Last Updated : 05 Aug, 2017 11:13 AM

 

Published : 05 Aug 2017 11:13 AM
Last Updated : 05 Aug 2017 11:13 AM

சந்தேகம் சரியா 47: வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?

நான் வீட்டுக்குள் செருப்பு அணிந்து பழகிவிட்டேன். என் மனைவி வீட்டுக்குள் செருப்பு அணியக் கூடாது என்கிறார். அவர் சொல்வது சரியா?

சரியில்லை. வீட்டுக்குள் செருப்பு அணிவதில் தவறில்லை.

காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வந்த பல நல்ல பழக்கங்களை நாகரிகம் கருதி கழற்றி விட்டோம். ஆடம்பரத்துக்கு அடிமையாகி, ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டு, பல வியாதிகளைப் பெற்றுக்கொள்கிறோம்.

எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, வாசலில் கால்களை நன்றாகக் கழுவிவிட்டு வீட்டுக்குள் நுழையும் பழக்கம் இருந்தது. ஆனால், இன்றோ இந்தப் பழக்கத்தைக் கைகழுவி விட்டோம். இன்னும் சிலரோ வெளியில் போட்டுக்கொள்ளும் செருப்போடு படுக்கை அறைவரை செல்கின்றனர். நம்மில் பலரும் கால்களை அழகுபடுத்த நினைக்கும் அளவுக்குச் செருப்பைச் சுத்தப்படுத்த நினைப்பதில்லை. அசுத்தச் செருப்போடு அலைகிறவர்கள் ஏராளம். இதனால் ஏற்படும் நோய்களும் நமக்குத் தாராளம்.

செருப்பின் முக்கியத்துவம்

வெறுங்காலோடு நடந்தால் அசுத்தம் பாதங்களில் ஒட்டிக்கொள்ளும். பல நோய்கள் வரிசைகட்டி வரத் தொடங்கும் எனத் தெரிந்துதான் காலில் செருப்பு அணியும் பழக்கம் வந்தது. அதோடு, நடக்கும்போது பாதங்களில் அடிபட்டுவிடக் கூடாது, ஏதாவது கூர்மையான பொருள் குத்திவிடக் கூடாது என்பதற்காகவும் காலில் செருப்பு அணிவதைப் பழக்கமாக்கிக்கொண்டோம்.

கால் பாதத்தில் பித்தவெடிப்பு, மரு, கால் ஆணி, தோல் வறட்சி, தோல் தடிப்பு, நகச்சுத்து, சேற்றுப்புண் போன்றவை இருந்தால், காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது, இந்தப் பிரச்சினைகள் பெரிதாகிவிடும். மேலும், வெறுங்கால்களில் நடந்தால், குடல் புழுத்தொல்லைக்கு ஆளாகலாம். குதிகால் வலி ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்கவும் காலில் செருப்பு அணிந்துகொள்கிறோம்.

இப்போது வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இவர்களுக்குப் பாதப் பராமரிப்பு மிகவும் முக்கியம். இவர்களுக்குக் காலில் புண் ஏற்பட்டுவிட்டால், சீக்கிரத்தில் ஆறாது. இவர்கள் காலில் எப்போதும் செருப்பு அணிய வேண்டியது கட்டாயம்.

எப்படிப் பயன்படுத்துவது?

வீட்டுக்கு வெளியில் போட்டுக்கொள்ள, வீட்டுக்குள் போட்டுக்கொள்ள எனத் தனித்தனி செருப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. வெளியில் சென்றுவிட்டு வந்தவுடன், வீட்டுக்கு வெளியிலேயே வெளிச் செருப்புகளைக் கழற்றி விட்டுவிட வேண்டும். இந்தச் செருப்புகளை அதற்கான இடத்தில் வைத்து, கால்களை நன்றாகக் கழுவிவிட்டு, வீட்டுக்குள் நுழைய வேண்டும். அப்போதுதான் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும்.

வீட்டுக்குள் போடுவதற்கு எனப் பயன்படுத்தும் செருப்பை வீட்டுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாசலுக்கு வெளியில் அதைக் கொண்டுபோகக் கூடாது. முக்கியமாக, பலரும் செய்கிற தவறு என்னவென்றால், வீட்டுக்குள் போட்டுக்கொண்ட செருப்போடு, வீட்டுத் தோட்டத்துக்குச் செல்ல, பால் வாங்க, வாசலில் கோலம் போட எனப் பல நேரம் வீட்டுச் செருப்போடுதான் செல்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

கழிவறை, குளியல் அறைக்கு எனத் தனியாகச் செருப்பு அணிந்துகொள்வது இன்னும் நல்லது. அவற்றைக் கழிவறைக்கு அருகிலேயே கழற்றி வைத்துவிட வேண்டும். வீட்டுக்குள் எந்த இடத்துக்கும் இதைப் போட்டுக்கொள்ளக் கூடாது.

(அடுத்த வாரம்: கீரை சாப்பிட்டால் ஆரோக்கியம் வலுப்படுமா?)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x