Published : 15 Jul 2017 11:46 AM
Last Updated : 15 Jul 2017 11:46 AM
மனிதர்களுக்கு நகை தேவையோ இல்லையோ, நிச்சயமாகப் புன்னகை தேவை. அந்தப் புன்னகையின் அழகு, நம் பற்களில்தானே உள்ளது. ‘பல் இல்லாத குழந்தை, முதியவர்களின் சிரிப்பும் அழகுதான்’ என்பது போன்ற வசனங்கள் சினிமாவில்தான் சாத்தியம். நடைமுறைக்கு ஒத்து வராதே!
சொத்தைப் பற்கள் இருந்தால், இயல்பாக வாய்விட்டுக் கூட சிரிக்க முடியாது. அப்படியான மனிதர்களுக்கான வரப்பிரசாதம்தான் பல் அடைப்பு. அந்தப் பல் அடைப்பில் என்னென்ன விதங்கள் இருக்கின்றன, என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவற்றை எப்படிப் பராமரிப்பது என்பது உள்ளிட்ட விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
பல் அடைப்பு வகைகள்
வெள்ளி, பாதரசம், தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட பல உலோகங்கள் பல் அடைப்புக்கான பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலும் பல்லின் நிறத்திலேயே பல் அடைப்புக்கான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில சமயம் மெட்டாலிக் எனும் உலோகப் பொருட்களைக்கொண்டும் பல் அடைப்பு மேற்கொள்ளப்படுகிறது. உதாரணத்துக்கு, சில்வர் அமால்கம் எனும் வெள்ளி நிற பல் அடைப்புக்கான பொருட்களில், பாதரசம், வெள்ளி, செம்பு, வெள்ளீயம், துத்தநாகம் போன்ற உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல காம்போஸிட் ரெசின் எனும் வகை பல் அடைப்பில், மேட்ரிக்ஸ், ஃபில்லர், கப்ளிங் ஏஜெண்ட், இனிஷியேட்டர்ஸ், ஆக்சிலரேட்டர்ஸ், பிக்மெண்ட்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தங்கப் பல் அடைப்பில், தங்கம், பல்லாடியம், பிளாட்டினம், வெள்ளீயம், இண்டியம் போன்ற கலவைகள் சேர்க்கப்படுகின்றன.
இவை தவிர, கிளாஸ் ஐயனோமர் எனும் பல் அடைப்பில், அகியஸ் பாலி ஆல்கீனாயிக் ஆசிட் மற்றும் ஃப்ளூரோ அலுமினோ சிலிகேட் உள்ளிட்ட கலவைகள் சேர்க்கப்படுகின்றன. மேற்கண்டவற்றில் காம்போஸிட் ரெசின், கிளாஸ் ஐயனோமர், செராமிக்ஸ் போன்றவை பல் நிறத்திலேயே உள்ள பல் அடைப்புக்கான பொருட்கள். சில்வர் அமால்கம், கோல்ட் ஃபில்லிங்ஸ், நோபல் மெட்டல் அலாய்ஸ் போன்றவை மெட்டாலிக் நிற பல் அடைப்புக்கான பொருட்கள்.
உடலுக்கு ஊறு செய்யாமலும், அரிப்புத்தன்மை குறைவாக இருப்பதாலும், நுண்ணுயிர்க்கொல்லித் தன்மையைக் கொண்டிருப்பதாலும், நீண்ட காலம் உழைக்கும் தன்மையாலும் பலரும் தங்கப் பல் அடைப்பை விரும்புகிறார்கள்.
பாதரச ஆபத்து
தங்கப் பல் அடைப்பு, பெரும்பாலும் செலவு பிடிக்கக் கூடியது என்பதால், பலரும் மெட்டாலிக் பல் அடைப்புகளை நாடுகிறார்கள். அதிலும், பாதரசத்தைப் பயன்படுத்தி அடைக்கப்படும் சில்வர் அமால்கம் வகையைத்தான் பலரும் விரும்புகிறார்கள்.
பாதரசம் என்பது ஆபத்தான திரவ ரசாயனப் பொருள். நரம்பு மண்டலங்கள், சிறுநீரகங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பாதரசத்தின் அளவு அதிகமானால், அது உடலுக்குப் பல பிரச்சினைகளைக் கொண்டு வரும். அதை முகர்ந்து பார்ப்பதுகூட மிகவும் ஆபத்து. பல் மருத்துவர், பல் அடைப்புக்கான பொருட்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆகியோரால் முறையானபடி பாதுகாப்பாகக் கையாளப்படும் பட்சத்தில், பாதரசப் பல் அடைப்பால் பிரச்சினை இருக்காது.
பல் அடைப்புக்குப் பாதரசத்தை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. வெள்ளி உள்ளிட்ட உலோகங்களுடன் கலந்துதான் பயன்படுத்தப்படுகிறது. கையாலோ அல்லது இயந்திரத்தைக் கொண்டோ இந்தக் கலவையைப் பல் மருத்துவர்கள் உருவாக்குகிறார்கள். பல் மருத்துவமனையில், இந்த அளவுக்குத்தான் பாதரசம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. பல் மருத்துவர்கள் அதன்படிதான் கலவையை உருவாக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவை, சொத்தைப் பல்லில் வைத்து அடைக்கப்படும்.
பாதரசப் பல் அடைப்பால் நரம்பு மண்டலச் சீர்குலைவு, சோர்வு, எடை குறைவு, அஜீரணம் போன்ற நாள்பட்ட பாதிப்புகளும், வாந்தி, தள்ளாட்டம், சுவாசக் கோளாறுகள் போன்ற குறுகிய கால பாதிப்புகளும், வயிற்றுப்போக்கு, தும்மல் போன்ற கடுமையான பாதிப்புகளும் ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு.
பல் அடைப்புப் பராமரிப்பு
வயதாக ஆக ஆக பற்கள் எப்படிச் சேதமடைகின்றனவோ, அதேபோல பல் அடைப்புப் பொருட்களும் நாளாக ஆக, சேதமடைகின்றன. பல் எந்த அளவுக்குச் சொத்தையாக இருக்கிறதோ, அதற்கேற்றவாறு அடைப்பை மேற்கொண்டால், அது நீண்ட காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும். திரும்பத் திரும்பப் பல்லை அடைப்பதற்கான தேவை ஏற்படாது. முறையாகச் செய்யப்பட்ட பல் அடைப்பு, 5 முதல் 10 ஆண்டுகளுக்கு உழைக்கும். எனினும், இதர பல் அடைப்புகளைக் காட்டிலும் தங்கப் பல் அடைப்பே நீண்ட காலம் உழைக்கிறது.
பல் அடைப்பு சிகிச்சை செய்துகொண்டவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். நாளுக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். சிறந்த பற்பசை, பல்துலக்கி ஆகியவற்றைக் கொண்டு, முறையாகப் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னும் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் ஒழுங்காகச் செய்த பிறகு, 32 பற்களும் தெரிவது மாதிரி தாராளமாகச் சிரிக்கலாம்!
கட்டுரையாளர், பல் மருத்துவ நிபுணர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT