Published : 07 Dec 2019 10:26 AM
Last Updated : 07 Dec 2019 10:26 AM
டாக்டர் கு. கணேசன்
நீரிழிவு உள்ளவர்களுக்குக் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது, ‘டயபடிக் ரெட்டினோபதி' (Diabetic retinopathy) எனும் விழித்திரை பாதிப்பு. கட்டுப்பாடு இல்லாத ரத்தச் சர்க்கரை காரணமாக விழித்திரையில் ரத்தக் குழாய்களும் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சினை இது.
நீரிழிவு உள்ளவர்களில் 100ல் 24 பேருக்கு இந்தப் பாதிப்பு இருக்கிறது. நீரிழிவு தவிர, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், ரத்தமிகுக் கொழுப்பு, உடல்பருமன், ரத்த சோகை, பரம்பரைத் தன்மை, கர்ப்பம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இந்த நோய்க்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும். வயதானால்தான் இது வரும் என்பதில்லை; 30-லிருந்து 60 வயதுக்குள் எந்த வயதிலும் வரலாம்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு இது வருவதற்குப் பிரத்யேகக் காரணம் ஏதும் உண்டா?
உண்டு. விழித்திரை என்பது நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்களை மின்சக்தியாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் சென்று, எதைப் பார்க்கிறோம் என்பதை உணர்த்த உதவும் முக்கியமான பகுதி. இதற்கு வேண்டிய ஊட்டச்சத்து நுண் ரத்தக் குழாய்கள் வழியாகக் கிடைக்கிறது. நீரிழிவுக்காரர்களுக்கு ரத்தச் சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அந்த அதீத சர்க்கரை, விழித்திரையின் நுண் ரத்தக் குழாய்களை அரிக்கிறது.
புரதம் மிகுந்த புறக்கழிவு கசிவு (Exudate) கண்ணுக்குள் ஏற்படுகிறது. அப்போது விழித்திரை வீங்கிப் பழுதாகிறது. இதுதான் விழித்திரை பாதிப்பின் தொடக்கக் கட்டம். பார்வையில் பிரச்சினை இருக்காது. அதேநேரம் கண்ணுக்குள் ஓசையின்றி ஒரு ‘பிரளயம்’ ஆரம்பித்திருக்கும்.
விழித்திரையில் ரத்தக் குழாய்கள் வெடித்துவிடும் என்று சொல்கிறார்களே, அப்படியென்றால் என்ன?
நீரிழிவு இன்னும் தீவிரமாகும் போது, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ரத்தக் குழாய்கள் சிதைந்துவிட, விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கசிந்த ரத்தம் விழித்திரை யில் படர்ந்து ஈரமாக்குகிறது. இதனால் பார்வை குறைகிறது. மேலும், விழித்திரைக்கு வரும் நுண் ரத்தக் குழாய்கள் நீரிழிவு காரணமாக அடைத்துக்கொள்வதும் உண்டு. அப்போது அங்கு ரத்த ஓட்டம் குறையும்.
அதை ஈடுகட்ட அசாதாரண ரத்தக் குழாய்கள் புதிதாகப் புறப்படும். இவை வலுவில்லாமல் இருக்கும். இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் வெடித்துவிடும். இதனால் அடிக்கடி ரத்தக் கசிவு ஏற்படும். இந்தக் கசிவு விழித்திரையை மட்டுமல்லாமல் பார்வை நரம்பையும் அழுத்தும்; மண்ணில் படாத மழைத் தண்ணீர்போல் தெளிவாக இருக்க வேண்டிய விழிப்படிகத் திரவத்தில் ரத்தக்கசிவு (Vitreous hemorrhage) கலந்து குட்டைத் தண்ணீர் போல் கலங்கலாகிவிடும். அப்போது பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.
நீரிழிவுக்காரர்களுக்கு விழித்திரை விலகிவிடும் என்று சொல்கிறார்கள். அதுவும் உண்மையா?
உண்மைதான். நீரிழிவு கடுமையாக இருந்தால், விழித்திரையின் பின்புறச் சுவரிலிருந்து அது திடீரென விடுபட்டுவிடும். இதற்கு ‘விழித்திரை விலகல்' (Retinal Detachment) என்று பெயர். இது கண் பார்வையை உடனே பறித்துவிடக்கூடிய மோசமான நிலைமை. ஆனாலும், கண்ணுக்குள் ரத்தக்கசிவு இருப்பதைத் தொடக்கத்திலேயே கவனித்து, தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதைத் தடுக்கலாம்.
நீரிழிவுக்காரர்களுக்குப் பார்வை பாதிக்கப்பட விழித்திரையில் வேறு காரணம் உண்டா?
உண்டு. விழித்திரையின் மையத்தில் ‘ஒளிக்குவியம்' (Macula) என்னும் பகுதி இருக்கிறது. இங்குதான் நாம் பார்க்கும் காட்சிகள் விழுகின்றன. நாம் பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் இந்தப் பகுதி பேருதவி புரிகிறது. இங்கே தோன்றும் புறக்கழிவு புரதம் காரணமாக இந்தப் பகுதி வீங்கிவிடும். இதற்கு ‘டயபடிக் மேக்குலோபதி’ (Diabetic Maculopathy) என்று பெயர். பார்வை குறைவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வாசிப்பதும் வாகனம் ஓட்டுவதும் சிரமமாக இருக்கும்.
