Last Updated : 09 Jul, 2016 12:37 PM

 

Published : 09 Jul 2016 12:37 PM
Last Updated : 09 Jul 2016 12:37 PM

பின்தொடர்தல் எனும் பாலியல் குற்றம்

மென்பொருள் பொறியாள ரான சுவாதி (24) கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் கொலை செய்த குற்றத்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கான விவரங்கள், ஓரளவு தெரியவந்த நிலையில், இவ்வாறு பெண்கள் கொலை செய்யப்படுவதை எவ்வாறு புரிந்துகொள்வது? இதன் சமூகப் பின்னணி என்ன? இவ்வாறான கொடுஞ் செயல்களை எவ்வாறு தடுப்பது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய தருணம் இது.

நிறைவு பெறாத ஒருதலைக் காதலால் செய்யப்பட்ட கொலை என்று நாளிதழ்கள் இதை வர்ணித்துவரு கின்றன. ஆனால், இது ஒரு பாலியல் குற்றமாக அணுகப்பட வேண்டும்.

சாதாரண நடத்தையா?

பொதுமக்களில் பெரும்பாலோர் பாலியல் வல்லுறவை மட்டுமே பாலியல் குற்றமாகக் கருதுகிறார்கள். ஆனால், வேறு பல ‘நடத்தைகளும்' பாலியல் குற்றங்களாகவே கருதப்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். தடயவியல் மனநலம் மற்றும் தடயவியல் உளவியல் (forensic psychiatry and psychology) ஆகிய கல்வித் துறைகள், பாலியல் குற்றங்கள் பற்றி விரிவாகப் பேசுகின்றன.

பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்முறை (domestic abuse), இடிப்பதும் தொடுவதும் (groping), பாலியல் தொந்தரவு (sexual harassment) போன்றவையும் பாலியல் குற்றங்களே. ஸ்டாக்கிங் (stalking) என்ற இன்னொரு வகை பாலியல் வன்முறையும் உண்டு. ஒருவரை அவருடைய விருப்பத்துக்கு மாறாக, விடாது பின்தொடர்வது ‘ஸ்டாக்கிங்’ எனப்படுகிறது. பொதுவாகப் பெண்களை ஆண்கள் பின்தொடர்வதையே இது குறிக்கிறது. மேலை நாடுகளில் இவை தண்டனைக்குரிய குற்றங் களாகக் கருதப் படுகின்றன. இவை ஏன் குற்றங்களாகக் கருதப்பட வேண்டும்? இவை யாவும் தனிமனித உரிமைமீறல் கள் என்பதே அடிப்படைக் காரணம்.

விடாது பின்தொடரும் நடத்தை

ஒருவரை அடிக்கடி பின்தொடர்வது, கண்காணிப்பது, தொந்தரவு பண்ணுவது, தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நச்சரிப்பது, கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்புவது, இதனால் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்துவது போன்றவை இதில் அடங்கும். 1979-ல் வெளிவந்த டாக்சி டிரைவர் (Taxi driver) என்ற ஆங்கிலத் திரைப்படம் இதை அழகாகக் காட்சிப்படுத்தியது.

இம்மாதிரியான நடத்தைகளில் பல வகைகள் உள்ளன. ஒரு சாரார் பெண்ணால் நிராகரிக்கப்பட்டதால், அவளை அடிக்கடி பின்தொடர்வதும் தொந்தரவு பண்ணுவதும் உண்டு (rejected stalker). இது வெறும் நச்சரிப்பாகவும் தொந்தரவாகவும் இருக்கலாம், அல்லது அச்சுறுத்துவதாகவும் பயமுறுத்துவதாகவும்கூட மாறலாம். இம்மாதிரியான ஒரு ஆண், குறிப்பிட்ட ஒரு பெண் தன்னைப் புறக்கணிப்பதாகக் கருதிப் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார். தான் அவமதிக்கப்பட்டதாக மனம் புழுங்குகிறார். அதைப் பற்றியே திரும்பத்திரும்பச் சிந்திக்கிறார். அந்த எண்ணத்தை மனதில் இருந்து களைய முடிவதில்லை. சில வேளைகளில் பழிவாங்கவும் துடிக்கிறார்கள். மணமுறிவுக்குப் பின் சில ஆண்கள், இம்மாதிரியான நடத்தையில் ஈடுபடுவது உண்டு. தனக்குக் கிடைக்காத ‘ஒரு பெண்' வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று இவர்கள் பொருமுகிறார்கள். இது சில நேரம் வன்முறையிலும் கொலையிலும் முடிகிறது.

நெருக்கத்துக்கான நச்சரிப்பு

இன்னொரு சாரார், ஒரு பெண்ணுடன் நெருக்கத்தை விரும்பி அவளை நச்சரிக்கிறார்கள் (intimacy seeking stalker). அவளுக்குத் தன் காதலைப் போதுமான அளவு எடுத்துக்கூறினால், தான் ஏற்றுக்கொள்ளப்படுவோம் என்ற எண்ணத்தில் அவளைப் பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள்.

அவளுடைய உணர்வுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இவர்களுக்குச் சுய ஆசையும் வேட்கையுமே முக்கியமாகப் படுகின்றன . பொதுவாக இவர்கள், நண்பர்கள் அற்றவர்களாகவும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பதுண்டு. சுவாதி கொலையாளிக்கு இது பொருந்தும் என்று தோன்றுகிறது. இவர்களில் பலர் தன் அந்தஸ்துக்கு மீறி நடிகைகள் போன்ற பிரபலங்களைப் பின்தொடர்வதும் உண்டு. அவர்களது கோரிக்கை மறுக்கப்படும்போது, வன்செயல்களுக்கு இட்டுச் செல்லலாம்.

மூன்றாவது சாரார், பெண்களை வேட்டையாடுவதில் கவனம் செலுத்துகிறார்கள். வேட்டையாடிகள் (predatory stalker) என்று அழைக்கப்படும் இவர்கள், வேட்டையாடும் விலங்குகளைப்போலப் பெண்களைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள். டெல்லியில் 2012-ல் நடைபெற்ற நிர்பயா கூட்டு வல்லுறவும் கொலையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே.

இறுதியாக, இன்னொரு சாரார் பெண்களுடன் பழகத் தெரியாதவர்களாகவும் சமூகத் திறன் குறைந்தவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருப்பதுண்டு. மனநோய் உள்ளவர்களில் மிகமிக குறைவானவர்களே விடாது பின்தொடரும் நடத்தையில் ஈடுபடுகிறார்கள் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

சமூகப் பண்பாட்டு பின்னணி விடாது

பின்தொடரும் நடத்தையை, ஒரு குற்றமாக மட்டும் கருதுவதும் தவறு. இதை ஒரு தனிமனிதனின் மனப்பிறழ்வாக, வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடாக அணுகுவதும் தவறு. மாறாக, நம் சமூகத்தில் ஆழமாக ஊடுருவியுள்ள விழுமியங்களின் பண்பாட்டு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஒரு குற்றத்தின் வேர் எது, கிளை எது என்று இனம் காண்பது இதில் மிகமிக அவசியம்.

பெண்களின் அடிப்படை உரிமைகள், அன்றாடம் மீறப்படுவதை நாம் பெரிதாகக் கண்டுகொள்வது இல்லை. பேருந்திலும் தொடர் வண்டியிலும் பெண்களை இடிப்பதும் தொடுவதும் (groping) ஆண்களுக்குக் கிளுகிளுப்பூட்டுவதாக இருப்பதும், பணியிடத்தில் அவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் ஆண் சமூகம் கண்டுகொள்வது இல்லை.

ஒரு புறம் ‘பாரத மாதா' என்றும் ‘அன்னை ஒரு கோயில்' என்றும் போற்றப்படும் பெண்கள், ஆணின் உடைமைகளாகவும் போகப்பொருள்களாகவும் கருதப்படும் மனநிலை எவ்வாறு உருவாகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. இதில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது. சமூகம் மாறிக்கொண்டு வந்தாலும் பெண்ணைப் பற்றிய ஆண்களின் மனநிலை மாறவில்லை என்பதுதான் உண்மை.

ஆணாதிக்கம் பற்றிய பாலியல் கல்வி

ஆண்கள் தங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இந்திய ஆணின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும், ஆணாதிக்க மனோபாவத்தைக் களைவது எப்படி? பெண்களையும் அவர்களின் விருப்பு வெறுப்புகளையும் மதித்து நடக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்வது எப்படி? ஆண்கள் புரியும் பாலியல் குற்றங்களுக்குப் பெண்களின் நடை, உடை, பாவனையைக் குறை கூறுவது சிலரிடையே வாடிக்கையாக உள்ளது. இது குற்றம் இழைக்கப்பட்டவர் மீதே குறை கூறும் முறை.

சுவாதி விவகாரத்தில் கொலை செய்யப்பட்டவரும் கொலை செய்ததாகச் சந்தேகப்படுபவரும் படித்தவர்கள். இன்று பல்கிப் பெருகிவரும் தொழில்நுட்ப உலகில் காலடி எடுத்து வைத்தவர்கள். இன்று படிப்பு என்பது வேலைக்காகவே என்றாகிவிட்டது. ஆனால் படிப்பு வேறு, கல்வி வேறு. கல்வி மனிதனைப் பண்படுத்தும் ஒரு சாதனம். எனவேதான் நம் ஆண்களிடையே பெண்கள் பற்றிய மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அதை சிறு வயதி லேயே தொடங்கி வைப்பது முக்கியம்.

பக்குவம் தேவை

நமது சமுதாயத்தில் ஆண் - பெண் உறவு பற்றி பேசுவது, குறிப்பாகப் பாலியல் உறவு பற்றி பேசுவது தவிர்க்கப்படுகிறது. பாலியல் பற்றி ஆரோக்கியமான விவாதமும் அறிவார்த்தமான உரையாடலும் இன்று நம்மிடையே இல்லை. பெற்றோர்களும் இது பற்றி தம் பிள்ளைகளுடன் பேசத் தயக்கம் காட்டுகிறார்கள்.

இம்மாதிரியான பண்பாட்டு சூழலில் பாலியல் கல்வி இன்றியமையாததாகிறது. இதில் ஆண் - பெண் உறுப்புகள் பற்றி மட்டும் பேசினால் போதாது. நாம் வாழும் சமுதாயம், ஓர் ஆணாதிக்கச் சமுதாயம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கே பாலினச் சமத்துவம் இல்லை என்பதும் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படுவது இல்லை என்பது சுட்டிக்காட்டப்படவும் வேண்டும். இதைக் கற்றுக்கொடுப்பவர்கள், இக்கருத்துகளை ஏற்றுக்கொண்ட வர்களாக இருக்க வேண்டும்.

ஒரு பெண் ஓர் ஆணின் வேண்டுதல் ஒன்றை ‘வேண்டாம்’ அல்லது ‘முடியாது’ என்று மறுத்தால், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பல ஆண்களிடம் இல்லை. சில ஆண்கள் இன்னும் ஒருபடி மேலே போய் ‘வேண்டாம்’ என்றால் பெண்களின் அகராதியில் ‘வேண்டும்’ என்பதைக் குறிக்கும் என்று அர்த்தப்படுத்திக்கொள்வதும் உண்டு. இந்தியத் திரைப்படங்களில் கதாநாயகி மறுத்தாலும் கதாநாயகன் தன் காதல் கைகூடும்வரை அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு பண்ணுவது வாடிக்கையாகக் காட்சிப் படுத்தப்படுகிறது.

ஆனால், இன்றைக்கு நம்முடைய தலையாய தேவை, பாலினச் சமத்துவத்தைக் கற்றுக்கொடுப்பதுதான். இதற்குப் பண்பாட்டு மாற்றமும் தேவை. சட்டமும் பாலியல் கல்வியும் இதற்கான முதல் படிக்கற்களாக அமையலாம்.

சுவாதி கொலையை வெறும் கொலைக் குற்றமாக மட்டும் கருதுவது தவறு.

# உளவியல் / மனநல வட்டாரங்களில் குற்றம் சாட்டப்படும் ராம்குமாரின் நடத்தை ‘ஸ்டாக்கிங்’ (பின்தொடர்தல்) எனப்படுகிறது. இது பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால், இதை ஒரு தனிநபர் இழைத்த குற்றமாகப் பார்ப்பது தவறு.

# இது போன்ற கொலைகளுக்குச் சமூகப் பண்பாட்டு பின்னணி உண்டு; அது பாலினச் சமத்துவம் கிடைக்காததோடு சம்பந்தப்பட்டது.

# இது போன்ற குற்றங்களைத் தடுக்க இருமுனை அணுகுமுறை அவசியம்: ஒன்று, ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்டும் பாலியல் கல்வி, இன்னொன்று ஸ்டாக்கிங். பாலியல் தொந்தரவுகள், பயணம் செய்யும்போது இடிப்பதும் தொடுவதும் போன்ற தகாத நடத்தைகளைத் தண்டிக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்குவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.

சில ஆண்கள் ‘வேண்டாம்’ என்றால் பெண்களின் அகராதியில் ‘வேண்டும்’ என்பதைக் குறிக்கும் என்று அர்த்தப்படுத்திக் கொள்வதும் உண்டு.

கட்டுரைக்கான சான்றாதாரங்கள்:

Pathe, M. & Mullen, P. E. (1997). The impact of stalkers on their victims. The British Journal of Psychiatry, 170: 12 17. Mullen. P. E., Path. M; Purcell. R. (2000). Stalkers and Their Victims, Cambridge, United Kingdom: Cambridge University Press.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்

தொடர்புக்கு: ibmaht@hotmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x