Published : 30 Nov 2019 10:22 AM
Last Updated : 30 Nov 2019 10:22 AM

உடல் சொல்வதைக் கேட்டு ஓடுங்கள்

இந்தியாவிலும் தமிழகத்திலும் சிறுநகரங்களில்கூட மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருகின்றன. இதுபோன்ற ஓட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பயிற்சியில் ஈடுபடும்போதும் எதிர்பாராத மரணங்களும் இந்தியாவில் நிகழத் தொடங்கியுள்ளன. இதயத் தமனிகளில் நோயோ, அடைப்போ இருப்பது தெரியாமல் பயிற்சிகளில் ஈடுபடும்போது இந்த மரணங்கள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

2008-ம் ஆண்டு மும்பை தாஜ் விடுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் தனது உயிரையும் பணயம் வைத்து நிறையப் பேரைக் காப்பாற்றிய நிதின் காக்கடே, சென்ற வாரம் மாரத்தான் ஓட்டத்துக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு வயது 43 தான்.

காரணம் என்ன?

நெஞ்சில் உணரும் அசௌகரியம், ஆழமாக மூச்சுவிட இயலாத நிலை இரண்டும் அதன் ஆரம்ப அறிகுறிகள். அத்துடன் நீண்ட தூர மாரத்தான் ஓட்டத்துக்காக உடலைக் குறுகிய காலத்தில் தயார்ப்படுத்தக் கூடாது என்றும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். தினசரி ஒருவர் எட்டு முதல் பத்து கிலோமீட்டர் ஓடும் பயிற்சியிலிருந்தால், இரண்டு மாதங்கள் முறையான பயிற்சிக்குப் பிறகு 21 கிலோமீட்டர் அரை மாரத்தானுக்குத் தயாராக முடியும்.

ஆனால், நிதின் காக்கடேயோ 42 கிலோமீட்டர் முழு மாரத்தான் ஓட்டத்துக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஓட்டப் பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ உதவிக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு மிகக் குறுகிய அவகாசமே இருந்ததால், இதுபோன்ற இறப்புகள் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாரத்தான் ஓடும்போது கவனிக்க வேண்டியவை

நடைப்பயிற்சி முதலில்

வெற்றிகரமாக ஓடுவதற்கு முதலில் நடப்பது அவசியம். தினசரி முப்பது நிமிடங்கள் வேக நடைப்பயிற்சியைச் சீராக்குங்கள். அதற்குப் பிறகு வேகமெடுத்து ஓடலாம்.

ஜாக்கிங்கைத் தொடங்குங்கள்

வேக நடைப்பயிற்சி இயல்பான பின்னர், அரை மணி நேரப் பயிற்சிக்கு நடுவில் நூறு மீட்டர் அளவில் நான்கு முறை ‘ஜாக்’ செய்யுங்கள்.

மருத்துவ ஆலோசனை பெறுங்கள்

நாற்பது வயதுக்கு மேலானவர்களோ, இதயப் பிரச்சினை இருப்பவர்களோ ஓட்டப் பயிற்சியை ஆரம்பிக்கும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேளுங்கள். பரிசோதனையும் அவசியம்.

உடலுக்குச் சுமை வேண்டாம்

ஓடும்போது உடலில் என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். குறிப்பாக நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் இருந்தால் ஓட்டத்தை மெதுவாக்கி மருத்துவரிடம் செல்லுங்கள்.

தண்ணீர் நிறையக் குடியுங்கள்

நீங்கள் ஓட்டப்பயிற்சி செய்யும் இடம் வெப்பப் பிராந்தியமென்றால் தண்ணீரைக் குடித்துக்கொண்டே இருங்கள். எப்போதும் கையில் குடிநீர் கலனை வைத்திருங்கள்.

உடலின் சமிக்ஞை

நெடுந்தூர ஓட்டத்தொடரில் ஈடுபடும்போது, உடலில் சில தடைகளை உணர்ந்தால் அதை ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். நெஞ்சிலோ, மூச்சிலோ சிரமத்தை உணர்ந்தாலோ உடல் தசைகளில் அசாதாரணமான வலியை உணர்ந்தாலோ உடனடியாக ஓட்டப்பயிற்சியை நிறுத்த வேண்டியது அவசியம். நமது உடலின் எல்லைகளையும் வரையறைகளையும் கடப்பதற்காகவே மாரத்தான் ஓட்டம் போன்ற பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால், உயிருக்கு அச்சுறுத்தலாக அது மாறிவிடக் கூடாது.

- பவித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x