Published : 14 Sep 2019 09:57 AM
Last Updated : 14 Sep 2019 09:57 AM
- போப்பு
உடலால் புறச் செயல்களையும் அகச் செயல்பாடு களையும் ஒருசேர ஒரே நேரத்தில் செய்ய முடியாது. அகச் செயல்பாட்டைத் தூக்கத்தில் மட்டுமே உடலால் நிறைவேற்றிக் கொள்ள இயலும்.
நடைப் பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்து முடித்ததும் உடலில் களைப்புக்குப் பதிலாக உற்சாகமே தோன்ற வேண்டும். மாறாகக் களைப்பு ஏற்படுமானால் உடலை வருத்தியிருக்கிறோம் அல்லது தவறான முறையில் உடற்பயிற்சி செய்துள்ளோம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
எது நல்ல பசி?
பொதுவாகக் கருதுவதுபோல் உடற்பயிற்சி அல்லது சீரான உழைப்பு அதிகப் பசியைத் தூண்டுவதில்லை. உடலின் சீரான இயக்கமே தரமான செரிமானத்துக்குத் துணைசெய்யும். மரக் கிளையில் ஒரு பறவை வந்து அமர்வதுபோல பசி, நிதானமாக வந்து தனது இருப்பை மெலிதாக உணர்த்த வேண்டும். அந்த உணர்த்துதலுக்குப் பின்னரே நாம் உண்ணவும் வேண்டும்.
நல்ல பசி என்பது நிதானமாக வருவதுதானே தவிர, அடிக்கடி வருவதோ உலுக்கி எடுப்பதுபோல் வருவதோ அல்ல. பசி வந்து பின்பு உண்ணவில்லையெனில் மீண்டும் நினைவூட்டுவதற்குச் சில மணி நேரத்தை எடுத்துக்கொள்வதே நல்ல பசி. பசியைத் தொடர்ந்து பத்து நிமிடங்களில் தலையை வலிக்குமானால் உடனே தலைவலியை நிறுத்துவதற்காக உண்பதைவிட அரை மணி நேரமாவது ஓய்வெடுத்து தலைவலியைத் தணித்தாக வேண்டும். அதற்குப் பின்னர் பசியுள்ளதா என்பதைக் கவனித்து உண்பதே சரியானது.
வயிறு காலியாக இருக்கும் அந்த நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகள் தமது வேலைகளை விரைவாகச் செய்துகொண்டிருக்கும். அப்போது குறைந்த அளவு ஆற்றல் இருப்பதால் பசியுணர்வு இருக்காது. உள்ளேயும் செரிமானத்துக்குரிய தயார் நிலை இருக்காது. எனவே, மறுபடியும் பசி வந்த பிறகு உண்பதே செரிமான உறுப்புகளுக்குப் பாதுகாப்பாகும்.
பசி அடங்குமா?
“சாப்பாட்டுக்குக் காத்திருந்து காத்திருந்து பசியடங்கிவிட்டது” என்று கூறுவது ஆழமாக உணர்ந்து சொன்ன உணர்வாகும். பசியுணர்வு தோன்றாமல் அப்போது பசி இருந்ததே என்று உண்டு வைக்கிற உணவு செரிக்கப்படாமல் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி இருக்கும். வயிற்றினுள் செரிக்கப்படாத உணவு, வேதி மாற்றங்களுக்கு உள்ளாகி உடலுக்குத் தகுதியற்ற நிலையிலேயே இருந்து, செரிமான உறுப்புகள் தயாரான பிறகு அடுத்த கட்ட பணிகள் நடக்கத் தொடங்கும். இப்படி வயிற்றில் தங்கும் உணவுதான் புளித்த ஏப்பமாக வருவது. புளித்த ஏப்பத்தை அடக்க சோடா, இனிப்பு நீர் போன்ற பானங்களைக் குடித்தால் உள்ளே உருவான வாயு வெளிப்பட்ட இலகு உணர்வு தோன்றுமே தவிர அப்போதும் புளிப்பேறிய உணவு, மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ உந்தப்படாமல் மேலும் மேலும் அமிலமாகவே மாறும்.
வாய்ப்புண்ணுக்கு ஏற்ற உணவு
அவ்வாறு தேங்கும் அமிலமே வயிற்றிலும் சிறுகுடலிலும் புண்களை (ulcer) ஏற்படுத்துகிறது. வயிற்றில், சிறுகுடலில் புண்கள் தோன்றுவதற்கு முன்னரே நாவிலும் புண்களை உருவாக்கி காரம், புளிப்புச் சுவையுணவை மறுத்து நம்மை எச்சரிக்கிறது உடல். வயிற்றுப் புண் வாய்ப்புண் ஏற்பட்டுள்ளபோது பொதுவாக தயிர்ச் சோற்றைப் பொருத்தமான உணவென்று கருதுகின்றனர். தயிர்ச் சோற்றால் வயிற்றில் புளிப்புத் தன்மை மிகுந்து புண்களை மேலும் அதிகமாக்குமே தவிரக் குறைக்க வாய்ப்பில்லை. அமிலத்தை முறிக்கச் சாத்தியமான மோர் சாதம், நார்த் தன்மை உடைய கைக்குத்தலரிசி கஞ்சி, காரமில்லாத நார்த்தங்காய் ஊறுகாய் போன்றவையே மிகவும் சிறந்தவை.
அமிலம் எப்போது சுரக்கும்?
பலரும் பொதுவாக நம்புவது போலச் சாப்பிடாத நேரத்தில் வயிற்றில் அமிலம் சுரந்து வயிற்றில் புண்கள் ஏற்படுவதில்லை. உணவைச் செரிப்பதற்கான நீர், பசி ஏற்பட்டதும் வயிற்றில் சுரந்து காத்திருப்பதில்லை. உணவைக் கண்ணால் கண்ட பிறகு, அதன் வாசத்தை மூக்கினால் முகர்ந்த பிறகு, உணவில் கை வைத்த பிறகு உணவின் தன்மை, சுவை, மணம் ஆகியவற்றுக்கு ஏற்பவே சுரப்புகள் சுரக்கத் தொடங்குகின்றன.
ஹைட்ரோ குளோரிக் அமிலம் போன்றவை செரிமானத்தில் இரண்டாம் மூன்றாம் கட்டங்களிலேயே சுரக்கின்றன. உணவை வாயில் மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர், உணவைக் கூழாக்குவதோடு செரிமானத்திலும் பேரளவு துணைசெய்கிறது. பொருத்தமான உணவைத் தேர்ந்து உண்டு, உணவு முழுமையாகச் செரிமானமாகுமெனில் நமக்கு உணவின் மீது பெருவேட்கை (craving) ஏற்படாது. அடிக்கடி எதையாவது உண்டுகொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றாது.
வாழ்வை இனிதாக்குவோம்
பசியையும் உடலையும் முழுமையாகக் கவனித்துப் பார்த்தால் நல்ல பசி வருவதற்கு முன்னர் சிறுநீர் கழிப்பதற்கான உந்துதலும் ஏற்படும். சொல்லப்போனால் சிறுநீர் கழித்த பின்னரே முழுமையான பசி ஏற்படும். உணவை வாயில் மெல்லும் பொழுது சுரக்கும் உமிழ்நீர் தொடங்கி பல்வேறு விதமான செரிமான நீரைச் சிறுநீரகமே சுரந்தளிக்கிறது. செரிமானமும் உணவில் சத்துகளைக் கிரகிக்கும் பணியும் முழுமையாக நடைபெற வேண்டுமானால் நாம் சிறுநீரகத்தையும் செம்மையாகப் பராமரிப்பது அவசியம்.
முழுமையான பசியெடுத்த பின்னர் சாப்பிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தால் நுட்ப உணர்வும் (sensitiveness) ஆளுமைப் பண்பும் சிறப்பாக இருக்கும். செரிமானம் முழுமையாக நடப்பதால் உண்ணக்கூடிய உணவின் அளவும் தானாகவே குறையத் தொடங்கும். வாயுத் தொல்லை, செரிமானம் தொடர்பாக உருவாகும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நெடுங்கால நோய்களும் உருவாகாது. வாழ்வும் இனிதாக இருக்கும்.
(நிறைந்தது)
கட்டுரையாளர்,
உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT