Published : 30 Nov 2019 10:22 AM
Last Updated : 30 Nov 2019 10:22 AM
பிறக்கும்போதே சில குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு அல்லது செவித் திறன் குறைபாடு ஏற்படுவதுபோல், கற்றலில் ஏற்படும் ஒரு குறைபாடே ‘டிஸ்லெக்ஸியா (கற்றலில் குறைபாடு)’. இது மூளை செல்களின் செயல்திறனில் ஏற்படும் குறைபாட்டால் ஏற்படுகிறது.
குழந்தைகள் கண்களால் காணும் எழுத்துகளை அல்லது காதால் கேட்கும் சொற்களை/செய்திகளை மூளைக்கு அனுப்புவதிலும் மூளை அவற்றைப் பெறுவதிலும் புரிந்துகொள்வதிலும் நரம்பியல் ரீதியாகச் சிரமங்கள் ஏற்படும்போது இது தோன்றுகிறது. இது நோயல்ல; இந்தப் பிரச்சினைக்கும் குழந்தையின் புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய தினம் பல பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைக்கு வந்துள்ளது ‘கற்றல் குறைபாடு’ என்பதை ஆரம்பத்தில் கணிக்கத் தவறி, பிரச்சினை முற்றிய பிறகு மருத்துவ ஆலோசனைக்கு வருவது அதிகரித்து வருகிறது.
இது ஏன் வருகிறது?
இந்தியாவில் 100 குழந்தைகளில் 12 பேருக்கு இது இருக்கிறது. அதிலும் ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையால் ஏற்படுகிறது. கற்கும் ஆற்றலுக்கு உதவும் மூளை மரபணுக்களில் ஏற்படும் பிழைதான் இதற்கு அடிப்படைக் காரணம். மேலும், குறைப் பிரசவக் குழந்தைகளும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளும் இந்தப் பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். தாயானவர் கர்ப்ப காலத்தில் சாப்பிட்ட சில மருந்துகளின் பக்கவிளைவு, குடித்த மது, புகைத்த சிகரெட், பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் போன்றவை கருவில் வளரும் சிசுவைப் பாதித்தால் குழந்தைக்குக் கற்றலில் குறைபாடு ஏற்படலாம்.
இந்தப் பாதிப்பை எப்படிக் கண்டுபிடிப்பது?
இந்தப் பாதிப்பை அறிவதற்குத் தனிப் பரிசோதனை எதுவும் இல்லை. பொதுவாக, குழந்தைக்கு மூன்று வயது ஆகும்போது இந்தக் குறைபாடு இருப்பதைப் பெற்றோரே தெரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு வாசிப்பது, எழுதுவது, புதிய சொற்களை உச்சரிப்பது, ஸ்பெல்லிங் சொல்வது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படும். குழந்தை பள்ளிக்குச் சென்றதும் எழுத்துகள் மட்டுமன்றி, எண்கள், குழந்தைப் பாடல்கள், ஒரே மாதிரி ஒலிக்கும் சொற்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதிலும் பிரச்சினை இருப்பதைக் காணமுடியும். ஒரு மொழியைத் தெரிந்துகொள்வதிலும் அதன் பொருளைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படலாம்.
முக்கியமாக, இந்தக் குழந்தைகள் கணக்குப் பாடத்திலும் ரைம்ஸ் எழுதுவதிலும் சொல்வதிலும் சிரமப்படுவார்கள். வீட்டுப்பாடம் எழுதுவதற்கு அடம் பிடிப்பார்கள். புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் இருக்காது. பென்சிலைப் பிடித்து எழுதுவது, மனப்பாடம் செய்வது, தகவல்களை நினைவில் வைத்துக்கொள்வது, கதை சொல்வது, இலக்கணம் புரிவது போன்ற திறமைகள் குறைவாக இருக்கும்.
எழுத்துகளையும் சொற்களையும் வரிசை மாற்றி எழுதுவதும் அதிக எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதும் இவர்களின் இயல்பு. உதாரணமாக, இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஆங்கில எழுத்து ‘b’ க்கும் ‘d’ க்கும் வித்தியாசம் தெரியாது. ஆகவே. 'book’ என்று எழுத வேண்டியதை 'dook’ என்று எழுதுவார்கள். ‘there’ என்பதை ‘their’ என்றும் a,b,c,d,e என்பதை a,d,e,c,b என்றும் எழுதுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். குழந்தையிடம் காணப்படும் இந்தச் சிரமங்களை ஆரம்பத்திலேயே ஆசிரியர்கள் கண்டுபிடித்துப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அடுத்த கட்ட மருத்துவ ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தாமதம் கூடாது.
என்ன சிகிச்சை உள்ளது?
இதற்குத் தனிச் சிகிச்சை எதுவுமில்லை. அதேநேரம் குழந்தைகள் படிப்பில் பின்னடைவதைப் பார்த்து, எதிர்கால வாழ்க்கை இருண்டு விடுமோ எனப் பெற்றோர் கவலைப்படவும் தேவையில்லை. பெற்றோர் இந்தக் குழந்தைகளிடம் குற்றம் காணாமல், குறை கூறாமல், அதிகம் கடிந்து கொள்ளாமல் அன்போடு அரவணைத்துக் கவனிக்க வேண்டியது மிக முக்கியம். இந்தக் குழந்தைகளுக்கென பள்ளிக் கல்விமுறை சாராத சிறப்புப் பயிற்சிகள் தரும் மையங்களும் பள்ளிகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இங்கு குழந்தையின் அறிவுத்திறனைப் பரிசோதித்து, என்ன காரணத்தால் கற்றலில் குறைபாடு உள்ளது எனத் தெரிந்து, அதற்கேற்ப தனித்தனி பயிற்சிகளைத் தருகிறார்கள். குழந்தையின் பார்த்தல், கேட்டல் முறைகளை மட்டும் பயன்படுத்தாமல் தொடுதல், வாசனை, சுவை ஆகியவற்றுடன் புலன் தொடர்பான கற்பித்தல் முறைகளைக் கையாண்டு கற்றல் திறனை அதிகப்படுத்து கிறார்கள். எழுத்துகளை போர்டில் எழுதிப்போடுவது மட்டுமல்லாமல், ஓர் எழுத்தை விரல்களால் உருவகப்படுத்திக் காட்டிப் பாடம் நடத்துவதை இதற்கு ஓர் உதாரண மாகச் சொல்லலாம். அடுத்து, குழந்தைகளின் ஆர்வத்துக்கு ஏற்ப, அவர்கள் விரும்பும் துறையில் பயிற்சி அளிக்கும்போது சிறப்பிடம் பெறுகிறார்கள்.
இந்தக் குழந்தைகளைப் பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வாறு கையாள வேண்டும்?
இந்தக் குழந்தைகளை மிகுந்த பொறுமையுடன் கையாள வேண்டும். கோபத்தைத் தள்ளிப்போட வேண்டும். அதட்டுவதும் அடிப்பதும் கூடாது. தண்டனை தரக்கூடாது. ஒருமுறை சொன்னது புரியவில்லை என்றால் மறுமுறை சொல்லத் தயங்கக்கூடாது. சொன்னதைச் சரியாகச் செய்தால், மற்றவர்கள் மத்தியில் பாராட்டி, கைதட்டி உற்சாகப்படுத்தினால், அவர்கள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி, இயல்பாக மற்றவரிடம் பழகத் தொடங்குவார்கள். இவர்களை மற்ற மாணவர்களுடன் ஒப்பிடக்கூடாது. முடிந்தவரை இவர்கள் தனியாக அமர்ந்திருப்பதையும் உலாவுவதையும் அனுமதிக்க வேண்டாம். மற்றவர்களுடன் இயல்பாகப் பழகுவதை ஊக்கப்படுத்துவது முக்கியம்.
இந்தப் பிரச்சினை ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும். எனவே, ஒவ்வொரு குழந்தையிடமும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் தனித் திறமைகளை வெளியில் கொண்டுவர ஊக்கப்படுத்துவது நல்ல பலனளிக்கும். அந்தத் திறமைகளை அவர்கள் எளிதில் வளர்த்துக்கொண்டு முன்வரிசைக்கு வருவார்கள். எந்த வகையிலும், அவர்கள் மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அடிக்கடி வலியுறுத்த வேண்டும். தேர்வு, மதிப்பெண், ரேங்க் இவையெல்லாம் தாண்டி, உன்னத உலகமும் பெருவாழ்வும் காத்திருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஓவியர் லியனார்டோ டாவின்சி, அலெக்சாண்டர் கிரகாம்பெல், ஐன்ஸ்டைன், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, எழுத்தாளர் அகதா கிறிஸ்டி போன்றோருக்குக் குழந்தைப் பருவத்தில் ‘கற்றல் குறைபாடு’ இருந்தது. ஆனாலும், சாதித்தார்களே!
- டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT