Published : 18 Apr 2015 10:00 AM
Last Updated : 18 Apr 2015 10:00 AM
முக்கியமான நோய்களால் தாக்கப்படுவதைப் பிறவியிலேயே தடுக்க, கருவிலேயே திருத்தம் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலகிலேயே முதன்முறையாக, மூன்று பெற்றோர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உடலுக்குள் ரத்தம் செலுத்துவதையும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளையும் செய்யவே கூடாது, அது இயற்கைக்கு மாறானது என்று ஒரு காலத்தில் கண்டித்தார்கள். ஆனால், இன்றைக்கு அதுதான் பல உயிர்களை, கூடுதலாகச் சில காலத்துக்கு வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இந்தப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே குழந்தை - 2 தாய்
பெற்றோர் என்றாலே அம்மா, அப்பா என இருவர்தான். கருவில் மைட்டோகாண்ட்ரியா பிரச்சினையால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியாத தாய்க்கு, இன்னொரு பெண்ணிடம் இருந்து ஆரோக்கியமான உட்கருவைச் செலுத்துவதால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதன் காரணமாக 2 தாய்கள், ஒரு தந்தையின் மரபணுக்களுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் புதுமுறைக்கு அனுமதி வழங்கலாம் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஒப்புக்கொண்டுள்ளனர்.
மரபணுவில் உள்ள இழைமணி (mitochondria) பழுதாக இருந்தால் பிரிட்டனில் 6,500-ல் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது. பிரிட்டனில் ஆண்டுக்கு நூறு குழந்தைகள் இப்படிப் பிறக்கின்றன. குழந்தையின் மரபணு செல்லுக்குள் ஆற்றலைத் தரும் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதால், பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதன்படி பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை துயரம் நிரம்பியதாக இருக்கிறது. பல நேரம் இறந்தும் விடுகின்றன. இதற்குச் சிகிச்சையே கிடையாது. எனவே, கருத்தரிக்கும்போதே இந்தக் குறைபாட்டைத் தடுக்க ஆரோக்கியமான பெண்ணின் சினை முட்டையிலிருக்கும் கருமையப் பகுதியை, குறைபாடுள்ள பெண்ணின் சினை முட்டையில் பொருத்திக் கருவுறச் செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
கடும் எதிர்ப்பு
இந்தச் சிகிச்சை முறை உலகின் எந்த நாட்டிலும் இதுவரை பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை, எனவே மனிதர்களிடம் இதுவரை ஆய்வு நடக்கவில்லை. விலங்குகளிடம் ஆய்வு நடத்தி, அதில் வெற்றிகரமான முடிவு கிடைத்திருக்கிறது. இப்படியெல்லாம் மனிதக் கருவில் விளையாட வேண்டுமா என்று பலர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணம், இந்தப் புதிய மருத்துவத் தொழில்நுட்பம் காரணமாகப் பிறக்கும் குழந்தையின் உடலில் 2 தாய், ஒரு தந்தையின் மரபணுக்கூறுகள் இடம்பெறும். இதனால்தான் ‘3 பெற்றோர் குழந்தை' என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அதன் இழைமணியில் செய்யப்பட்ட திருத்தம், அதன் சந்ததிகளிடமும் தொடரும். மைட்டோகாண்ட்ரியா திருத்தம் ஒரு முறை செய்யப்பட்டால், அடுத்தடுத்து வழிவழியாக வந்துகொண்டேயிருக்கும்.
ஆரோக்கியக் குழந்தை
இயற்கையின் படைப்பில் இப்படி விளையாடலாமா என்ற ஆட்சேபத்தைப் புறந்தள்ளிவிட்டால், இந்தப் புதிய வகை ஆராய்ச்சி ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்கும் வழி செய்துள்ளது. மரபியல்ரீதியாக உள்ள குறைகளை நீக்கி ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை இந்த முறை சாத்தியப்படுத்தும். எனவே, இதற்கு எழுந்துள்ள ஆட்சேபத்தைப் பெரிதாகக் கருத வேண்டியதில்லை.
மரபணு இழைமக் கோளாறு ஏன் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அதைவிட கொடுமை இந்தக் குறையை, அடுத்துவரும் சந்ததிக்கும் தந்துவிடுவோமோ என்று ஒரு தாய் மருகுவதுதான். அந்தக் கவலையைப் போக்குவதைவிட, நல்ல விஷயம் வேறு உண்டா?
குழந்தைகளை ஆர்டர் செய்வதா?
ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை அனுமதித்தால் தன்னுடைய மகன் அல்லது மகள் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளும் அளவுக்கு, இந்தப் பிள்ளைப்பேறு மாறிவிடும் என்பது பலருடைய குற்றச்சாட்டு. மிகவும் அபூர்வமான தருணத்தில் குறையுள்ள குழந்தை பிறப்பதைத் தடுப்பதற்காக ஒரு சிகிச்சை முறையைக் கையாண்டால், அதையே வியாபாரமாக்கி எல்லாக் கருக்களிலும் மருத்துவர்கள் மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பார்கள் என்று வசைபாடுவது சரியாகத் தெரியவில்லை.
இந்தத் தொழில்நுட்பம் பாதுகாப்பானதல்ல என்பது விடுக்கப்படும் இன்னொரு எச்சரிக்கை. எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தாலும், அதற்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்புவது வழக்கம்தான். ஒரு வேளை தவறான விளைவு ஏற்பட்டுவிட்டால், அதனால் பாதிக்கப்படப்போகும் உயிர் இனிமேல்தான் பிறக்கப் போகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படித் திருத்தலாமா?
அதனால் கருவில் உள்ள இழைமங்களை மாற்றுவது, திரிப்பது, கூட்டுவது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று இன்னொரு வாதம் வலுவாக வைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஆரோக்கியமான பெற்றோர்களுடன், ஆரோக்கிய மில்லாத பெற்றோர்களும் குழந்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிறக்கப் போகும் குழந்தையைக் கேட்டுக்கொண்ட பிறகு, பிள்ளைப்பேறு தொடர்பாக அவர்கள் முடிவு எடுப்பதில்லை. அப்படி இருக்கும்போது மரபணு இழைம பாதிப்புள்ளவர்களின் விஷயத்தில் மட்டும், ஏன் புதிய நடைமுறையை அனுமதிக்கக் கூடாது?
பிறக்கப் போகும் குழந்தை மட்டு மல்ல, இனிப் பிறக்க வேண்டாம் என்று நினைக்கும் குழந்தை பற்றிக்கூடப் பெற்றோர்கள் இப்போது முடிவெடுக்கிறார்கள். அதற்கென்ன சொல்வது?
பிரிட்டனில் உள்ள ஆட்சியாளர்களும் அறிவியல் அறிஞர்களும் இந்த அம்சங்களை எல்லாம் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தைக் கையாள்வதற்கான உரிமம் 2005-ல் தரப்பட்டது. பிறகு சோதனைச் சாலைகளிலும் விலங்குகளின் கருக்களிலும் 3 முறை பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது கவலைப்படும்படியாக ஏதும் நடக்கவில்லை.
பரம்பரை நோய்களுக்கும் தீர்வு
எச்.எஃப்.இ.ஏ. என்ற அமைப்பு செயற்கை கருவூட்டல், கரு வளர்ப்பு சோதனைகளைக் கட்டுப்படுத்துகிறது, கண்காணிக் கிறது. அது கட்டுப்பெட்டியான அமைப்பு என்று பலர் கண்டித்தாலும், மனித குலத்தின் நலன் கருதியே அது செயல்பட்டுவருகிறது.
இழைமக் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இனி இத்தகைய குழந்தைப் பேற்றுக்காக அணுகப்போவதில்லை. தீராத பரம்பரை நோய் உள்ள பலரும்கூட இந்த நிலையத்தின் கதவைத் தட்டி, தங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவ வேண்டும் என்று கேட்பார்கள். எனவே, இப்போதைய சர்ச்சை மட்டுமல்ல எதிர்காலச் சர்ச்சைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் தயாராகிக்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT