Published : 02 Jan 2016 11:20 AM
Last Updated : 02 Jan 2016 11:20 AM
நம் உடலுக்குள் ஓடும் மகாநதி என்று ரத்த நாளங்களைச் சொல்லலாம். நம் உடலுக்குள் உள்ள மொத்த ரத்த நாளங்களைச் சேர்த்தால், அது ஒரு லட்சம் கி.மீ. தூரத்துக்கு நீளும்.
ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களுடன், பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது. இந்தப் பிளாஸ்மாதான் ரத்தத்தின் திரவத் தன்மைக்குக் காரணம்.
ஐம்பது சதவீதம் பிளாஸ்மா, நாற்பது சதவீதம் சிவப்பு அணுக்கள், பத்து சதவீதம் வெள்ளை அணுக்களுடன் வேறு சில அணுக்களும் சேர்ந்த கலவையே ரத்தம். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாது, புரதப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இதில் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை இருப்பது மிக முக்கியமானது. உறையும் தன்மையால்தான், உடலில் அடிபட்டவுடன் அதிக ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.
உடலில் உள்ள அனைத்துத் திசுக்களுக்கும் தேவையான கொழுப்புச் சத்து, புரதச் சத்து, மாவுச் சத்து, தாதுகள் ஆகியவற்றை ரத்தம் எடுத்துச் செல்கிறது. முக்கியமாக மூச்சு விடுதல் என்ற செயல்பாட்டின் மூலம் நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனை, ரத்தம் சுமந்து சென்று திசுக்களுக்கு அளிக்கிறது. பின்னர் அத்திசுக்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை நுரையீரலுக்குக் கொண்டு வந்து, மூச்சுவிடும் செயல்பாட்டால் வெளியேற்றவும் செய்யும். நோய்க் கிருமிகளை எடுத்துச் செல்லும் ரத்தம்தான், மருந்தின் வீரியத்தையும் எடுத்துச் சென்று, நோயிலிருந்து குணமடைய உதவுகிறது.
ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கார்ல் லான்ஸ்டைனர் 1901-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். ரத்த வகைகள் `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` ஆகியவை. அனைவருக்கும் தானமளிக்கக்கூடியவர்கள் `ஓ’ பிரிவினர்தான். இவர்களின் ரத்தம் `ஏ`,`பி`, மற்றும் `ஏபி’ (நெகட்டிவ் பிரிவினர் தவிர) ஆகியோருக்குப் பொருந்தும்.
ஆரோக்கியமான மனிதனின் உடலில் சுமார் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். இதில் 200 முதல் 300 மி.லி. வரை ஒரு முறை தானமாக அளிக்கலாம். சராசரி உணவுப் பழக்கத்தைத் தொடர்ந்தாலே, இரண்டு வாரக் காலத்தில் இழந்த ரத்தம் மீண்டும் உடலில் உற்பத்தி ஆகிவிடும்.
புற்றுநோய், எய்ட்ஸ், காமாலை ஆகிய நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது. 18-45 வயது வரை உள்ள எவரும் ரத்த தானம் செய்யலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த அணுக்கள் அழிந்து, புதிதாக உருவாகும். தகுந்த இடைவெளியில் (3 மாதங்கள்) ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ரத்த தானத்தால் உடல் பலவீனமும் ஏற்படாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT