Published : 04 Jul 2015 03:36 PM
Last Updated : 04 Jul 2015 03:36 PM

எது நல்ல தேன்?

ஆன்ட்டிபயாட்டிக் இல்லாத தேன் வகையைத் திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்தான். அதேநேரம் பசுமை அங்காடிகளில் கிடைக்கும், செயற்கை பதப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாத தேன் வகைகளை வாங்குவது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.

கலப்படமில்லாத நல்ல தேனைத் தேர்ந்தெடுப்பது எப்படி என ஆலோசனை தருகிறார் வேளாண்-உணவு நிபுணர் பாமயன்:

தேனின் தரத்தைக் கண்டறிவதற்கு மிக எளிமையான, எல்லோராலும் செய்து பார்க்க முடிகிற சோதனை: ஒரு பிளாட்டிங் பேப்பரில் இரண்டு துளி தேனை விட்டுப் பார்ப்பது. தண்ணீரை உறிஞ்சக்கூடிய எந்தக் காகிதத்திலும் தேனை விட்டுப் பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது தேன் அப்படியே இருந்தால் நல்ல தேன், காகிதத்தால் உறிஞ்சப்பட்டால் கலப்படத் தேன்.

அதேபோலக் கண்ணாடிக் குவளை ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேனை மேலிருந்து ஊற்றினால், அது ஒரு கம்பியைப் போலக் கீழே இறங்கி அடிப்பகுதியைத் தொட வேண்டும். மாறாக, இடையிலேயே கரைய ஆரம்பித்தால், அது கலப்படத் தேன்.

தேனில் மூன்று வகைகள் உள்ளன: முதலாவது கொம்புத் தேன். பாறைகள், மரங்களில், அதாவது வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூடு கட்டக்கூடியது இந்தத் தேனீ வகை. அதிலிருந்து குடம்குடமாக தேன் கிடைக்கும். இதற்கு மருத்துவ மதிப்பு குறைவு. இரண்டாவது பொந்துத் தேன். குகை, மரப்பொந்து போன்ற இருட்டான இடங்களில் கூடு கட்டும் தேனீ வகை இது. இதைத்தான் பெட்டிகளில் வளர்க்கிறார்கள்.

இந்தத் தேன் வகை மிதமான அளவு கிடைக்கும். மருத்துவ மதிப்பும் மிதமான அளவு உண்டு. மூன்றாவதாகக் கொசுத் தேன் என்ற சிறிய தேனீ வகை உண்டு. இந்தத் தேன் கிடைப்பது கஷ்டம். ஆனால், இதில்தான் மருத்துவ மதிப்பு அதிகம்.

தேனை எப்படி எடுத்தாலும், அதில் உள்ள ஈரப்பதத்தை அகற்ற வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இதற்கு வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஆனால், அப்படி இயற்கையாகப் பதப்படுத்துவதற்கான காலம் அதிகமாகும் என்பதால், தேனைச் சூடுபடுத்தி விடுகிறார்கள். இப்படிச் செய்யும்போது தேனின் இயல்புத்தன்மை மாறிவிடுகிறது.

அது மட்டுமல்லாமல் தேனைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் தேனைப் பதனப்படுத்தி விடுகிறார்கள் (pasteurisation). இந்தச் செயல்முறையில் தேனின் இயற்கையான சத்துகள் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்று சொல்ல முடியாது. வணிகரீதியான தேனை வாங்கும்போது, இந்த அம்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x