Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM
தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றித் தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளின் காரணமாக பலரும் கண் தானம் செய்யத் தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாகக் கிடைக்கின்றன.
தமிழகத்தில் சாலை மற்றும் ரயில் விபத்துகளில் சிக்கியும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் தற்கொலை செய்துகொண்டும் தினமும் சராசரியாக 1,350 பேர் இறக்கின்றனர். ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் தினமும் சராசரியாக 164 பேரும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கிறது.
தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவதில்லை.
கிடைப்பதோ 6 ஆயிரம் மட்டுமே
இதுகுறித்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனை முன்னாள் இயக்குநர் கே.வசந்தா கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் தானமாக கிடைக்கின்றன. கிடைக்கும் அத்தனை கண்களையும்கூட பயன்படுத்த முடிவதில்லை. 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால்தான் அதைப் பயன்படுத்த முடியும். இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாகக் கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவதில்லை. இதுபோன்ற காரணங்களால், 2 ஆயிரம் கண்களைப் பயன்படுத்த முடிவதில்லை.
ஒளியுள்ள கண்ணை அழிப்பதா?
ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியில், சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றுவதில்லை. அந்த சூழ்நிலையிலும் ஒருசிலருக்கு கண்தானம் பற்றித் தோன்றுகிறது. ஆனால், ‘யாராவது தப்பாக நினைப்பார்களோ’ என்று யோசிக்கிறார்கள்.
குறிப்பாக இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் ஊனத்தோடு பிறப்பார் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பரவலாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் கண் தானம் குறைவாக உள்ளது. இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும். மனிதன் இறந்தபோதிலும், அவரது கண்ணில் ஒளி இருக்கிறது. ஒளியுள்ள கண்ணை புதைக்காமல் மற்றவர்களுக்கு பயன்படச் செய்கிற பொறுப்பு ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது.
முதலிடத்தில் குஜராத்
உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் இந்துக்கள் அதிக அளவில் கண் தானம் செய்கின்றனர். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைக்கின்றன. இவற்றின் மூலம் 300 முதல் 350 பேருக்கு இலவசமாக பார்வை கிடைக்கிறது. ‘கண் வேண்டும்’ என்று இந்த மருத்துவமனையில் ஒருவர் பதிவு செய்து வைத்தால், அதிகபட்சம் 10 நாட்களுக்குள் கண் தானமாக கிடைத்து, பார்வை பெற்றுவிடுகிறார்.இவ்வாறு வசந்தா கூறினார்.
பைபிள் சொல்கிறது
கிறிஸ்தவர்களில் குறைந்த சதவீதத்தினரே கண் தானம் செய்கின்றனர் என்ற கருத்து குறித்து கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் பேரவை சென்னை கிளை முன்னாள் தலைவர் எஸ்.எம்.டி.லிவிங்ஸ்டன் கூறுகையில், ‘‘கண் தானம் செய்ய முன்பு கிறிஸ்தவர்கள் தயக்கம் காட்டினர். நிலைமை தற்போது மாறியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் பலரும் இப்போது ஆர்வத்தோடு கண் தானம் செய்கின்றனர். பிறருக்கு உதவ வேண்டும், தானம் செய்ய வேண்டும் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT