Published : 20 Dec 2014 03:35 PM
Last Updated : 20 Dec 2014 03:35 PM

அபிராமியைத் தேடும் அசாதாரணப் பிறவிகள்

தனக்கு அபாரமான திறமை உள்ளது. தான் அசாதாரணப் பிறவி என அடிப்படை ஆதாரமின்றி நம்புவது ஒரு வகை மனநலக் குறைப்பாடு. இப்படித் தனக்குத் தானே கற்பனை எண்ணங்களை வளர்த்துக்கொள்பவர்கள் மனதில் காதல் தோன்றுவது மிகப் பெரிய ஆபத்து.

குணா

குணா திரைப்படத்தின் கதாநாயகப் பாத்திரமான குணசேகரனாக கமல் நடித்திருப்பார். சிறு வயதில் அவருக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளால் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காண்பிக்கப்பட்டிருப்பார். தனது சித்தப்பாவுடன் சேர்ந்து சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுபவராகவும் இருப்பார். தன் தாய், தந்தை எல்லோரும் அழுக்கானவர்கள், தானும் அழுக்கானவன் எனத் தனக்குத் தானே நினைத்துக்கொள்வார்.

இந்நிலையில் மனநலப் பாதிப்பு அதிகமாகி மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுவார். அங்குச் சக மனநோயாளி ஒருவர், நீ சாதாரண ஆள் இல்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்ளத் தேவதை வருவாள். உன் பாவங்களை எல்லாம் அவள் துடைப்பாள் எனச் சொல்வார். இந்தக் கூற்றை அப்படியே நம்பிக் கோயிலில் காணும் ஒரு வசதி படைத்த பெண்ணைத் தனக்கான தேவதை அபிராமியாகக் கற்பனை செய்துகொள்வார் அவர். இம்மாதிரியான பாதிப்பை இரண்டு விதமான மனநலக் குறைபாடுகளுக்குள் கொண்டு வரலாம். ஒன்று Delusions of Black magic. இன்னொன்று Delusions of Love. அதாவது தனக்குத் தானே கற்பனை எண்ணங்களை வளர்த்துக்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு. இந்தப் பாதிப்பை இந்தப் படம் மிகச் சரியாகச் சித்திரிக்கிறது.

காதல் தவறெண்ணங்கள்

அற்புதங்கள் நடக்கும் என்னும் கற்பனையைத்தான் Delusions of Black magic எனச் சொல்கிறோம். தனக்கு அபாரமான திறமை உள்ளது. தான் அசாதாரணப் பிறவி என நம்புவது எல்லாம் இம்மாதிரி குறைபாட்டால்தான் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் அபிராமி என்ற பெண் தனக்கு அற்புதங்களை நடத்தக்கூடியவள் என்பதை கதாநாயகன் நம்புவான். அதுபோல அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள நினைக்கிறான்.

தன்னைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பெண் மீது அளவுக்கு அதிகமாக ஏற்படும் காதலை ‘காதல் எண்ணமயக்கம்’(Delusions of Love) என்கிறோம். இந்த எண்ணம் உருவாகிவிட்டால் அந்தப் பெண்ணே உலகமாகிவிடுவார். பிறகு அந்தப் பெண்ணிடம் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துவர். அந்தப் பெண் தனக்கே உரியவர் என உரிமை கொண்டாடுவார்கள். இந்தப் படத்தில் அந்த அம்சத்தையும் சரியாகச் சொல்லியிருப்பார்கள்.

ஜாகீர் கானைக் காதலித்தவர்

இதே மாதிரிப் பாதிப்புள்ள ஒரு பெண் என்னிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு விநோதமானது. கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் சிறந்து விளங்கிய காலகட்டத்தில் அது நடந்தது. அதாவது சம்பந்தப்பட்ட அந்தப் பெண் கிரிக்கெட் பார்ப்பவர். அப்படிப் பார்த்து ஒரு கட்டத்தில் ஜாகீர் கானை விரும்ப ஆரம்பித்துவிட்டார். ஜாகீர் கானும் தன்னை விரும்புவதாகக் கற்பனை செய்யத் தொடங்கிவிட்டார். பந்து எறிவதற்கு முன் அவர் செய்யும் சமிக்ஞைகள் எல்லாம் தனக்காகச் செய்வதாகச் சொன்னார். விக்கெட் எடுத்த பிறகு அவர் கையை உயர்த்திக் காண்பிப்பது எல்லாம் தனக்காக அவர் செய்யும் சமிக்ஞைகள்தான் எனத் திட்டவட்டமாக நம்பினார் அந்தப் பெண்.

அது மட்டுமல்லாமல், தன் வீட்டாரிடம் தானும் ஜாகீர் கானும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் பதற்றமடைந்த அவருடைய தாய் சிகிச்சைக்காக என்னிடம் அவரை அழைத்துவந்தார். அவருக்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்தினேன்.

பாதிப்புகள்

‘காதல் எண்ணமயக்கம்’(Delusions of Love), அற்புதங்கள் நடக்கும் என்னும் கற்பனை எண்ணம் (Delusions of Black magic) ஆகியவை இரண்டும் மனச்சிதைவு நோயின் ஒரு பகுதிதான். பல்வேறு விதமான நோய் குணாதிசயங்களின் ஒரு கோவை இது. மனச்சிதைவுப் பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு இருக்காது. அதனால் தனக்குப் பாதிப்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பேச்சு சம்பந்தமில்லாமல் இருக்கும். ஒழுங்கின்மையுடன் இருக்கும். அதனால் இந்தப் பாதிப்புள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது சிரமம்.

இந்தப் பாதிப்பு வருவதற்கு இரண்டு வகையான காரணங்களைச் சொல்லலாம். அன்றாடம் நிகழக்கூடிய அதிர்ச்சிகரமான சம்பவத்தால் இப்படி ஏற்படலாம். இன்னொரு வகையில் பார்த்தால் உடலியல் ரீதியாகப் பலவீனமானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

சிகிச்சை

இம்மாதிரியான பாதிப்புக்கு மனநல ஆலோசனை மூலம் சிகிச்சை அளிப்பது சிரமம். ஆலோசனை வழங்க முற்பட்டால் மருத்துவரையும் அவர்கள் எதிரியாகப் பாவிக்கத் தொடங்குவர். தவறான எண்ணப் பாதிப்பு உள்ளவர், தன் எண்ணத்தை மறுக்கும் ஒவ்வொருவரையும் எதிரியாகவும் ஆதரிப்பவர்களை நண்பர்களாகவும் நினைப்பார்கள். இதனால் மருந்துகள் மூலம்தான், இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். மேலும், இது தொடக்க நிலையில் இருந்தால் சிகிச்சை அளிப்பது எளிது. அதனால் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்,
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி பேராசிரியர்
மனநல மருத்துவர்
தொடர்புக்கு: arulmanas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x