Published : 29 Jul 2017 12:12 PM
Last Updated : 29 Jul 2017 12:12 PM
எ
ன் வீட்டுக்கு அருகில் செல்போன் கோபுரம் அமைக்கிறார்கள். அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் வரும் என்று கேள்விப்பட்டேன். இது சரியா?
“செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மனித இனம், பறவை, விலங்கு, தாவரம் போன்றவற்றின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. விலங்குகளுக்கோ மனிதருக்கோ புற்றுநோய் ஏற்படுகிறது” எனச் சொல்வதற்கு இதுவரை ஆதாரம் இல்லை.
ஆனால், “இந்தக் கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சின் அளவைப் பொறுத்து, பிற்காலத்தில் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இருக்கிறது” எனப் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்யும், உலக சுகாதார நிறுவனத்தின் துணை அமைப்பான ‘பன்னாட்டுப் புற்றுநோய் ஆராய்ச்சி முனையம்’ (International Agency for Research on Cancer) எச்சரித்துள்ளது.
காரணம், இந்தக் கதிர்வீச்சின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இந்த விஷயத்தில் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு அளவு, நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் மிகவும் குறைவான அளவிலேயே கதிர்வீச்சின் அளவு இருக்கிறது. உதாரணமாக, சுவிட்சர்லாந்து நாட்டில் 42 மில்லி வாட் / சதுர மீட்டர், ரஷ்யாவில் 100 மில்லி வாட் / சதுர மீட்டர், சீனாவில் 400 மில்லி வாட் / சதுர மீட்டர், அமெரிக்காவில் 3000 மில்லி வாட் / சதுர மீட்டர், நம் நாட்டில் 4500 மில்லி வாட் / சதுர மீட்டர் என்ற அளவில் கதிர்வீச்சு உள்ளது.
செல்போன் கோபுரத்தின் கதிர்வீச்சு எப்படி?
செல்போன் கோபுரத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கு ‘எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்’ என்று பெயர். இதில் ஒரு வகை, ‘ரேடியோ ஃபிரீக்குவன்ஸி’ அலைகள். இந்த அலைகளைத்தான் செல்போன் கோபுரங்கள் வெளிவிடுகின்றன. இவை உடலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ‘நான் அயனைசிங் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சை’ (Non-ionising electro magnetic radiation) சார்ந்தவை.
இவற்றின் ஆற்றல் காரணமாக உடல் திசுக்கள் சூடாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் காது வலி, காது சூடாவது, களைப்பு, கவனச் சிதறல், மறதி, காதில் இரைச்சல், தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பொதுவாக, உடல் செல்களில் உள்ள மரபணுச் சரடு எனும் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படும்போதுதான், புற்றுநோய் உண்டாக வாய்ப்புள்ளது. இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு டி.என்.ஏ., அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. செல்போன்களைத் தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு மேல் ஒரே பக்கமாக வைத்துப் பேசும்போது, அந்தப் பக்க மூளைச் செல்களில் குளுக்கோஸ் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் தெரியவந்துள்ளது. ஆனால், இதன் விளைவு எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. அது இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது.
பாதிப்பு எப்போது?
இதன்படி, செல்போன் கதிர்வீச்சின் பாதிப்பு என்பது ஒருவர் செல்போன் கோபுரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறார், அவர் செல்போனை எவ்வளவு தூரத்தில் வைத்துப் பேசுகிறார், எவ்வளவு நேரம் அதைப் பயன்படுத்துகிறார், அவர் பயன்படுத்தும் செல்போன் கருவியின் மாடல், ஹெட்போனைப் பயன்படுத்துகிறாரா என பலவற்றைப் பொறுத்தது.
ஒரு செல்போன் கோபுரத்தின் அருகில் குடியிருப்பவருக்கு வரும் கதிர்வீச்சின் அளவு மற்றவர்களைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்பது உண்மை. என்றாலும், அந்தக் கதிர்வீச்சானது அவரது உடலநலனை எப்படி பாதிக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.
(அடுத்த வாரம்: வீட்டுக்குள் செருப்பு அணியலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT