Last Updated : 10 Jan, 2015 01:01 PM

 

Published : 10 Jan 2015 01:01 PM
Last Updated : 10 Jan 2015 01:01 PM

ஒற்றைத் தலைவலியை குறைக்கும் வழி

நவீன வாழ்க்கை முறை, வேலை நெருக்கடியால் மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு கடுமையாக அதிகரித்துவருகிறது. சரியான வாழ்க்கை முறை, மாற்று மருத்துவ முறைகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். வெளிச்சம், அதிகச் சத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதற்கான பொதுவான காரணங்கள். மூக்கடைப்பு, வாந்தி போன்றவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்.

தாங்க முடியாத அளவுக்குத் தலையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, மிதமாகவோ அல்லது அதிகபட்ச அளவிலோ 4 மணி நேரம் முதல் மூன்று நாட்களுக்கு (72 மணி நேரம்வரை) நீடிக்கலாம். ஒற்றைத் தலைவலி ஒருமுறை வந்துவிட்டால், அதன் பின் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

போதிய அளவுக்கு ஓய்வு எடுக்காமல் இருப்பது, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலியால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

ஆயுர்வேத அணுகுமுறை

வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். பொதுவாக வலி தோன்றும் பகுதியில் குளிர்ந்த நீரை வைப்பது தற்காலிக நிவாரணம் தரும்.

ஆயுர்வேத சிகிச்சையில் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். மன இறுக்கம், வேலைச் சூழல், ஹார்மோன் சமநிலையில்லாமை போன்ற காரணங்கள் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கின்றன. ஆயுர்வேதத்தில் இதை `சூர்யவர்தா’ என்று குறிப்பிடுகிறோம்.

தலையில் உள்ள நரம்புகள், ரத்தச் செல்கள் வீக்கமடைவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. உணர்ச்சிமிகுந்த - இறுக்கமான மனநிலை, வேலைச் சூழலால் அதிகரிக்கும் பணிப் பளு, உடல் அழற்சி, உணவுப் பழக்கத்தில் சீரற்ற நிலை, மது அருந்துதல், புகையிலை போடுதல், அதிக அளவில் மருந்து சாப்பிடுவது ஆகியவை காரணமாக ஒற்றைத் தலைவலி எனப்படும் `மைகிரேன்’ உருவாகிறது.

பெண்களுக்குப் பொதுவாக ஹார்மோன் சீரற்ற நிலையால் அதாவது மாதவிடாய் காலம், குழந்தைப்பேறு காலம், மாதவிடாய் சுழற்சி நிற்கும் வேளைகளில் இது தோன்றுகிறது.

வேலை இறுக்கம்: இப்போது இளைஞர்கள் பலரும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் அவர்களுடைய வேலை காரணமாக இளைஞர்களை இத்தலைவலி பாதிக்கிறது. இலக்கை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதிக நேரம் கணினி வேலை காரணமாக ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது.

எப்படிச் சமாளிக்கலாம்?

நோயாளியின் உடல் அமைப்பைச் சரியாகக் கணித்து, அவரது பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். அவரது உளவியல், உடலியல் சார்ந்த விஷயங்களைச் சரிவரக் கணித்து அவருக்கு ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைவலியின் அளவை மதிப்பிட வேண்டும்.

குறிப்பாக மூன்று முக்கிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆகியவை தான் அந்த மூன்று வழிகள்.

வாழ்க்கை முறை மாற்றம்

இறுக்கமான சூழலிலிருந்து விலகி ஒய்வெடுப்பது. அதிக இரைச்சல் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றைத் தவிர்ப்பது.

உணவுப் பழக்கம்: சரியான உணவு வகைகளை உண்பதன் மூலம் நோயாளியின் உடலியல் கூறுகள் மாறுபடும். இது தலைவலி உருவாவதற்கான காரணிகளை மட்டுப்படுத்தும். மேலும் தலைவலி அதிகரிப்பதைக் குறைக்கும். அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், புளிப்புச் சுவையுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடுவது ஆகியனவும் தலைவலியின் வீரியத்தைக் குறைக்கும்.

இரண்டு கட்ட சிகிச்சை

தலைவலியின் தன்மைக்கேற்ப ஆயுர்வேத சிகிச்சை முறை இரண்டு கட்டங்களாக அளிக்கப்படுகிறது. வேகவஸ்தா – தலைவலி ஏற்படும்போது, அவெகவஸ்தா – தலைவலி இல்லாதபோது என இரண்டு வகைப்படும்.

வேகவஸ்தா சிகிச்சையின்போது ஆயுர்வேத முறைப்படி சாப்பிடக்கூடிய மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இவை வயிற்றைச் சுத்தம் செய்ய உதவும். வயிற்றில் தங்கியுள்ள நச்சுகளை அகற்ற இவை உதவும். இதுதவிர வெளிப் பயன்பாட்டுக்குச் சில எண்ணெய்கள் தரப்படுகின்றன. இது ரத்த நாளங்களைச் சீராக்கி ரத்த ஓட்டத்தைச் சமன் செய்கிறது.

அவெகவஸ்தா முறையில் ஒற்றைத் தலைவலி இல்லாத வேளையிலும் தற்காப்பு மருந்துகளை மருத்துவர் அளிப்பார். இதன்மூலம் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுவது தடுக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையில் நஸ்யம், சிரோத்ரா, சிரோவஸ்தி ஆகிய சிகிச்சைகள் இதற்கு அளிக்கப்படுகின்றன.

மற்ற சிகிச்சைகள்

நஸ்யம்: இந்த முறையில் மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணெயைத் தலை, முகத்தில் தடவ வேண்டும். அது நன்கு ஊறிய பிறகு நாசித் துவாரங்களில் சில மருந்துகளை ஊற்ற வேண்டும். ஆயுர்வேத சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளின் அளவு, அவற்றின் தன்மை ஆகியவை நோயின் வீரியத்துக்கு ஏற்பவும் நோயாளியின் வயதுக்கு ஏற்பவும் பருவ நிலைக்கு ஏற்பவும் மாறுபடும். நஸ்யம் சிகிச்சையின்போது வீக்கமடைந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடையும். இந்தச் சிகிச்சையைக் குறைந்தது 7 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிரோவஸ்தி: வெதுவெதுப்பான நீரில் மருந்து எண்ணெயை ஊற்றி, இதற்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தொப்பியாக அணிந்துகொள்ள வேண்டும். இந்த வகை சிகிச்சை மன இறுக்கம் சார்ந்த ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

- கட்டுரையாளர்,

சென்னை சஞ்சீவனம் ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் முதுநிலை மருத்துவ அதிகாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x