Published : 13 May 2014 03:13 PM
Last Updated : 13 May 2014 03:13 PM
எனக்கு வயது 61. எனக்கு இரண்டு கால்களிலும் வரிகோஸ் வெய்ன் (Varicose vein). அதனால் எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. இருந்தாலும் இதற்கு மருந்து உண்டா? இது அதிகரிக்காமல் இருக்க வழி கூறுங்கள்.
ஜே. ராஜகோபாலன், நெய்வேலி
வரிகோஸ் வெய்ன் என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் தொய்வால் வரும் புடைப்பும், அதை ஒட்டிய வலியையும் சேர்த்து வரும் நோய். பொதுவாக நெடுநேரம் நின்றுகொண்டு வேலை செய்யும் பாதுகாவலர், போலீஸ், ஆசிரியர், வீட்டில் நெடுநேரம் பணிபுரிவோர் முதலியோருக்கு வரும். நாளம் சுருண்டு புடைத்திருப் பதுடன், சிலருக்கு அரிப்பும்கூட ஏற்படுவதுண்டு.
உங்களுக்கு வேறு தொல்லை இல்லாவிட்டாலும் இப்பிரச்சினை அதிகரிக்காமல் இருக்கப் புடைத்திருக்கும் நாளத்தின் மீது கீழிருந்து மேலாகச் சித்தமருத்துவக் கற்பூராதி, வாதகேசரி முதலான தைலங்களைத் தடவுவதும், கால்களைக் கொஞ்சம் உயர்த்தி வைத்துப் படுப்பதும் நல்லது. கூடவே நவீன மருத்துவர் பரிந்துரைப்படி, பணியின் போது GRIP BANDAGE-யை இறுக்கமாகக் கட்டிக்கொள்வதும் Stockings அணிவதும் நல்லது. உடல் எடையைக் குறைக்க முயல்வது முக்கியம்.
அரிப்பு ஏற்பட்டால், சொறிந்து புண்ணாக்கிக் கொள்ளக் கூடாது. இப்படி ஏற்படும் நாளப் புண்கள் ஆறுவது கடினம் என்பதால், சொறிந்து கொள்ளாமல் உரிய மருத்துவச் சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். விபரீதகரணி, சர்வாங்காசனம் முதலிய ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதால் இப்பிரச்சினை அதிகரிக்காது.
எனக்கு வயது 21, பெண். எனக்கு கீழ் தாடையிலும் வயிற்றிலும் தேவையற்ற முடி வளர்கிறது. லேசர் சிகிச்சை, சித்தா, ஆயுர் வேதச் சிகிச்சைகள் எடுத்து விட்டேன். ஆனால், எந்தப் பலனும் இல்லை. ஹார்மோன் சமநிலையின்மை உறுதியாகியிருக் கிறது. இதற்கு என்ன தீர்வு?
பெயர் வெளியிட விரும்பவில்லை
தேவையற்ற முடிகளுக்கான முக்கியக் காரணம் ஹார்மோன்களில் ஏற்பட்ட லேசான மாறுதலாக இருக்கக் கூடும். சில நேரம் மாதவிடாய் சீரில்லாது இருக்கும், சினைப்பை நீர்க் கட்டிகளிலும் இப்பிரச்சினை வரக்கூடும். புறச் சிகிச்சையில் முடிகளை நீக்குவது என்பது தற்காலிக நிவாரணம்தான் கொடுக்கும்.
சோற்றுக் கற்றாழை எனும் வெகு சாதாரணமாக வளரும் மூலிகைச் செடிக்குச் சித்த மருத்துவ இலக்கியங்களில் குமரி என்று பெயர். இந்த மூலிகையின் உள்மடலில் இருக்கும் சோற்றுப் பகுதியை எடுத்து ஜூஸ் செய்து சாப்பிடுவதும், இச்சோற்றில் பனங் கருப்பட்டி, பூண்டு சேர்த்துக் கிளறிச் செய்யப்படும் லேகியத்தைச் சாப்பிடுவதும் ஹார்மோன் சீர்கேட்டைச் சரிசெய்ய உதவும்.
கூடுதலாகப் பாசிப் பயறு, மஞ்சள், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சீமை கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு ஆகியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் நலுங்கு மாவைத் தேய்த்துக் குளிப்பதும் நல்லது.
முடியை அகற்றும் இன்னொரு மூலிகை வழியும் உண்டு. கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இரண்டும் ஒரு பங்கும்; அம்மான் பச்சரிசி எனும் எளிய மூலிகையை அதில் பாதி பங்கும் சேர்த்து நன்கு மை போல் அரைத்துக்கொண்டு, தேவையற்ற முடியுள்ள (மீசைப் பகுதியில்) போட்டுவைத்து அரை மணி நேரம் கழித்துக் கழுவிவந்தால் முடி நீங்கும். சிலருக்கு அம்மான் பச்சரிசி அரிப்பையும் தடிப்பையும் உண்டாக்கும் என்பதால், போட்டவுடன் அரிப்போ, தடிப்போ வருகிறதா எனச் சிறிய இடத்தில் தடவிப் பரிசோதித்த பின் பரவலாகப் பயன்படுத்த வேண்டும்.
என் மனைவிக்கு 2007-ல் இருந்து ulcerative colitis (குடல் புண்) இருக்கிறது. ஆரம்பத்தில் ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டார். பிறகு ஹோமியோபதி மருத்துவம் எடுத்த பிறகு, பெருங்குடலில் ரத்தக் கசிவு நின்றிருந்தது. ஆனால், அது மீண்டும் வந்துவிட்டது. இதற்குத் தக்க அறிவுரை கூறுங்கள்.
சி.கே.மூர்த்தி, மின்னஞ்சல்
சிறுகுடல் பகுதியில் அழற்சியைத் தன்னாலேயே ஏற்படுத்தும் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்தான் Ulcerative colitis (குடல் புண்). உணவில் சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிக முக்கியம்.
துவர்ப்புச் சுவையுள்ள வாழைப்பூ, வாழைத்தண்டு, நாரத்தை போன்றவற்றையும் சித்த மருந்தையும் எடுத்துக்கொள்வது நிச்சயம் இந்நோயை விரைந்து குணப்படுத்த உதவும்.
தினமும் நீர் மோர் அருந்துவதும், வாய்ப்பு கிடைக்கும்போது மாதுளைச் சாறு அருந்துவதும் மிக நல்லது. எந்த ஒரு நோயையும் பிரபல மருத்துவரோ, பிரபல மருத்துவமனையோ பரிந்துரைக்கும் மருந்துகள் மட்டுமே நீக்க இயலாது.
தேர்ந்தெடுத்த உணவும் சீரான மனமும்கூட முக்கியம். பரபரப்பான மனமும் இந்த நோயை அதிகரிக்கும் என்பதால், தொடர்ச்சியான பிராணாயாமப் பயிற்சியும் தியானப் பயிற்சியும் இந்நோயை முழுமையாக நீக்க உதவும்.
உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குத் தீர்வு:
பிரபல மருத்துவரும், எழுத்தாளருமான கு.சிவராமன், உங்கள் மருத்துவச் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட அனைத்து கேள்விகளையும் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு உரிய பதில் கிடைக்கும்.
மின்னஞ்சல்: nalamvaazha@kslmedia.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT