Last Updated : 08 Jul, 2017 10:43 AM

 

Published : 08 Jul 2017 10:43 AM
Last Updated : 08 Jul 2017 10:43 AM

உயிரைக் காக்குமா புது வரி?

உலக மக்கள்தொகையில் சுமார் 17.5 சதவீத மக்கள்தொகையைக் கொண்ட நம் நாடு, உலகின் 20 சதவீத நோய்களுக்குப் புகலிடமாக உள்ளது. இந்தியாவைப் போலவே சமூக, பொருளாதார நிலையில் இருக்கிற நேபாளம், பூட்டான், வங்கதேசம், பெரு, பிரேசில் போன்ற நாடுகளைவிட கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்திலும், பிறந்த குழந்தை இறப்பு விகிதத்திலும் மிகவும் பின்தங்கிய நாடாகவே இந்தியா விளங்குகிறது.

நாடு முழுவதும் பொது சுகாதாரத் துறையைப் போதுமான அளவுக்கு விரிவாக்கம் செய்யாததால், 70 சதவீத நோயாளிகள் தனியார் துறையையே சுகாதாரத் தேவைக்காக நம்பியிருக்கிறார்கள். போதுமான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் நம் நாட்டில் உயிரிழக்கிறார்கள். மருத்துவச் செலவுகள் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் 2016-ம் ஆண்டின் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை நமக்குத் தரும் தகவல்கள். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பெரும்பான்மையான மக்களுக்குத் தங்கள் உடல்நலத்தைப் பேணுவது ஏற்கெனவே பெரும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சைச் செலவில் பெரும்பகுதி மருந்துகளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.

மலிவு விலை மருந்துகள்

மத்திய அரசு கொள்கைகள், மருந்து உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு ஆகியவற்றால் நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்துகளும், உயிர்காக்கும் மருந்துகளும் மக்கள் வாங்கக்கூடிய விலையில் இருந்து வருகின்றன.

மேற்கண்ட காரணங்களால் உலகிலேயே மலிவான விலையில் மருந்துகளை உற்பத்தி செய்கிற நாடாக இந்தியா உள்ளது. இதில் சில தனியார் மருந்து நிறுவனங்களின் பங்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் எய்ட்ஸ் பரவியபோது, தரமான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்துகளை குறைந்த விலைக்குக் கொடுத்து பல நாட்டு மக்களைக் காப்பாற்றிய பெருமைக்குரியது இந்திய மருத்துவத் துறை.

இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு, மக்கள் மருந்துகளை வாங்குகிறார்கள். இந்த மருந்துகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், இவை வரி விதிப்புக்கு உட்பட்டே விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ரூபாயும் முக்கியம்

உலக வர்த்தக நிறுவனத்தின் சட்ட திட்டங்களாலும், அதன் விளைவாகக் காப்புரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட திருத்தங்களாலும், புதிய சவால்களைச் சந்திக்க வேண்டிய கட்டத்தில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

மத்திய அரசின் அத்தியாவசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டிலிருந்து நிறைய மருந்துகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச் செலவைக் கணக்கிட்டே மருந்துகளின் விலை நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அந்த முறை கைவிடப்பட்டு, சந்தை விலைகளின் சராசரியை வைத்து விலையைக் கணக்கிடும் புதிய முறையைக் கையாள்வதால், உயிர்காக்கும் மருந்துகளின் விலை, சாமானிய மக்களின் கைகளிலிருந்து நழுவிச் சென்றுவிட்டது.

இந்தப் பின்னணியில் ஏற்கெனவே 9 சதவீதமாக இருந்த சில மருந்துகளின் விலை, ஜி.எஸ்.டி. வரியால் இப்போது 15 சதவீதமாக உயர்ந்துவிட்டன.

நீரிழிவு, மாரடைப்பு, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் நம் நாட்டில் வேகமாகப் பெருகி வருகின்றன. நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா இருக்கும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள், சராசரியாக ஒரு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 3 ஆயிரம்வரை மருந்துகளுக்காகச் செலவிட வேண்டும். ஜி.எஸ்.டிக்குப் பிறகு மாதத்துக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் சம்பாதிக்கும் குடும்பங்களின் நிலை என்ன ஆகும்?

முதலீடாகப் பார்க்குமா அரசு?

மருந்துகளுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியால் நோயாளிகள் மருந்து உட்கொள்வதை தவிர்க்க ஆரம்பிப்பார்கள். இந்தியா சுமார் 6.9 கோடி நீரிழிவு நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இவர்களில் குழந்தைகள் உட்பட 5 - 10 சதவீதம் பேர் முதல் வகை நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள். இவர்களுக்கு ‘இன்சுலின்’ மட்டுமே சிகிச்சை. சுமார் 50 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். நியாயமாகப் பார்த்தால், இன்சுலினை அரசு இலவசமாகக் கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை வரி விதிப்புக்கு உட்படாத இன்சுலினுக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது மத்திய அரசு.

அதேபோல, இதர மருந்துகளின் மீதான வரி 9 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுத்துக்கொள்ள சட்டைப் பையில் நூறு ரூபாய்கூட இல்லாதவர்கள் நிறைந்த நாடு நம்முடையது.

ஏற்கெனவே மருந்துகள் மீது விதிக்கப்படும் வரியின் மொத்த மதிப்பு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியும் சேர்ந்தால், நம்மில் பெரும்பாலோரால் சுமக்க முடியாத பெரும் சுமையாகவே மாறும். எனவே, உயிர்காக்கும் மருந்துகள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

விலை மதிக்க முடியாத உயிரைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. ஏற்கெனவே போதுமான மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவ வசதிகளும் இல்லாத நாடாகவே இருக்கிறோம். இந்த நிலையில் சுகாதாரத் துறைக்கு அரசு செய்யும் செலவு என்பது முதலீடுதான்!

கட்டுரையாளர், மருத்துவர் மற்றும் அரசு டாக்டர்கள்-பட்டமேற்படிப்பு டாக்டர்கள்சங்கத் தலைவர்
தொடர்புக்கு: lnmettur@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x