மயக்கமானவர்கள், அந்நியப் பொருட்கள் அடைத்துக்கொள்வது, உணவு புரையேறுவது, கழுத்து நெரிக்கப்படுவது, நச்சுப் புகை போன்ற காரணங்களால் சுவாசத் தடை ஏற்பட்டவர்கள், அதிர்ச்சி நிலை, மருந்து ஒவ்வாமை, மின் விபத்து, நுரையீரல் நோய்கள் போன்றவற்றின் காரணமாக மயக்கம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு ‘இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை’ தேவைப்படும். இதைக் கொஞ்சமும் தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும். விபத்துகளும் இதயநோய்களும் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில் இதைப் பள்ளிப் படிப்பிலிருந்தே பாடத்திட்டத்தில் சேர்த்துக் கற்பித்தால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காக்கப்படுவது உறுதி.

இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை

1 பயனாளியைச் சமதளத்தில் மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்குச் சுவாசமும் இதயத் துடிப்பும் திரும்பும் அறிகுறிகளை அறிய இயலும்.

2 பயனாளியின் தலையை, அவரின் தாடையை மேல்நோக்கித் தள்ளுவதன் மூலம் நிமிர்த்த வேண்டும். ஒரு கையால் தாடையை நிமிர்த்தும்போது, மற்றொரு கையால் முன்நெற்றியைக் கீழ்நோக்கித் தள்ள வேண்டும். கழுத்து எலும்பிலோ முதுகெலும்பிலோ முறிவு இருக்கலாம் என ஐயம் இருந்தால், இந்த முறையில் தலையைப் பின்னோக்கித் தள்ள வேண்டாம். பதிலாக, இரு கன்னங்களிலும் இரு கைகளை வைத்து அழுத்தித் தாடையைத் தள்ள வேண்டும்.

3 பயனாளியின் வாயைத் துடைத்துச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். மூக்குத் துளைகளை வெளிப்பக்கமாக விரல்கள் கொண்டு அழுத்தி மூடிக்கொள்ள வேண்டும். அவரது வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்துக் காற்றை வலுவாக ஊதி உள்ளே செலுத்த வேண்டும். இதனால், அவரது மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இப்படி நிமிடத்துக்கு 10 முறை ஊத வேண்டும். இது ஒரு சுழற்சி.

4 சுவாசத்துக்கு வழிசெய்யும் அதேநேரத்தில் இதயத் துடிப்புக்கும் வழிசெய்ய வேண்டும். அந்த நபரின் நடு மார்பில் முதலுதவி செய்பவரின் உள்ளங்கைகளை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து, மார்பைப் பலமாக அழுத்த வேண்டும். சுமார் 5 செ.மீ. வரை மார்பைக் கீழே அழுத்த வேண்டும்.

நிமிடத்துக்கு 100லிருந்து 120 முறை வேகமாக அழுத்துவது ஒரு சுழற்சி என்ற கணக்கில் மொத்தம் 20 சுழற்சிகள் இவ்வாறு வேகமாக அழுத்த வேண்டும். சுவாசமும் இதயத் துடிப்பும் திரும்பும் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் இடையிடையே கவனித்துக்கொள்ள வேண்டும்.

5 இதய அழுத்தம் 20 முறை கொடுத்துவிட்டு, இரண்டு முறை செயற்கை சுவாசம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்குச் சுவாசமும் நாடித் துடிப்பும் திரும்பும்வரை இதைத் தொடர வேண்டும். அதே நேரத்தில் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

முதலுதவி செய்வதற்கு இருவர் இருந்தால், ஒருவர் செயற்கை சுவாசத்தையும், அடுத்தவர் இதய அழுத்தம் கொடுப்பதையும் மேற்கொள்ளலாம். இப்படி முதலுதவி கொடுப்பவர்கள் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை தங்கள் செய்முறைகளை மாற்றிக்கொண்டால் சோர்வு ஏற்படாது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x