Published : 31 Jan 2015 03:07 PM
Last Updated : 31 Jan 2015 03:07 PM
திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சின்னையன்பேட்டையில் உள்ள சின்னையன் குளத்தில் படத்தில் உள்ள சிற்பம் காணப்படுகிறது. இரு விரைகளிலும் ஏற்பட்ட ஓதத்தால் விரை வீக்கத்துடன் துன்பமடைந்த நோயாளனின் கற்சிற்பம் இது. துயரத்தை வடித்த சிற்பியின் மனித நேயம் மனதை நெருடுகிறது. பழந்தமிழில் இந்நோய் ஓதம் என்று அழைக்கப்பட்டது.
சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் பற்றி வரும் இடங்களில், ஓதம் (கடல் அலையின் ஏற்றவற்றம்) குறித்த வர்ணனைகள் இடம்பெறுகின்றன. இங்கு ஓதம் என்னும் சொல்லுக்கு ஊதிப் பெருப்பது என்று பொருள்.
இது வேறு!
தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளிலும் ஓதம் என்னும் சொல் வழக்கில் இருந்தது. ஆனால் அது கடலியல், புவியியல் சார்ந்த சொல் அல்ல. ஆண்களின் விரைகளில் வரும் வீக்க நோயை அது குறித்தது. விரையில் அடிபட்டாலோ விரையில் கட்டி ஏற்பட்டாலோ விரையைச் சுற்றியிருக்கும் சவ்வுப்பையில் சுரக்கிற சுரப்புநீர் அதிகமாகச் சுரந்து விரையில் வீக்கம் உண்டாகும்.
இந்தச் சுரப்புநீர் சில வேளை சாதாரண அளவில் சுரந்தாலும், அது உடம்புக்குள் திரும்பிச் செல்கிற நிணநீர்ப் பாதையை அடைத்துக் கொள்வதால் விரைகள் வீங்கக்கூடும். இதனால் மெல்லமெல்ல விரை பெரிதாகிக்கொண்டே போகும். இதற்குத்தான் ஓதம் என்று பெயர். இந்த நோய் இரு விரைகளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ வரக்கூடும்.
விரைகளை ஊதிப் பெருக்கும் இந்த நோயை ஓதம் என்றே அழைத்தனர் சமவெளிப் பகுதியினர். இந்நோயுற்றோர் படும் அவமானங்கள் வேதனைக்குரியவை. இந்திய மருத்துவ முறைகளில் இந்நோய்க்குத் தரப்படும் மருந்துகள் அக்காலத்திலும் இக்காலத்திலும் பயனளிப்பதாக இல்லை.
என்ன சிகிச்சை?
"ஆங்கில மருத்துவ முறை மூலம் செய்யப்படும் அறுவைமருத்துவம் ஒன்றே இதற்குத் தீர்வாகும்" என்று மருத்துவம் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நோய் அக்கால ஆண்களை மிகுந்த துன்பத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அதுபோல இந்நோய் பற்றிய மூடநம்பிக்கைகளும் நிலவியிருக்க வேண்டும்; அளவுக்கு அதிகமான உடலுறவால் இந்நோய் வருமென்பது அதிலொன்று.
தற்காலத்தில் இந்நோய் பெரும்பாலும் மறைந்துவிட்டதாலும், இச்சொல்லின் மீதுள்ள அருவருப்பாலும் ஓதம் என்னும் பழந்தமிழ் சொல் தற்காலத்தில் மறைந்துவிட்டது; அதற்குப் பதில் விரைவீக்கம் என்னும் பெயரை மக்கள் கையாள ஆரம்பித்துவிட்டனர்.
பழைய நோய்தான்
ஓதம் பாதிக்கப்பட்ட மனிதனை நம் சமூகம் பரிதாபமாகப் பார்த்ததைவிட அருவருப்புடன் பார்த்திருக்க வேண்டும். ஓதத்தால் பாதிக்கப்பட்ட மனிதனை அச்சத்துடன் அக்கால மக்கள் பார்த்திருக்க வேண்டும். இல்லையெனில் நோயுற்ற ஒருவனைச் சிற்பமாக வடிக்க வேண்டிய அவசியம் சின்னையன்குளத்துக்கு நேர்ந்திருக்காது.
ஓத நோய் சமூகத்திலிருந்து மறைந்துவிட்டது மகிழ்ச்சியைத் தந்தாலும் ஓதம் என்னும் இயல்பு பெயர் மறைந்தது வருத்தத்தை அளிக்கிறது. இனி வரப்போகும் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழில் ஓதம் என்னும் சொல் இருந்ததை அறியாது, விரைவீக்கம் என்று மொழியாக்கம் செய்யலாம். இந்நோய் அன்றும் இருந்தது என்பதற்காக, சின்னையன் குளத்துச் சிற்பி அந்தச் சிற்பத்தைச் செதுக்கினானோ!
மேகலையா? கருப்பை இறக்கமா?
சின்னையன் குளத்தில் காணப்படும் சிற்பங்களில் மற்றொன்று முதிய பெண்ணின் புடைப்புச் சிற்பம்.
அப் பெண்ணின் கால்களுக்கிடையே, இடைக்குக் கீழே, பெண்ணுறுப்பில் பந்து போன்ற பொருளொன்று ஒட்டிக்கொண்டிருப்பதைச் சிற்பத்தில் காணலாம். இச்சிற்பத்தைப் பாலியல் தொடர்புடைய சிற்பமென்று பலர் கருதினர். கலைவிமர்சகர் சிலர், தொங்கும் பந்து போன்ற பொருளை மேகலை என்ற ஆபரணம் என்று கூறிவந்தனர். ஆனால், இவற்றுக்கு எந்த நிரூபணமும் இல்லை.
சரி, அது என்ன பொருள்; அவ்வாறு சிற்பி வடிக்கவேண்டிய அவசியம் என்ன என ஆராயும்போது, சின்னையன் குள சிற்பத் தொகுதியில் ஆண்களுக்கு வரும் ஓதம் என்னும் நோயாளி சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தப் பின்னணியில் இப்பெண் கருப்பை இறக்க நோயுடையவர் என்பது உறுதியாகிறது. அதிகப் பிள்ளைப்பேற்றின் காரணமாக, கருப்பையின் நாளங்கள் தளர்ந்து, பிறப்புறுப்பின் வாயிலாகப் பிதுக்கப்பட்டு வெளியே தள்ளப்படுவதே கருப்பைப் பிதுக்கம் அல்லது கருப்பை இறக்கம். இது பெரும்பாலும் மூதாட்டிகளுக்கு வரும் நோயென்று கூறுகின்றனர். சில வேளை ஈனிய மகளிர், கவனமின்றி அதிகப் பளுவைத் தூக்கி வேலை செய்ய நேரிட்டாலும் இந்நோய் வரலாம்.
தற்காலத்தில் அலோபதி மருத்துவ முறையில் கவ்விகளைப் பொருத்துவதன் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதற்கு முன் இந்நோய்க்குத் தக்க மருந்துகள் இல்லை. நம் பாட்டிகள் பலர் இந்நோயால் அவதியுற்று, கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் நிச்சயமாக ஆளாகியிருப்பார்கள்.
கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT