Published : 21 Mar 2015 12:18 PM
Last Updated : 21 Mar 2015 12:18 PM
நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.
இன்சுலின் சுரப்பைத் தடுப்பதற்கெனப் பொதுவான அம்சங்கள் சில இருக்கின்றன. நீரிழிவு நோய் உருவாவதற்கு முன்பே இவை நம் உடலில் காணப்படுகின்றன; பின்னொரு நாளில் நீரிழிவு நோய் வருவதைத் தூண்டுகின்றன. இவற்றை ‘சர்க்கரை நோயின் முன்காரணிகள்’ ( Diabetes Risk Factors ) என்கிறோம். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும், நீரிழிவு நோய் வரலாம்.
பரம்பரைத் தன்மை
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. நம் உடலில் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில்தான் மரபணுக்கள் (Genes) உள்ளன. இவைதான் செல்கள் எப்படி உருவாக வேண்டும், எப்போது உருவாக வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கற்றுத் தருகின்றன.
உதாரணமாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் கணையத்தில் பீட்டா செல்கள் எப்போது, எவ்வளவு இன்சுலினைச் சுரக்க வேண்டும் என்று இந்த மரபணுக்கள்தான் கற்றுத்தரும். அதன்படி அந்தச் செல்கள் இன்சுலினைச் சுரந்து, ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் வைத்துக்கொள்ளும். அதனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவது இல்லை.
புத்தகங்களை அச்சிடும்போது பிழைகள் ஏற்படுவதைப்போல, சிலருக்கு இந்த மரபணுக்கள் உருவாகும்போது பிழைகள் ஏற்பட்டுவிடும். அப்போது, உடலில் நடைபெற வேண்டிய இயல்பான பணிகள் நடைபெறாது. உதாரணமாக, இன்சுலினைச் சுரக்கச் செய்கின்ற மரபணுவில் பிழை உண்டானால், இன்சுலின் சுரப்பதில் சிக்கல் ஏற்படும்.
நீரிழிவு நோய் வந்துவிடும். இந்த மரபணுக்கள் பெற்றோரிடமிருந்து இவர்களுக்கு வந்திருக்கும். இனி, இவர்கள் வாரிசுகளுக்கு அவை கடத்தப்படும். அப்போது, அவர்களுக்கும் நீரிழிவு நோய் வரும். இவ்வாறு, அந்தப் பரம்பரையின் வம்சாவளியில் வருபவர்கள் அனைவருக்கும் நீரிழிவு நோய் கடத்தப்படுகிறது.
உடல் பருமன்
சர்க்கரை நோயை வரவேற்கும் அடுத்த காரணி, உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும். அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இப்படித்தான் நீரிழிவு நோய் வருகிறது.
இன்னொரு வழி இது: உடல் திசுக்களில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்பு சேரும்போது செல்களின் இயல்புத் தன்மை மாறுகிறது. இதனால், செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் சிரமப்படுகிறது. அப்படியே சென்றாலும், செல்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால், இன்சுலின் தனது இயல்பான பணியைச் செய்ய முடிவதில்லை. இதன் விளைவாகவும் நீரிழிவு நோய் ஏற்படும்.
இன்சுலின் எதிர்ப்பு உணர்வு
உடலில் கொழுப்பு சேரச் சேர, கொழுப்புத் திசுக்களில் உள்ள செல்கள், இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை; இன்சுலினை எதிர்க்கின்றன. இன்சுலின் செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.
சில வேளைகளில், கையில் சாவி இருந்தாலும், அது பூட்டைத் திறக்கச் சண்டித்தனம் செய்யும் அல்லவா? அதுபோல, சிலருக்கு இன்சுலின் சரியாகச் சுரந்தாலும், அது சரிவர வேலை செய்யாது. காரணம், இவர்களுடைய செல்களில் ‘இன்சுலின் ஏற்பான்கள்' (Insulin Receptors) குறைவாக இருக்கும். இதனால், செல்களுக்குள் குளுகோஸ் நுழைய முடியாமல் ரத்தத்தில் தங்கிவிடும். இதன் விளைவாக, ரத்தச் சர்க்கரை அதிகமாகி, இவர்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிடும். இதைத்தான் ‘இன்சுலின் எதிர்ப்பு உணர்வு' (Insulin Resistance) என்கிறோம்.
அதிக உடல் எடை உள்ளவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பு குறைந்தவர்கள், ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள், அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுகிறவர்கள் ஆகியோருக்கு இன்சுலின் எதிர்ப்பு உணர்வு அதிகமாக இருக்கும். சிலருக்கு, பரம்பரை காரணமாகவும் இது வரக்கூடும்.
மன அழுத்தம்
நீரிழிவு நோய்க்கும் மன அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. கவலை, கோபம், இழப்பு, பயம், பதற்றம், ஏமாற்றம், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படும்போது, நம் உடலில் அட்ரீனலின், நார்அட்ரீனலின், குளுகான், கார்ட்டிசால், வளர்ச்சி ஹார்மோன், செரட்டோனின் ஆகியவை அதிகமாகச் சுரந்து, இன்சுலின் செயல்படுவதைத் தடுக்கின்றன.
இதனால் நீரிழிவு நோய் வருகிறது. மன அழுத்தம் காரணமாக, ஒருவருக்கு நீரிழிவு நோய் புதிதாகவும் வரலாம் அல்லது ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்தால் அது அதிகப்படலாம்.
அடிக்கடி கர்ப்பம் அடைதல்
கர்ப்பமான பெண்களுக்கு, கர்ப்பப்பையில் குழந்தை வளர்ந்து வரும்போது சில ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் வருகிறது. இந்த ஹார்மோன் பிரச்சினை பிரசவத்துக்குப் பிறகு பல பேருக்குச் சரியாகிவிடுகிறது. இதனால், குழந்தை பிறந்த பின்னர், இவர்களுக்கு நீரிழிவு நோய் மறைந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.
அதிலும் அடிக்கடி கர்ப்பமாகும் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினையும் அடிக்கடி வருவதால், நீரிழிவு நோய் நிலைத்துவிடுகிறது. குறிப்பாகச் சொன்னால், கர்ப்பத்தின்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தையைப் பெற்ற பெண்கள், பெரிய தலையுடன் குழந்தையைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
உயர் ரத்த அழுத்தம்
சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்த மும் மிக நெருங்கிய ‘நண்பர்கள்’. சர்க்கரை நோயை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகள் ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தும் என்பதால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் வாய்ப்புண்டு. ஆகவே, ரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவுக்கு அதிகமாக உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ரத்த மிகைக் கொழுப்பு
உடல் பருமன் உள்ளவர்களில் பெரும்பாலோருக்கு ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவே இருக்கிறது. ஒருவருக்குத் திசுக் கொழுப்பும் ரத்தக் கொழுப்பும் அதிக அளவில் இருக்கும்போது, அவருக்குக் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகிவிடும். இந்தக் கொழுப்பு அமிலங்கள் கணையத்தைப் பாதிக்கும். அப்போது நீரிழிவு நோய் வரும்.
சினைப்பை நீர்க்கட்டிகள்
பெண்களுக்குச் சினைப்பையில் உருவாகின்ற ஒரு வகை நார்க்கட்டிக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி' (Poly Cystic Ovary Syndrome - PCOS) என்று பெயர். இந்த நோய் ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone) எனும் ஹார்மோன் அதிகமாவதால் வருகிறது. உடல் பருமன் உள்ள பெண்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது. இவர்களுக்கு முகத்தில் பருக்களும், முடியும் அதிகமாக இருக்கும். மாதவிலக்கு சரியாக நிகழாது. கழுத்தின் பின்புறத் தோல் கறுப்பாக, தடிப்பாக, வரிவரியாக இருக்கும் (Acanthosis nigricans). இந்த நோய் உள்ள பெண்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது.
சோம்பலான வாழ்க்கை முறை
உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உடலில் சர்க்கரை அதிகரிக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரையைச் செலவழிக்க வழியில்லாமல், கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல் எடை அதிகரிக்கிறது. இந்த மாதிரி அதிகரித்த எடைக்கும் சேர்த்துக் கணையம் இன்னும் அதிக அளவில் இன்சுலினைச் சுரக்கிறது. இப்படித் தொடர்ந்து சுரக்கும்போது, கணையம் சீக்கிரத்தில் களைத்துப் போகிறது. நாளடைவில் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடுகிறது அல்லது நின்றுவிடுகிறது. இதனால், இவர்களுக்குச் சீக்கிரமே நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.
சர்க்கரை நோயைத் தடுக்க முடியுமா?
மேற்சொன்ன வழிகளில் நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்புள்ளவர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால் நீரிழிவு நோய் வருவதைத் தள்ளிப்போடலாம்.
# மாவுச்சத்துள்ள உணவு வகைகளையும் கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளையும் இனிப்புப் பண்டங்களையும் குறைத்துச் சாப்பிட வேண்டும்.
# எண்ணெயில் பொரித்த, வறுத்த பண்டங்களையும். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.
# நார்ச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
# குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
# தினமும் 45 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி / உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT