Published : 13 May 2017 12:17 PM
Last Updated : 13 May 2017 12:17 PM

சுட்டெரிக்கும் வெயில் கண்கள் ஜாக்கிரதை

சுற்றுலா, விடுமுறை, விளையாட்டு எனக் குழந்தைகள் குதூகலமாகச் சுற்றித் திரியும் காலம் கோடைக் காலம். வெயில் காலத்தில் தூசு நிறைந்த சுற்றுப்புறத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான சாத்தியம் அதிகம்.

இப்படி விளையாடும்போது கண்ணில் உள்ள கன்ஜங்டிவா (Conjunctiva) என்ற வெள்ளைப் பகுதியில் ஏற்படும் ஒவ்வாமையான அலர்ஜி கன்ஜங்டிவைட்டிஸ் (Allergic conjunctivitis), கண் உலர்தல் நோய் போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

இதனால் கண் சிவந்து இருப்பது, கண் அரிப்பால் கண்ணைத் தேய்த்துக்கொண்டு, கண்ணை அடிக்கடி சிமிட்டிக்கொண்டிருப்பது போன்ற அறிகுறிகளுடன் தங்கள் குழந்தைகளைக் கண் மருத்துவரிடம் அழைத்து வரும் பெற்றோர் அதிகம்.

தடுப்பது எப்படி?

> குழந்தைகள் புழுதி நிறைந்த இடங்களில் விளையாடு வதைத் தவிர்க்க வேண்டும்.

> வெயிலில் செல்லும்போது தரமான கூலிங் கிளாஸ் (Sun Glasses) போட்டுக்கொண்டு செல்ல வேண்டும். தரமற்ற, போலியான கூலிங்கிளாஸ் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கண் மருத்துவர் அல்லது கண்ணாடிக் கடைகளில் கிடைக்கும் புறஊதா கதிரியக்கத்தைத் தடுக்கக்கூடிய கூலிங் கிளாஸைப் பயன்படுத்தவும்.

> குளிர்ந்த தண்ணீரால் அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

> கண்களை மூடிக்கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை நனைத்துக் கண் மீது ஒத்தடம் வைக்க வேண்டும்.

> கண் அலர்ஜி நோய் உள்ளவர்கள் வெயில் காலத்தில் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொண்டும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

> மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையில்லாமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

> வீட்டைத் தூசியில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

> அடிக்கடி கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

நீச்சல் குளத்தில் கண் பாதுகாப்பு

விடுமுறை காலத்தில் குழந்தைகளில் பலரும் கோடை வெப்பத்தைத் தணித்துக்கொள்ள நீச்சல் பயிற்சி செல்வது வழக்கமாக இருக்கும்.

> அப்படி நீச்சல் குளத்தில் குளிக்கும் போது பாதுகாப்புக் கண்ணாடி அணிந்துகொள்ளவும்.

> நீச்சல் குளத்தின் சுத்தத்தை உறுதிசெய்து கொள்ளவும்.

> குளித்து முடித்தவுடன் குளிர்ந்த, சுத்தமான தண்ணீரால் முகம், கண் பகுதியைக் கழுவிக்கொள்ளவும்.

கூர்மையான பொருட்கள் ஜாக்கிரதை

விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஒன்றுகூடி விளையாடும்போது, கூர்மையான விளையாட்டுப் பொருட்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களா என்றும் பெற்றோர் கவனிக்க வேண்டும். விளையாடும்போது கூர்மையான பொருட் கள் கண்ணில் குத்தி விபத்து ஏற்படுவது அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.

உலர் கண் நோய்

வெயில் காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாகக் கண் நீர் படலம் (Tear Film) உலர்ந்து, கண் எரிச்சல், உறுத்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இதை எப்படித் தடுப்பது?

1.அதிகப்படியான தண்ணீர், பழச்சாறு உட்கொள்ள வேண்டும்.

2.செல்போன், ஐபேடு, டேப்லெட் போன்ற மின்னணு கருவிகளில் குழந்தைகள் வீடியோ கேம்ஸ் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3.குளிர்சாதனப் பெட்டியிலிருந்து காற்று நேரடியாகக் கண்ணில் அடிக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

4.கண் மருத்துவரை அணுகிச் செயற்கை கண்நீர் சொட்டு மருந்து (Artificial Tear Substitute) வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

வெளிவேலை செய்வோர்

அதிகப்படியான வெயிலில் உள்ள புறஊதா கதிர்கள் வெயிலில் வேலைசெய்ப வர்களுக்குக் கண் சதை வளர்ச்சி (Pterygium), கண் புரை, விழித்திரை பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக விவசாயிகள், வெயிலில் அதிகம் வேலை செய்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பது எப்படி?

> வெயில் காலத்தில் வெயில் அதிகம் அடிக்கும் நேரமான பகல் 10 மணி முதல் மதியம் 2 மணிவரை வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்கவும்.

> வேலைக்கு இடையே 30 நிமிடங் களுக்கு ஒரு முறை மரத்தடியில் அல்லது நிழலில் ஐந்து நிமிடங்கள் அமர்ந்து, நிறைய தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேலை செய்யலாம்.

பொதுமக்களின் கவனத்துக்கு

> உடல், கை, சுற்றுப்புறம் போன்றவற்றைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

> உச்சிவெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.

> வெயில் பாதுகாப்புக்குத் தனிக் கண்ணாடி அணிந்துகொள்ளவும்.

> கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும்.

> மருந்துக் கடைகளில் சுயமாகக் கண் சொட்டுமருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

கட்டுரையாளர், அரசு கண் மருத்துவர்
தொடர்புக்கு: kpranganathan83@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x