Published : 14 Dec 2019 09:28 AM
Last Updated : 14 Dec 2019 09:28 AM

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும்

ஆசாத்

மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது.

இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது:

மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்

* அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு.
* பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பும் இதயநோயும் ஏற்படும்.

மதுவால் உண்டாகும் மனநலக் கோளாறுகள்

* மதுவுக்கு அடிமையானவர்கள் சிந்திக்கும் திறனை இழப்பார்கள்.
* மனச்சோர்வு, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
* மூளைச் சிதைவு ஏற்படும்.

மதுவால் உண்டாகும் பிரச்சினைகள்

* மதுபோதையால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் நேரும் சாலை விபத்து இதற்குச் சான்று.
* சிந்திக்கும் திறனை இழப்பதால், ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாது.
* பெரும்பாலான நேரத்தில் தேவையற்ற சிந்தனைகளால் தூண்டப்பட்டு, வாதங்கள், சண்டையில் ஈடுபடுவீர்கள்.
* மதுவுக்கு அடிமையானவர்கள் வேலைக்குச் செல்லாமல் மதுபானத்தைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். இதனால் பணப்பிரச்சினைகள், உறவு முறிவு, தொழிலில் * பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுதல் போன்றவை நிகழக்கூடும்.

எச்சரிக்கை அறிகுறிகள்

* குடிப் பழக்கத்தை மறந்து இயல்பாக இருக்க முடியாத நிலை
* மது அருந்திய சில மணி நேரத்தில் வியர்வை, நடுக்கம், மனப்பதற்றம் உள்ளிட்டவை ஏற்படுதல்
* போதை நிலை அடைய அதிக அளவு மது அருந்துவது.
* குடிப் பழக்கத்தை நிறுத்துவது என்பது முடியாமல் போவது.
* வேலை, குடும்ப நிலை, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய எண்ணங்கள் இன்றி மது அருந்துவது.
* வேலை நேரத்திலும் குடிப்பது.
* அதிகாலையிலோ எழுந்தவுடனோ மது அருந்துவது.
* ஞாபக மறதியால் மதுபோதையில் என்ன நடந்தது என்று நினைவில் இருக்காது.

குடிப் பழக்கத்தை மாற்றும் வழிகள்

* மது அருந்துவதால் பிரச்சினை உள்ளது என்பதை உணர்வதும், ஏற்றுக்கொள்வதும்.
* குடிப்பழக்கத்தை மாற்ற உதவி பெறுதல்.
* ஒருமுறை மாற்றங்கள் செய்யத் தொடங்கிய பின் அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
* மனநல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசித்து மதுப் பழக்கத்தைக் கைவிடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
* சுய உதவிக் குழுக்கள் ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள்.
* மதுப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கையாள மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் உதவியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x