Published : 28 Feb 2015 11:20 AM
Last Updated : 28 Feb 2015 11:20 AM
குளிர்காலம் முடிந்து கோடை தொடங்கப் போகிறது. பொதுவாகவே தட்பவெப்பநிலை மாறும்போது வைரஸ்கள் வேகமாக வேலையைக் காட்டத் தொடங்கும். சளி, காய்ச்சல் தொடங்கி அம்மைவரை பல நோய்கள் தாக்கும். குறிப்பாக அம்மை நோயின் தாக்கம், இந்தப் பருவத்தில் அதிகமாக இருக்கும். தெய்வ நம்பிக்கையுடன் இணைத்துப் பார்க்கப்படும் அம்மை நோயிடம் இருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது? அது வராமல் தடுக்க வழி இருக்கிறதா?
வெப்பம் தாங்கும் வைரஸ்
பொதுவாகவே வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ், வெப்பத்தைத் தாங்க இயலாத வைரஸ் என வைரஸ்கள் இரண்டு வகைப்படும். வெப்பத்தைத் தாங்க முடியாத வைரஸ்கள் மூலம் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெயில் காலத்தில் இந்தப் பிரச்சினைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால், அம்மை நோயை ஏற்படுத்தும் வைரஸ், வெப்பத்தைத் தாங்கக்கூடிய வைரஸ். சாதாரண பருவ நிலையிலும் பரவக்கூடியது. குறிப்பாகக் கோடை காலத்தில் அதிகரிக்கக்கூடியது. இதனால்தான் வெயில் காலம் முழுமையாகத் தொடங்காத நிலையிலும்கூட, இப்போதே அம்மை நோயின் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது.
பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை என அம்மையில் பல வகைகள் உண்டு. ‘வேரிசெல்லா சூஸ்டர்’ என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம். ‘பாராமிக்ஸோ’ குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ், தட்டம்மையை ஏற்படுத்துகிறது.
அறிகுறிகள்
அம்மை நோயின் அறிகுறியாக முதலில் காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து பசியின்மை, உடல் பலவீனம் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் நீர்க்கட்டியைப் போன்ற சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர்கோத்துக் காணப்படும். நிறம் மாறிக் கொப்புளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர், நீர் வறண்டு கொப்புளங்கள் உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி, தொடர்ந்து மிதமான காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இந்தக் காலத்தில் இருக்கும். ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளங்கள் உலர்ந்துவிடும்.
பின்விளைவுகள்
பொதுவாக அம்மை நோய் ஏற்பட்டால் தெய்வம் இறங்கியிருக்கிறது என்று கருதும் பழக்கம் கிராமப்புற மக்களிடம் மட்டுமல்ல, நகர்ப்புற மக்களிடமும் நிலவுகிறது. வேப்பிலையைத் தலைமாட்டில் வைத்துக்கொள்வது, வேப்பிலையை அரைத்துப் பற்று போட்டுக்கொள்வதுடன் நிறுத்திவிடுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் மருத்துவரிடம் செல்வதைக்கூடத் தெய்வக் குற்றமாகப் பார்க்கிறார்கள். இது முற்றிலும் தவறு என்கிறார்கள் மருத்துவர்கள்.
“அம்மை தாக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைத்தியர்கள் வந்து பார்க்க வசதியாகவும் அந்தக் காலத்தில் அம்மை நோய் தாக்கப்பட்டவர்களைக் கோயில்களில் தங்க வைப்பார்கள். அதை பலர் இப்போதும் பின்பற்றுகிறார்கள். அம்மை நோயைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் வெப்பம் அதிகமாகி நுரையீரல் காய்ச்சல் (நிமோனியா), நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூளை காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற மற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடலாம்.
எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை வேப்பிலையில் படுக்க வைப்பது, வேப்பிலை அரைத்துப் போட்டுக்கொள்வதுடன் விட்டுவிடக்கூடாது. அம்மை நோய் வந்தால் அதைக் குணப்படுத்த மருந்து இல்லை. அதேநேரம் அதன் வீரியத்தை மட்டுப்படுத்தவும், அம்மை நோயால் வரக்கூடிய மற்ற நோய்களைத் தடுக்கவும் ஆன்ட்டி வைரல் மாத்திரைகள் இருக்கின்றன. வலி, எரிச்சல் ஆகியவற்றைத் தடுக்கவும் மருந்துகள் உண்டு” என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் எழிலன்.
யாருக்குத் திரும்ப வரும்?
ஒருமுறை அம்மை நோய் வந்துவிட்டுப் போனால், பிறகு வாழ்நாள் முழுவதும் வராது என்று நம்புகிறோம். அது உண்மைதான், அம்மை நோய் அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புத் தன்மையை ஏற்படுத்திவிடும் என்கிறார் எழிலன். “அதேநேரம், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருப்போர், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள், காசநோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, ஏற்கெனவே அம்மை நோய் வந்திருந்தாலும்கூட மீண்டும் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதேபோல குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கும் மீண்டும் வரலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் தாக்கினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.
அம்மை நோய் காற்றில் எளிதாகப் பரவக்கூடிய நோய். அம்மையால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், இருமல், தும்மல் மூலமும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். குறிப்பாக ஒருவர் அம்மை நோயால் முழுமையாகத் தாக்கப்படுவதற்கு முந்தைய முதல் மூன்று நாட்களும், வந்து சென்ற பின் இரண்டு நாட்களும்தான் அம்மை நோய் வேகமாகப் பரவும். எனவே, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவரை அப்போது தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்" என்று ஆலோசனை சொல்கிறார் எழிலன்.
பத்தியம் வேண்டாம்
அம்மை நோய் ஏற்பட்ட பிறகு பத்தியம் இருக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால், எந்தப் பத்தியமும் இருக்கத் தேவையில்லை. அதேநேரம் ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூட்டைத் தணிக்கத் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். காரம், எண்ணெய், மசாலா பொருட்களை உணவில் தவிர்த்தால் போதும். இந்த உணவு வகைகள் உடலில் பாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அசைவ உணவு வகைகளைச் சாப்பிட விரும்பினால், சூப் வைத்துச் சாப்பிடலாம்.
அதேநேரம், அம்மை நோய் தாக்குவதைத் தடுக்கக் குழந்தைகளுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டும். இதுவரை அம்மை நோய் வராத பெரியவர்கள்கூடத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிகளை சரியான காலத்தில் போட்டுக்கொள்வதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். அதேநேரம் எல்லாத் தடுப்பூசிகளும் எல்லா அம்மை நோய்களையும் வாழ்நாள் முழுக்கத் தடுப்பதில்லை.
முறையான மருத்துவம் மற்றும் உணவு முறையைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்றுநோய்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிகுந்த முன்ஜாக்கிரதை உணர்வும், நோய் அதிகம் பரவிக் கொண்டிருக்கும்போது பொது இடங்களில் பயணம் செய்வதைக் கூடிய மட்டும் தவிர்ப்பதும் நல்லது.
கூடுதல் கவனம் தேவை
# ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பிலோ, விதைப்பையிலோ அம்மைக் கொப்புளங்கள் தாக்கியிருந்தால் மருத்துவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெற்று, உரிய மருந்து-மாத்திரையை உட்கொள்ள வேண்டும். பாதிப்பு கடுமையாக இருக்கும்பட்சத்தில் எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதேபோல் பெண் பிறப்புறுப்பில் அம்மை நோய் தாக்குதல் இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
# கர்ப்பிணிப் பெண்களை அம்மை நோய் தாக்கினால், உடனே பயப்பட அவசியம் இல்லை. மருத்துவர் ஆலோசனை மூலம் தாயையும் சேயையும் பாதுகாக்க முடியும்.
# அம்மை கொப்புளங்களில் லாக்டோ காலமைன் லோஷனை பஞ்சில் தோய்த்து மெதுவாகத் தடவிவிட்டால் எரிச்சல் மட்டுப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT