Published : 28 Sep 2019 09:58 AM
Last Updated : 28 Sep 2019 09:58 AM
டாக்டர் கு. கணேசன்
வலி இல்லாத வாழ்வு நமக் கேது? தலைவலி, பல்வலி, கைகால்வலி, முதுகுவலி, மூட்டுவலி என ஏதேனும் ஒரு வலியைக் கடந்துதான் நாம் வந்திருப்போம். இவற்றுக் கெல்லாம் காரணம் கண்டுபிடித்து சிகிச்சையும் பெற்றிருப்போம். ஆனால், இன்ன காரணம் என்று குறிப்பிட்டுக் கூற முடியாத அளவுக்கு வலி வந்து வாட்டினால், அது ‘தசைநார் வலி’ (Fibromyalgia). முன்பெல்லாம் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த வலி இப்போது இளம் பருவத்திலேயே ஏற்படுகிறது என்பதுதான் கவலை தரும் விஷயம்.
எது தசைநார் வலி?
தீராத தசைவலியைத் ‘தசைநார் வலி’ என்கிறோம். இது ஆண்களை விடப் பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. குறிப்பாக, 20லிருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்களே இதன் இலக்கு. முதுகுவலி, இடுப்பு வலி, தலைவலி எனக் குறிப்பிட்ட வலி என்றில்லாமல் உடலில் பல இடங்களில் பரவலாக உணரக்கூடிய வலியாக இது இருக்கும்.
கைகால் குடைச்சல் அதிகம் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கங்களிலும் வலி ஏற்படுவது இதன் தனித்தன்மை. உதாரணமாக, இடக் கை வலித்தால் அதே வேளையில் வலது கையும் வலிக்கும்; வீட்டிலோ அலுவலகத்திலோ அன்றாடப் பணிகளை உற்சாகமாகச் செய்ய விடாது; மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும். உறக்கமின்மையும் ஞாபக மறதியும் சேர்ந்துகொள்ளும். இளம் பருவத்தினரின் இயல்பான குதூகலம் மறைந்துபோகும்.
என்ன காரணத்தால் இது வருகிறது?
இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுக் கூறமுடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்வதும் உண்டு. ஹார்மோன்களின் சமச்சீர் தன்மை சீர்குலைவது இந்த நோய் வர முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. பொதுவாக, உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நமக்கு வேதனை தெரியாத அளவுக்கு வலியைக் கட்டுப்படுத்த இது முயலும். பெண்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும்போதும் முழுவதுமே சுரக்காத போதும் தசைநார் வலி ஏற்படும்.
அடுத்து, வலியை உணரச் செய்யும் ‘சப்ஸ்டன்ஸ்-பி’ எனும் வேதிப்பொருள் நரம்பு மண்டலத்தில் அதிகரிக்கும்போது தசைநார் வலி தோன்றும். நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம். மேலும், குடும்பத்தில் திடீரென ஏற்படும் சோக நிகழ்வுகள், இழப்புகள், விபத்துகள், அதிர்ச்சியான செய்திகள் போன்றவை இந்த வலியைத் தூண்டுகின்றன.
தசைநார் வலி உடலில் எங்கெல்லாம் வரும்?
தலையின் பின்பகுதி, கழுத்தின் மேற்பகுதி, தோள்பட்டை, நடு நெஞ்சின் மேற்பகுதி, முழங்கை, இடுப்பு உட்காரும் இடம், முழங்காலின் பின்பகுதி. இந்த இடங்களில் உள்ள தசைகளை இயக்கும்போது வலியோடு, தசை இறுக்கம் இருப்பதையும் உணரமுடியும். அந்த இடங்களை அழுத்தினால் வலி அதிகரிக்கும். இந்த நோய் உள்ளவர்கள் எளிதில் களைப்படைந்து விடுவார்கள். குறிப்பாக, காலையில் கண் விழிப்பது சிரமமாக இருக்கும் இன்னும் உறங்க வேண்டும்போல் இருக்கும். உடலில் ஆற்றல் இல்லாததுபோல் இருக்கும். உடலில் தசைவலி 3 மாதங்களுக்கு மேல் நீடித்தால், அது தசைநார் வலியாகத்தான் இருக்கும்.
என்ன பரிசோதனை, சிகிச்சை உண்டா?
இந்த நோய்க்கு முதலில் குடும்ப மருத்துவரையும் அவரது ஆலோசனைப்படி நரம்புநல நிபுணர், மனநல நிபுணர், எலும்புநல நிபுணர் ஆகியோரையும் ஆலோசிக்க வேண்டும். இந்த நோயைக் கண்டறிய எந்தப் பரிசோதனையும் இல்லை. ரத்தப்பரிசோதனைகள், ஸ்கேன் போன்றவை உடலில் வேறு பாதிப்புகளால் இந்த வலி ஏற்பட வில்லை என்பதை உறுதிப்படுத்தவே உதவும். ‘வலிப்புள்ளி ஆய்வு’ ஓரளவுக்கு உதவும்.
இப்போது பெருநகரங்களில் வலி மருத்துவத்துக்கெனத் தனிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றிலும் ஆலோசனை பெறலாம். ஆனால், வலியைக் குறைக்கும் சிகிச்சைகள் மட்டும் இதற்குப் பலன் தராது. மன அழுத்தம், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் சிந்தனை சார்ந்த பிரச்சினைகளுக்கும் சிகிச்சைகள் (CBT) தேவைப்படும். இவற்றோடு தசை ஊட்டப் பயிற்சிகள், தியானம், யோகா போன்றவையும் உதவும். அக்குபங்சர் சிகிச்சையும் ஆயுர்வேத மசாஜ் செய்வதும் நல்லது. இப்படியான கூட்டு சிகிச்சைதான் இதற்குக் கைகொடுக்கும்.
இதைத் தடுக்க முடியுமா?
முடியும். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும் சரியான உறக்கமும் முக்கியம். இரவில் தொலைக்காட்சி, மொபைல் போன், கேட்ஜெட்ஸ் போன்றவற்றை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். காலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இரவில் இளம் வெந்நீரில் குளிப்பதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மதுவும் புகையும் ஆகவே ஆகாது.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய உணவு, காய்கறி - பழங்கள் சாப்பிட்டு உடலின் ஆரோக்கியத்தைக் காத்துக்கொண்டால், செரட்டோ னின் சுரப்பு சீராக இருக்கும். ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பது, இசை கேட்பது, தோட்ட வேலை பார்ப்பது என உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்யுங்கள். இயன்ற அளவுக்கு சேவைப்பணிகளில் ஈடுபட்டு சமூகத்துடன் கலந்து பழகுங்கள். இப்படி ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழப் பழகினால், தசைநார் வலிக்கு உடலில் இடமில்லாமல் போகும்.
# வலியைத் தாங்கும் திறன் ஆண்களைவிட பெண்களுக்கு ஒன்பது சதவீதம் அதிகம்.
# 130 டெசிபலை மீறிய ஒலி மனிதக் காதுகளுக்கு வலியை உண்டாக்கும்.
# மூளை தன்னளவில் வலியை உணராது.
# நம்முடைய கையில் ஒரு இன்ச் அளவில் மட்டும் 600 வலி உணர்வைத் தூண்டும் சென்சார்கள் இருக்கின்றன.
கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு:
gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT