Published : 26 Oct 2019 11:03 AM
Last Updated : 26 Oct 2019 11:03 AM

பயப்படாமல் பால் அருந்தலாமா?

பவித்ரா

ஐயாயிரம் வருடங்களுக்கு மேலாக மாடு, ஆடு போன்றவற்றின் பாலைக் கொடுப்பது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தைத் தந்ததுடன் நாகரிகத் தோற்றத்துக்கும் வழிவகுத்துள்ளது. விலங்குப் பாலைக் குடிக்கத் தொடங்கிய நிலையில் பிறப்பு விகிதம் அதிகமாகி, குடியிருப்புகள் பெருகி நகரங்கள் உருவாகத் தொடங்கியதற்கும் காரணமாகப் பால் இருந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏழைகள், பணக்காரர்கள் என வித்தியாசமின்றி மக்கள் அருந்தும் பாலின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வு (2018) அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) இந்த ஆராய்ச்சியைச் செய்துள்ளது. அதன்படி, இந்தியாவில் விற்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டிய அளவிலிருக்கும் ஆன்டிபயாட்டிக் எச்சமும் கலப்படமும் அபாய அளவைத் தாண்டவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அப்ளடாக்சின் எம் 1 எச்சம்

இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட 6,432 மாதிரிகளில் 12-ல் மட்டுமே மனிதர்கள் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பில்லாத அளவுக்கு கலப்படப் பொருட்கள் உள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் 77 மாதிரிகளில் ஆன்டிபயாட்டிக் எச்சம் (Antibiotic Residue) அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்துள்ளன. மாட்டுத் தீவனங்கள், வைக்கோல் முதலியவற்றால் பாலுக்குச் செல்லும் வேதிப் பொருளான அப்ளடாக்சின் எம் 1 எச்சம் இருப்பது 368 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

கலப்படம் அபாயகரமாக உள்ள 12 மாதிரிகளில் ஆறில் ஹைட்ரஜன் பெராக்சைடும் மற்றவற்றில் டிடர்ஜெண்ட், யூரியா, பாலைக் கெடாமல் வைத்திருக்கச் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் போன்றவையும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. 12 கலப்பட மாதிரிகளில் ஒன்பது தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவை, இரண்டு மத்தியப் பிரதேசத்தையும் ஒன்று கேரளத்தையும் சேர்ந்தவை.

இந்தியா முழுவதும் செய்யப்படும் முதல் ஆய்வு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் சார்பில் நாடு முழுவதும் விற்கப்படும் பாலில் அப்ளடாக்சின் எம் 1 இருக்கிறதா என்பதைக் கண்டறியச் செய்யப்பட்ட விரிவான முதல் ஆய்வு இதுதான். தமிழகத்தில் எடுக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88-லும், டெல்லியில் பரிசோதிக்கப்பட்ட 262 மாதிரிகளில் 38-லும் கேரளத்தில் 187 மாதிரிகளில் 37-லும் அப்ளடாக்சின் எம் 1 எச்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கறந்தபின் உடனடியாக விற்கப்படும் பாலைவிடப் பதப்படுத்தி விற்கப்படும் பாலில்தான் அதிகப் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்டிபயாட்டிக் எச்சம் அதிகம் காணப்படும் மாநிலங்களாக மத்தியப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் உத்திரப் பிரதேசமும் முன்னணியில் உள்ளன.

இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட 6,432 பால் மாதிரிகளில் 93 சதவீத மாதிரிகள் அருந்துவதற்குப் பாதுகாப்பானவையாகத் தெரிவந்துள்ளன. ஆனால், 41 சதவீத மாதிரிகள் அடிப்படையில் பாதுகாப்பானதாக இருந்தாலும் தரப் பரிசோதனையில் ஓரிரு அம்சங்களில் குறை இருப்பது தெரியவந்துள்ளது. அப்படியே விற்கப்படும் கறந்த பாலிலும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் கொழுப்பு, காணப்படும் தண்ணீர், வெண்ணெய் அல்லாத பொருட்கள் (எஸ்என்எப்) ஆகியவை மாடுகளின் இனத்துக்கேற்ப மாறுபடுகின்றன.

2018, மே முதல் அக்டோபர்வரை இந்தியாவின் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 1,103 ஊர்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சில்லறைப் பால் வியாபாரிகள், பதப்படுத்தி விற்கும் நிறுவனங்கள், உள்ளூர் பால் பண்ணைகள், பால் சந்தைகள் அனைத்தும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டனர்.

புற்றுநோய்க் காரணி

அப்ளடாக்சின் எம்1 என்ற எச்சம் பாலில் இருப்பது சாதாரணமானதல்ல. இது புற்றுநோயைத் தூண்டக்கூடியது. தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சராசரியாக 10-ல் இரண்டு மாதிரிகளில் அப்ளடாக்சின் எம்1 இருப்பது தெரிய வந்துள்ளது. இது நாட்டிலேயே அதிகம். புற்றுநோய் பெரிதும் பரவலாகிவிட்ட நிலையில், அப்ளடாக்சின் எம்1 போன்ற புற்றுநோய்க் காரணிகள் நாம் சாதாரணமாக அருந்தும் பாலில் இருப்பதை சாதாரணமாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? சிந்தித்து அடுத்தகட்ட செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x