விழித்திரை பாதிப்பின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
முதலில் கண் கூசும். பிறகு, பார்வையில் புள்ளி புள்ளியாகத் தெரியும். பூச்சி பறப்பதுபோல் தெரியும்.. பக்கப் பார்வை குறையும். அதைத் தொடர்ந்து மத்தியப் பார்வை மறைக்கும். பாதிப்பின் தொடக்கத்தில் இந்த அறிகுறிகள் தெரியாது; அதிக நாள் கழித்துத்தான் தெரியும். அப்போது பாதிப்பு மோசமான நிலையில் இருக்கும். அதனால்தான் நீரிழிவுக்காரர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இந்தப் பாதிப்பை எப்படிக் கண்டுபிடிப்பது?
வழக்கமான பார்வைத் திறன் பரிசோதனை, கண்நீர் அழுத்தப் பரிசோதனை, குறு துளை ஒளி சோதனை (Slit Lamp Examination), விழித்திரை நோக்கல் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பாதிப்பை அறிய முடியும். அடுத்து, விழித்திரைக்கு ரத்தக் குழாய் மூலம் ஒரு சாயத்தைச் செலுத்திப் படம் எடுக்கும் ‘ஃபண்டஸ் ஃபோளரசின் ஆஞ்சியோகிராபி' (Fundus Fluorescein Angiography) பரிசோதனை மூலமும் 100 % இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். இவை தவிர, ஆப்டிகல் கொஹரென்ஸ் டோமோகிராபி (OCT), பி-ஸ்கேன் பரிசோதனை என்று வேறு பல பரிசோதனைகளும் இருக்கின்றன.
விழித்திரை பாதிப்புக்கு என்ன சிகிச்சை உள்ளது?
இதற்கு லேசர் சிகிச்சை ஒரு முக்கிய சிகிச்சை. லேசர் ஒளிக்கதிர்களைக் கண்ணுக்குள் செலுத்தி, ரத்தக் கசிவுள்ள ரத்தக் குழாய்களை மூடுவதும் ரத்தக் கசிவை நிறுத்துவதும் இதன் பயன்முறை. இதற்கு ‘லேசர் போட்டோ கோயாகுலேஷன்' (Laser Photo Coagulation) என்று பெயர். கண்ணுக்குள் குறைந்த அளவு ரத்தக் கசிவு இருந்து, புதிய ரத்தக் குழாய்களும் காணப்படும் நிலையில் லேசர் சிகிச்சை நல்ல பலனைத் தரும்.
பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்துப் பல முறை லேசர் சிகிச்சை தேவைப்படும். இந்த சிகிச்சையை ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும். விழித்திரை யில் புதிய ரத்தக் குழாய்கள் புறப்படுவதை இது தடுத்துவிடுவதால் மறுபடியும் விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்படாது.
அடுத்து, விழித்திரை லேசாக விலகியிருந்தால், லேசரில் சரி செய்யலாம். விழித்திரை மோசமாக விலகி இருக்கிறது என்றால் ‘விட்ரெக்டமி' (Vitrectomy) எனும் விழிப்படிகத் திரவ மாற்று அறுவை சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் தேவைப்படும். விழித்திரை விலகினாலும் விலகாவிட்டாலும், ரத்தக் கசிவு மட்டும் மோசமாக இருக்கிறது என்னும் நிலைமைக்கும் இதே சிகிச்சைதான்.
ஒளிக்குவிய வீக்கம் (Macular edema) தொடக்க நிலையிலிருந்தால் லேசர் சிகிச்சை மட்டுமே போதும். மோசமான நிலையில் ஸ்டீராய்டு உள்ளிட்ட சில மருந்துகளை (anti-VEGF) கண்ணுக்குள் நேரடியாக ஊசி மூலம் செலுத்தும் நவீன மருத்துவமும் இதைத் தொடர்ந்து லேசர் சிகிச்சையும் தேவைப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக நீரிழிவைக் கட்டுப்படுத்துவதுதான் விழித்திரை பாதிப்புக்கு முதன்மை சிகிச்சை.
இந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கு வழி இருக்கிறதா?
ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு இந்த மூன்றையும் நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தச் சர்க்கரை பரிசோதனைகளில் மூன்று மாதக் கட்டுப்பாடு (HbA1C) மிக முக்கியம். உரிய மருத்துவம், உரிய நேரத்தில் கிடைத்தால்தான் பார்வையைக் காப்பாற்ற முடியும்.
நீரிழிவு உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை விழித்திரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிகுறிகளைக் காட்டாத தொடக்கநிலைப் பாதிப்பைக் கண்டறிந்து பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். கர்ப்பிணிகள் தங்கள் முதல் ‘மும்மாத கர்ப்ப’த்தில் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அடுத்து, புகை பிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. மிகைக் கொழுப்பு ஆகாது. உடல்பருமனைக் குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துணவைச் சாப்பிட்டு ரத்தசோகை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாமே விழித்திரை பாதிப்புக்கு ‘திரை’ போட உதவும்.
கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT