Last Updated : 21 Mar, 2015 12:34 PM

 

Published : 21 Mar 2015 12:34 PM
Last Updated : 21 Mar 2015 12:34 PM

இவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை சாத்தியமே!

உலக டவுன் சிண்ட்ரோம் நாள்: மார்ச் 21

வழக்கத்துக்கு மாறாக முக அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் கொண்ட குழந்தைகளை நாமும் கடந்து சென்றிருப்போம். அவர்களை மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது தவறு, இது மரபணுக் கோளாறால் ஏற்படுவது.

தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடனோ அல்லது இவற்றில் ஒன்றிரண்டு அடையாளங்களுடனோ இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய பிரச்சினை, டவுன் சிண்ட்ரோம் என்ற குறைபாடு. இவர்களுடைய புறத்தோற்றமும் உடல்மொழியும் மனநலப் பாதிப்பு உடையவர்கள் என்று தவறான புரிதலை ஏற்படுத்துகின்றன.

டவுன் சிண்ட்ரோம் ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. போதிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால், இவர்களும் மற்றவர்களைப்போல் ஓரளவுக்கு இயல்பாக மாற முடியும்.

என்ன காரணம்?

பொதுவாக நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும் இவை, ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாதலின்போது தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும் 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும்.

இந்தக் குரோமோசோம் இணைவின்போது தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும் 21-வது குரோமோசோமுடன் அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால் 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும் 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வுதான் டவுன் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத் தன்மை இருக்கும் என்பதால் தமிழில் இது மன நலிவு எனப்படுகிறது.

எப்படிக் கண்டறிவது?

இவர்களுக்கு இயல்பான தசை உறுதி குறைந்து, தளர்வாக இருக்கும். பிறக்கும்போதே எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தைவிட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக்கொண்டும் காணப்படும்.

மூக்குத் தட்டையாகவும் கண்கள் மேல்நோக்கிச் சரிந்தும் இருக்கும். உள்ளங்கையில் மடிப்பு போல ஒரே ஒரு பெரிய ரேகையுடன், கை அகன்றும் விரல்கள் குட்டையாகவும் இருக்கும். இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே குழந்தைக்கு இருக்க வேண்டுமென்பதில்லை. இவற்றில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மன நலிவு கொண்ட குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றக் குழந்தைகளைவிட குறைவாகவே இருக்கும். இந்தக் குழந்தைகள் தவழ்வது, உட்காருவது போன்றவற்றைச் செய்ய மற்றக் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிகக் காலம் எடுத்துக்கொள்வார்கள்.

பரிசோதனை முறைகள்

குழந்தை கருவில் இருக்கும்போது, தாயிடம் மேற்கொள்ளப்படும் சில பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். ஆனால் இந்தச் சோதனை, குழந்தைக்கு நிச்சயம் மன நலிவு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தாது. டி.என்.ஏ. பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம் குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம்.

ரத்தப் பரிசோதனையில் தாயின் ரத்த மாதிரியைப் பரிசோதித்து அறியப்படும். மீயொலி பரிசோதனை மூலம் குழந்தையின் பின் கழுத்துப் பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால் குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.

சிகிச்சை முறைகள்

மன நலிவுக் குறைபாட்டை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியிலும் செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். புலன் உணர்வு, உடலியக்கச் செயல்பாடுகள், அறிவாற்றல் ஆகியவற்றில் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும். இதற்கெனத் தனியாகப் பயிற்சியளித்தால், அடிப்படை வேலைகளுக்குக் குழந்தை பிறரைச் சாராமல் இருக்க முடியும். பயிற்சிகளுக்கு இடையே மருத்துவக் கண்காணிப்பும் அவசியம்.

மன நலிவுடைய குழந்தைகளுக்கு இதயக் கோளாறுகள், நாளாமில்லாச் சுரப்பிக் குறைபாடு, நரம்பியல் சிக்கல், காது-மூக்கு-தொண்டை தொடர்பான பிரச்சினை, இரைப்பைக் கோளாறுகள், செரிமானப் பிரச்சினைகள், தொற்றுநோய் ஆபத்து போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால், அவற்றுக்குரிய நிபுணர்களிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இவை தவிர மன நலிவுடைய குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தொடர்ச்சியான பயிற்சிகளும் இதமான குடும்பச் சூழலும் அவசியம். மொழி மேம்பாட்டுக்கும் சமூகத் தொடர்புக்கும் பயிற்சிகள் அவசியம். தேவைப்பட்டால் முகச்சீரமைப்பு அறுவைச் சிகிச்சையும் செய்துகொள்ளலாம்.

தவிர்க்க முடியுமா?

மன நலிவு என்பது மரபணு சார்ந்த குறைபாடு என்பதால், அதை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்க முடியாது. ஆனால், வயது முதிர்ந்த தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மன நலிவு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. முப்பத்தைந்து வயதில் கருவுறும் பெண்களில் 350 பேரில் ஒருவருக்கு, மன நலிவு பாதிப்புடன் குழந்தை பிறக்கக்கூடும்.

வயது அதிகரிக்கும்போது இந்த விகிதமும் அதிகரிக்கும். நாற்பத்தைந்து வயதில் கருவுறும் முப்பது பெண்களில் ஒருவருக்கு, மன நலிவுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். அதேபோல் முதல் குழந்தை மன நலிவு குறைபாட்டுடன் இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும். மரபு வழியாகவும் இந்தக் குறைபாடு தொடரலாம்.

பொதுவாழ்க்கை சாத்தியமே

மன நலிவுக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் அவசியம். அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொண்டுவருவதற்கான பயிற்சியும் முயற்சியும் தேவை. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மன நலிவு குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x