Published : 31 Aug 2019 10:32 AM
Last Updated : 31 Aug 2019 10:32 AM

ஆண்களும் படிக்க வேண்டிய நூல்!

யுகன்

‘‘அன்பே... இனி நாம் ஈருடல் ஓருயிராக இருப்போம்’’ என்று காதலிக்கும்போது காதலர்கள் பேசிக்கொள்வது நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியமாகும் என்பது தெரியாது. ஆனால், ``ஒரு கர்ப்பிணியின் உடலுக்குள் ஈருயிர்’’ துடிப்பது சாத்தியம்.

கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்குச் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதுதான் முதன்மையான விருப்பமாக இருக்கும். அதற்குக் கர்ப்பம் அடைவதைப் பற்றியும், பிரசவம் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய விழிப்புணர்வைக் கர்ப்பிணிக்கு ஏற்படுத்தும் நோக்கத்தோடு டாக்டர் கு. கணேசன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பைச் சூரியன் பதிப்பகம் `சுகப்பிரசவம் இனி ஈஸி!’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளது.

உடலும் மனமும் நலமா?

பொதுநல மருத்துவரான கு.கணேசன் மருத்துவம் சார்ந்த எண்ணற்ற நூல்களையும் எழுதியிருந்தாலும், கர்ப்பிணிகளுக்கு உதவும் இந்த நூல் பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. கர்ப்ப காலம் என்பது மருத்துவரீதியில் 40 வாரங்கள். இந்த நூலில் 40 தலைப்புகளில் விரியும் கட்டுரைகளில் சுகப்பிரசவத்துக்கான வழியை ஒரு தாயின் பரிவோடு பரிந்துரைக்கிறது.

ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதில் தொடங்கி, முதல் மூன்று மாதங்கள் எந்தெந்த விஷயங்களில் ஒரு கர்ப்பிணி கவனமாக இருக்க வேண்டும்? ரத்த சோகையிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? தைராய்டு தாக்கத்திலிருந்து தப்பிப்பது எப்படி? ஆர்.ஹெச்.ஃபேக்டர் அபாயத்தை எதிர்கொள்வது எப்படி என்பதையெல்லாம் தன்னுடைய நீண்ட அனுபவத்தின் காரணமாக எளிமையாக விளக்குகிறார் டாக்டர் கு. கணேசன்.

சுகப்பிரசவத்துக்கு உடல் ஆரோக்கியத் தோடு மன ஆரோக்கியமும் முக்கியம் என்னும் கருத்தை முன்வைக்கிறார். கர்ப்பிணியை மனத்தளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டும் நூலின் ஆசிரியர், எதிர்காலச் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி பாரம்பரியமான கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பும் யோசனையையும் இளம் தலைமுறைக்கு முன்வைக்கிறார்.

பிரவசத்துக்குப் பின்

கர்ப்பம் தரித்தவுடனேயே பிரசவம் தொடர்பாக அண்டை வீட்டிலிருப்பவர்கள், உறவினர்கள் என ஆளாளுக்குப் பல விதமான கருத்துகளையும் கர்ப்பிணியிடம் சொல்லத் தொடங்கிவிடுவார்கள். கர்ப்பிணிக்குத்தான் இது குறித்த தெளிவு இருக்க வேண்டும். கர்ப்பம் குறித்தும் பிரசவம் குறித்தும் நம்மிடையே காலம் காலமாக நிலவிவரும் நம்பிக்கைகளில் உண்மைக்கு நெருக்கமாக இருப்பவை எவை, சிறிதுகூட உண்மை இல்லாதவை எவை என்பதை ஆதாரபூர்வமாகப் பட்டியலிட்டு விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

சுகப்பிரசவத்துக்கான ஆலோசனைகளைப் பல கட்டுரைகள் தந்தாலும், எந்தெந்தச் சூழ்நிலைகளில் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்பதையும் ஒரு கட்டுரையில் விளக்கியிருக்கிறார். பிரசவத்துக்குப் பிந்தைய தாயின் ஆரோக்கியத்தை எப்படிப் பராமரிப்பது? சிறந்த கருத்தடை முறை எது? என்பது போன்ற கட்டுரைகளைக் கர்ப்பிணிப் பெண்களும் கர்ப்பமடையக் காரணமாக இருக்கும் ஆண்களும் படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

சுகப்பிரசவம் இனி ஈஸி!
டாக்டர் கு.கணேசன்
சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 4.
தொலைப்பேசி: 044-42209191 கைப்பேசி: 72990 27361.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x