Published : 31 Aug 2019 10:10 AM
Last Updated : 31 Aug 2019 10:10 AM
போப்பு
உண்மையில் வெளியிலிருந்து செலுத்தப்படும் நீரால் சிறுநீரகம் இயங்குவதில்லை. அது தன்னைத் தானாகவே பராமரித்துக்கொள்ளுமே தவிர, அதைச் சுத்தமாகப் பராமரிக்கத் தனியாக நீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை.
உடல் அதீத வெப்பத்தில் இருக்கும் போதும் தாகமெடுத்தாலும் மட்டுமே நீர் அருந்த வேண்டும். மிகவும் களைப்புற்ற அல்லது வெப்பமேறிய பல நேரத்தில் நமது உடலுக்கு வேண்டியது சில நிமிட ஆசுவாசம்தானே தவிரச் சட்டென்று உட் செலுத்த வேண்டிய ஆற்றல் அல்ல.
இணைப்பில் தேங்கும் கழிவு
உடலின் குளிர்ச்சி – வெப்பம் இரண்டும் நீருக்குரிய சிறுநீரகம், வெப்பத்துக்குரிய இதயம் ஆகிய இரண்டு உறுப்புகளுடன் மட்டுமே தொடர்புடையவை அல்ல. உடல் அதிக வெப்பமடைந்த நேரத்தில் தாகமெடுக்காமல், ஆசுவாசப்படுத்திக் கொள்ளாமல் குடிக்கும் நீரால் வயிற்றுப் புண், வாய்ப் புண் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பொது வழக்கில் அதைச் சூட்டுக் கொப்புளம் என்று சொல்வதுண்டு.
நடக்க முடியாத அளவுக்குக் கால்வலி அதிகரித்துவிட்ட நிலையில், மருத்துவ சோதனை செய்து பார்த்து, இணைப்புகளில் நீர் அதிகமாக இருக்கிறதென்று நீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். உண்மையில் அவ்வாறு எடுக்கப்படுவது நீரல்ல. நீரை ஊடகமாகக் கொண்டு எலும்பு இணைப்புகளில் தேங்கியுள்ள உடற் கழிவேயாகும். எலும்பு இணைப்புகளிலும், கால் பாதங்களிலும் தேங்குவது நேரடியான நீர் அல்ல.
மூச்சுக் காற்றின் வழியாக வெளியேறுவதற்கும் மிகுதியாகத் தேங்கிவிட்ட காற்றுக் கழிவு அடர்ந்து நீர் வடிவத்துக்கு மாறிவிடுகிறது. அவ்வாறு மாறிய கழிவு உடலின் இயக்கமில்லாத கர்ப்பப் பை, தோள்பட்டை, முழங்கால் மூட்டுகளில் தேங்கிவிடுகிறது. அதிலும் மிகுதியான நீர் வடிவக் கழிவுகள் உடலின் உயிர்ப்புள்ள செல்லுக்கு வெளியே முட்டிக் காலின் கீழ்ப் பகுதியை நோக்கி இறங்குகிறது.
தொடர்ந்து அவ்வாறு தேங்கும் கழிவுதான் பாதங்களின் இயல்பான நிறத்தையும் தோலின் மென்மையையும் இழந்து ஏடாகவும், கறுப்பாகவும் மாறிவிடுகிறது. இந்தப் பகுதியில் ஊசியால் குத்தினாலும் சிலருக்கு வலி தெரியாது. காரணம் மேலே சொன்னதுபோல நமது உயிருக்கு அப்பாற்பட்ட நீராகும். இதுதான் ஒரு கட்டத்தில் தானாகவே குழிவை ஏற்படுத்தி வெளிர் மஞ்சள் நிறத்தில் அல்லது நிறமற்று பிசுபிசுப்புத் தன்மையில் நீர் வடிவில் வெளியேறுகிறது.
இதை வெளித் தள்ளுவது கழிவுப் பகுதிக்கு அருகில் உயிர்ப்புள்ள செல்களே ஆகும். காலில் நீர் வடிவக் கழிவு தேங்கி மிகுதியான கட்டத்தில் இடறிப் புண் ஏற்படுவதும் உடலியக்கத்தின் ஒரு பகுதியே ஆகும். காலில் கழிவுநீர் தேங்குவதற்குக் காரணம் சிறுநீரகத்தின் செயல் குறைபாடு மட்டுமே அல்ல. மாறாகச் செரிமான உறுப்புகளான வயிறு, சிறுகுடல் போன்றவையும் நுரையீரலும் முழு ஆற்றல் திறனுடன் இயங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீரின் அளவும் சிறுநீரின் அளவும்
குடிக்கும் நீரின் அளவு வெளியேறும் சிறுநீரின் அளவு இரண்டும் எப்போதும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டு மென்பதில்லை. ஆனால், அதீத நீரருந்தும் வேட்கையும் அதீத சிறுநீர்ப் போக்கும் உடலின் நீருடன் நேரடித் தொடர்பில்லாத பிற உள்ளுறுப்புகளின் பாதிப்பையே காட்டுகிறது. நாம் நீரே அருந்தாதபோதும் நமது உடலினுள் நீர் சேர்மானம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. உண்ணும் உணவில் உள்ள நீர்மத்தைச் சிறுநீரகம் பயன்படுத்திக் கொள்ளும். காற்றில் உள்ள ஈரப் பதத்தையும் சிறுநீரகம் உள்வாங்கிக்கொள்ளும். உணவின் நீர்மம் மட்டுமல்லாமல் உப்புச் சுவையும் சிறுநீரகத்தின் செயல் திறனைச் சரியான அளவில் வைத்திருக்க உதவும்.
உப்பால் அதிகரிக்கும் வேலைப் பளு
உப்பு எனும்போது அதனை வெறுமே சோடியம் குளோரைடுடன் மட்டுமே சுருக்கிக்கொள்கிறோம். சோடியம் குளோரைடை மிகுதியாக எடுத்துக்கொண்டாலும் மிகுதிப் படிவத்தை நீக்க, நாம் நீர் அருந்த நேரிடும். சோடியம் குளோரைடு மட்டுமல்ல. உயிர்த் தாதுக்களான பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை உணவில் மிகுதியாகச் சேர்க்கப்பட்டாலும் அதாவது ஒரே சுவையுள்ள உணவைத் தொடர்ந்து எடுத்து வருகிற போதும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நெப்ரான்களின் சுத்திகரிக்கும் வேலைப் பளுவும் கூடுதலாகிவிடும்.
உப்பைக் குறைப்போம்
வெப்ப மண்டலவாசிகளான நமது உடலிலிருந்து வியர்வை (கழிவு) உப்பாக வெளியேறிவிடும்போது நாவின் தேவையுணர்வுக்கு ஏற்ப உப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்தான். ஆனால், வியர்வை வெளியேறும் வாய்ப்புகள் குறைந்துவரும் நிலையிலும் நாம் உப்பின் பயன்பாட்டைக் குறைப்பதில்லை. நம்மளவுக்கு வேறெந்த நாட்டினரும் உப்பை இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக மேற்கத்தியரும், சீனர்களும் நம்மில் பத்தில் ஒரு பங்குகூட உப்பைச் சேர்க்க மாட்டார்கள். உப்பு மட்டுமல்ல பிற காரம், இனிப்பு, புளிப்புச் சுவைகளையும் சேர்க்க மாட்டார்கள்.
அவர்களை ஒப்பிட நம்மிடம் உடலுழைப்பு அதிகம் என்றாலும் இயந்திரமயமாதலுக்கு ஏற்ப நாம் உப்பைக் குறைத்துக்கொண்டால் நமது சிறுநீரகம் நன்றி பாராட்டும். உயிர்த் தன்மையும் ஈரத் தன்மையும் கொண்ட கீரை, காய்கறி, இறைச்சி அனைத்திலும் இயல்பாகவே உப்பு உண்டு. நாம் சமைக்கும்போது வேகும் முன்னர் உப்பைச் சேர்த்தால் மூலப் பொருளில் உள்ள உப்பு வெளிப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. சமைக்கும் பொருள் வேகும்போது உள்ளிருக்கும் உப்பு வெளிப்பட்ட பின்னர் இறுதியாகச் சுவைத்துப் பார்த்துக் குறைந்த அளவில் உப்பு சேர்த்தாலே போதும்.
தற்கால வாழ்க்கை முறையில் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் பாதிக்கும் மிக முக்கியமான அம்சத்தைப் பார்ப்போம்.
(தொடரும்...)
கட்டுரையாளர்,
உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT