Published : 07 Dec 2019 10:52 AM
Last Updated : 07 Dec 2019 10:52 AM

அச்சுறுத்தும் ஆன்டிபயாட்டிக் எதிரப்பு

சுபா ஸ்ரீகாந்த்

சுரேஷின் மரணம் ஒரு அதிர்ச்சிகரமான கதையைச் சொல்கிறது. சமீபத்தில் புதுதில்லியில் உள்ள ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) சேர்க்கப்பட்டார். நிமோனியா பாதிப்புக்கு அவர் உள்ளாகியிருந்தார், சாதாரண நிலையில், சில சுற்று ஆன்டிபயாட்டிக் மருந்துகளில் அவர் குணப்படுத்தப்பட்டிருப்பார்.

டாக்டர்கள் அவருக்குப் பொதுவாகக் கிடைக்கக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை முதலில் வழங்கினர், பின்னர் சில ஆற்றல்மிக்க ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வழங்கினர். அவருக்கு எதுவும் வேலை செய்யவில்லை. ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலையால் சுரேஷ் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் பின்னரே கண்டறிந் தனர். ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலையால் ஏற்பட்ட செப்டிசெமிக் அதிர்ச்சியால் 45 வயதான சுரேஷ் கடந்த மாதம் உயிரிழந்தார்.

ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலை எதனால் ஏற்படுகிறது?

சீரற்ற, முறையற்ற, ஒழுங்கற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு உடல் உட்படுத்தப்படும்போது இந்த ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலை ஏற்படுகிறது. ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை மனிதன் பெற்றுவிடுகிறான் என்பதே பொதுக் கற்பிதமாக உள்ளது. உண்மை அதுவல்ல.

ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை பாக்டீரியாவே பெறுகிறது. உடலில் தொற்று ஏற்படும்போது, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயலில் இறங்கி, தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வெளியேற்ற முயல்கிறது. அந்தச் செயலின் வீரியம் போதாதபோது, பாக்டீரியா உடலினுள் வளரத் தொடங்குகிறது.

இந்த நிலையைச் சமாளிக்கவே ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், தங்கள் உயிரைத் தக்கவைப்பதற்காக, ஆன்டிபயாட்டிக் செயல்பாட்டைத் தடுக்கும் வழிகளைக் கால ஓட்டத்தில் பாக்டீரியா கண்டறிந்துள்ளது.

தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஆன்டிபயாட்டிக் மருந்து கொல்ல வேண்டும். ஒருவேளை அப்படி நிகழாவிட்டால், ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை பாக்டீரியா பெற்று, சுற்றுச்சூழலிலும் பிற மனிதர்களிடத்திலும் அது பரவும். சிகிச்சையைப் பயனற்றதாக்கும். மரணத்துக்குக்கூட அது வழிவகுக்கும். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவதன் காரணம் இதுவே.

இந்தியாவின் நிலை

கடந்த மாத இறுதியில் அனுசரிக்கப்பட்ட ‘உலக ஆன்டி பயாட்டிக் விழிப்புணர்வு’ வாரத்தில், உடல் நலனுக்குப் பெருத்த அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஆன்டிபாயட்டிக் எதிர்ப்பு’ மீண்டும் பேசு பொருளானது. இந்தியாவில் ‘ஆன்டிபாடிக் எதிர்ப்பு’ நிலை மிகவும் மோசமாக உள்ளது. உலகில் மிக அதிகமான ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. அது மட்டுமல்லாமல்; ஆன்டிபயாட்டிக்கை அதிக அளவு பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

பல்வேறு வகையான தொற்று களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஃப்ளோரோ க்வினொலோன்கள், செஃபாலோஸ் போரின் ஆகிய ஆன்டிபயாட்டிக்கு களின் எதிர்ப்பு இந்தியாவில் 70 சதவீத மாக உள்ளது. நிமோனியாவுக்கும் நுரையீரல் தொற்றுக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் ‘கே. நிமோனியா’ என்ற பாக்டீரியாவை அழிக்கவல்ல ‘கார்பபெனெம்’ ஆன்டிபயாட்டிக் பிரிவுக்கு (அதிக ஆபத்துள்ள நோய்த்தொற்றுகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது) இந்தியா வில் 56 சதவீத எதிர்ப்பு உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எதிர்ப்பின் காரணிகள்

ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலை இந்தியாவில் அதிகமாக இருப்பதற்கான காரணங்களை அறியும் முயற்சி முழு வீச்சில் நடந்துவருகிறது. நோயாளிக்குத் தேவைப்படாதபோதும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப் படுவதே இந்த எதிர்ப்பு நிலைக்கான முக்கிய காரணி எனச் சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, வைரஸ் தொற்றுநோய்களை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குணப்படுத்தாது. ஆனால், பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளே இந்தியாவில் பரிந்துரைக்கப்படுகின்றன.

மேல் சுவாசக் குழாய் நோய்த் தொற்றுகளுக்கும் வயிற்றுப் போக்குகளுக்கும் ஆன்டிபயாட்டிக் சிகிச்சை தேவையில்லை. ஆனால், மருத்துவர்களும் முறைசாரா சுகாதார பணியாளர்களும் ஆன்டிபயாட்டிக்கையே இவற்றுக்கு அதிக அளவில் பரிந்துரைக்கின்றனர்.

உதாரணமாக, சுரேஷின் நிலையை எடுத்துக்கொண்டால், நிமோனியாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பாக, மூக்கில் வீக்கத்தை ஏற்படுத்தும் நாசியழற்சியால் அவர் அவதிப்பட்டார். நாசியழற்சி பெரும்பாலும் வைரஸ் தொற்றால்தான் ஏற்படும். ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் இதற்கு சிகிச்சையளிக்க முடியாது. ஆனால், அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பை பாக்டீரியா பெற்றது. அவரது உயிரும் பறிபோனது.

இரண்டாவதாக, மேற்கத்திய நாடுகளைப் போலல்லாமல், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நாடு முழுவதும் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. மற்றொரு காரணி என்னவென்றால், பல ஆன்டிபயாட்டிக் மருந்துகள் விலை உயர்ந்தவை, குறிப்பாக, உயர் வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள். பென்சிலின் வகையைச் சார்ந்த அமாக்ஸிசிலின் மருந்தின் விலை பத்துக்கு ரூபாய் 100 என்றால், மெரோபெனெம் மாத்திரையின் விலை பத்துக்கு ரூபாய் 2,500-3,000 ஆகும்.

அதிக விலையின் காரணமாக, மருந்துகளைப் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு எடுப்பதற்குப் பதிலாக, நோயிலிருந்து முழுவதும் மீள்வதற்கு முன்பே மருந்துகளை நோயாளிகள் நிறுத்திவிடுகின்றனர். இதன் காரணமாக பாக்டீரியாக்கள் நோயாளிகளின் உடலில் தங்கிவிடு கின்றன. அதே ஆன்டிபயாட்டிக் பின்னர் தரப்படும்போது அந்த பாக்டீரியாக்கள் கொல்லப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனத்தின் செயல்திட்டம்

இந்த அசாதாரண நெருக்கடியின் அளவை உணர்ந்து, உலக சுகாதார நிறுவனம் ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பை (ஏஎம்ஆர்) எதிர்த்துப் போராடுவதற்கான கொள்கைகளை உருவாக்குமாறு, உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஏஎம்ஆர் தொடர்பாக WHO உடன் ஒத்துழைக்க இந்திய அரசும் திட்டமிட்டுள்ளது. 2017-ல் ஏஎம்ஆர் குறித்து தேசிய செயல் திட்டத்தை வகுத்த முதல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. ஆனால், கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே இதுவரை செயல் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன

பரிசோதனை நேரத்தைக் குறைக்கும் முயற்சி

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த ஆன்டிபயாட்டிக் வேலை செய்ய முடியும் என்பதை அறிய 48 மணிநேரம் ஆகலாம். இதற்கிடையில், ஒரு நோயாளிக்குச் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன, பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இந்த மருந்துகள் மாற்றப்பட வேண்டியிருக்கும்.

இந்தப் பரிசோதனை நேரத்தைக் குறைக்க முடிந்தால், தொடக்கத்திலிருந்தே சரியான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பரிசோதனை நேரத்தைக் குறைக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில், பல இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை நிதியளித்துள்ளது.

கண்டுபிடிப்புகளின் நிலை

மருத்துவமனைகளிலும் சமூகத்திலும் நிலவும் மோசமான சுகாதாரச் சூழல், விலங்குகளின் தீவனத்தில் கலக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்து எனப் பல விஷயங்கள் தவறாகச் சென்றதால் நேர்ந்த விளைவே ஏ.எம்.ஆர். புதிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் ஆராய்ச்சியும் தயாரிப்பும் ஆபத்தானது மட்டுமல்ல; அறிவியல் ரீதியில் சவாலானது என்பதால். சில பத்தாண்டுகளாக மருந்துத் துறையால் மிகச் சில புதிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளே உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்குவதற்கும் ஏ.எம்.ஆரைச் சமாளிப்பதற்கும், அரசாங்கங்களும் பொதுத்துறையும் சரியான உந்துதலையும் ஊக்கத்தொகைகளையும் வழங்க முன்வர வேண்டும்.

இணைந்து போராடுவோம்

உலகம் முழுவதும் ஏ.எம்.ஆரால் ஆண்டுக்கு 2,14,000 குழந்தைகள் உயிரிழப்பதாகப் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்துகின்றன. 2050 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏ.எம்.ஆரால் ஒரு கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயிர் இழப்பு, மருத்துவமனையில் தங்கியிருத்தல், நீண்டகால சிகிச்சை போன்ற பலவற்றின் காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 7,156 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் அந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.

அவசர நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 2 கோடிப் பேர் ஏ.எம்.ஆரால் இறந்துவிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. காளான்போல் பரவும் இந்த வெகுஜனக் கொலையாளியை எதிர்த்துப் போராடுவதற்கு எல்லாக் கைகளும் இணைய வேண்டிய தருணம் இது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: shubasrikanth@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x