Published : 11 Nov 2014 10:59 AM
Last Updated : 11 Nov 2014 10:59 AM
பார்ப்பதற்கு ஏதோ கால் சென்டர் போலத் தோற்ற மளிக்கிறது, அழைப்புகளை ஏற்கும் அந்தக் கட்டுப்பாட்டு அறை. தமிழகத்தின் எந்த மூலையில் இருந்து அழைத்தாலும் இந்தக் கட்டுப்பாட்டு அறையில்தான் அழைப்புகள் ஏற்கப்படுகின்றன. இங்கிருக்கும் அனைவரும் காதுகளில் ஹியர் போனை மாட்டிக்கொண்டு அழைப்பாளரிடம் வேகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
‘வணக்கம் 108’
‘நீங்க எந்த இடத்தில் இருந்து பேசுகிறீங்க?’
‘எந்த மாவட்டம்?’
‘என்ன தாலுகா?’
‘அருகில் இருக்கிற முக்கிய இடத்தைச் சொல்ல முடியுமா?’
- இப்படித் தொடர்ச்சியான கேள்விகள் மூலம், தொடர்புகொண்டவரிடம் இருந்து அடிப்படைத் தகவல்கள் பெறப்படுகின்றன. பிறகு அழைத்தவரை லைனில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சம்பந்தப்பட்ட பகுதியில் இருக்கும் ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவரை இவர்கள் பைலட் என்று குறிப்பிடுகிறார்கள். அவரையும் கான்ஃப்ரன்ஸ் கால் மூலம் இணைத்து அழைப்பாளரிடம் பேசச் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவரும் தேவைப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொண்டு, மருத்துவ ஊழியருடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைகிறார்.
அதிகரிக்கும் அக்கறை
சாலையில் செல்லும்போது ஏதாவது விபத்தையோ அசம்பாவிதச் சம்பவத்தையோ வேடிக்கை பார்த்துச் செல்வது முன்பெல்லாம் வழக்கமாக இருந்தது. இப்போது யார் விபத்தில் சிக்கினாலும், அதை முதலில் பார்ப்பவர் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் செயல்பட்டுவரும் 108-க்கு போன் செய்து அழைப்பது புது வழக்கமாக மாறிவிட்டது.
சாலை விபத்துகள் மட்டுமல்லாமல் மகப்பேறு, கலவரம், கட்டிட இடிபாடு போன்றவற்றுக்கும் எண் 108 தொடர்புகொள்ளப்படுகிறது. உடனே அவசர ஊர்தி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களோ, மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்களோ அதில் ஏறிச் செல்கிறார்கள். 108 சார்ந்து நமக்குத் தெரிந்த பிம்பம் இதுதான். ஆனால், நெருக்கடிகள் நிறைந்த இந்த அவசர சேவைப் பிரிவு எப்படி இயங்குகிறது? அதற்கு விடை தருகிறது சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்துக்குள் செயல்பட்டுவரும் 108 அவசர கால சேவை அலுவலகம்.
தொடரும் கண்காணிப்பு
மருத்துவம், காவல், தீயணைப்பு ஆகிய மூன்று துறையினருடனும் இவர்கள் தொடர்பில் இருக்கிறார்கள். எந்த அழைப்பாக இருந்தாலும் அருகில் இருக்கிற அரசு மருத்துவமனைக்கு முதலில் தகவல் தெரிவிக்கிறார்கள். கலவரம், விபத்து, இயற்கைப் பேரிடர் போன்ற சம்பவங்களின்போது காவல், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். 108 அலுவலகத்துக் குள்ளேயே மருத்துவர் குழுவும் இருக்கிறது.
உதவி தேவைப்படும்போது மருத்துவர்கள், அழைப்பாளர்களுடன் தொடர்புகொண்டு தகவல் பெற்று வழிநடத்துகிறார்கள். ஆம்புலன்ஸில் இருக்கிற மருத்துவ உதவியாளருக்குத் தேவைப்படும் உதவிகளையும் இந்த மருத்துவர் குழு வழங்கும். இத்துடன் இவர்களுடைய வேலை முடிந்துவிடுவதில்லை. ஆம்புலன்ஸின் பயணம் முழுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. ஏதாவது தாமதமோ, தடங்கலோ ஏற்பட்டால் விளக்கம் கேட்கப்பட்டு, அவசியமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறை போக்கும் முயற்சி
108 சேவையைத் தொடர்பு கொண்டவர் களை 48 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு, பாதிக்கப் பட்டவரின் நிலைமையை விசாரிக் கிறார்கள். சேவையில் திருப்தி யில்லை என்று அழைப்பாளர்கள் சொன்னால், எந்த இடத்தில் தவறு எனக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய முயல்கிறார்கள்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் 108 அவசர கால சேவை பிரிவு கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளுக்குக் குறைந்தது 7, 500 அழைப்புகள்வரை ஏற்கப்படுகின்றன. 24 மணி நேர சேவைப் பிரிவு என்றாலும், மாலை 4 மணிக்கு மேல்தான் நிறைய அழைப்புகள் வருகின்றன என்கிறார் இந்தச் சேவைப் பிரிவின் விழிப்புணர்வு மற்றும் மருத்துவமனைகள் தொடர்புத்துறை மேலாளர் பிரபுதாஸ்.
“பள்ளி, அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்பும்போது போக்குவரத்து அதிகமாக இருக்கும். பகல் வெளிச்சம் குறைந்து இரவு தொடங்கும்போது நிறைய சாலை விபத்துகள் ஏற்படக்கூடும். அதனால் மாலை 4 மணிக்கு மேல் அதிகபட்ச அழைப்புகள் வருகின்றன” என்று சொல்லும் பிரபுதாஸ், நகரங்களைவிடக் கிராமப் புறங்களில் இருந்தே அதிகபட்ச அழைப்புகள் வருகின்றன என்கிறார்.
நிறைந்த வசதி
நகரங்களில் மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் அதிகம். கிராமப் பகுதிகளில் இவை குறைவு என்பதால் 108 அவசர கால சேவைப் பிரிவைப் பொதுமக்கள் அதிகமாகத் தொடர்புகொள்கிறார்கள். கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை மகப்பேறு தொடர்பான அழைப்புகளே அதிகம். பல பிரசவங்கள் 108 ஆம்புலன்ஸிலேயே நடந்திருக்கின்றன.
இதுவரை கிட்டத்தட்ட 4 கோடி அழைப்புகளுக்கு மேல் வந்திருக்கின்றன. அவற்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டு லட்சத்தைத் தொடுகிறது. மகப்பேறு, சாலை விபத்துகள் தவிர மாரடைப்பு, மூச்சிரைப்பு, வயிற்று உபாதைகள், விஷம் தொடர்பானவை, தாக்குதலில் அடிபடுதல், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள், காக்காய் வலிப்பு, பிறந்த குழந்தைகள் தொடர்பான பாதிப்புகள், பக்கவாதம், திடீர் மயக்கம், தீ விபத்து இப்படி நீள்கிறது பட்டியல்.
முதலுதவி
இவற்றில் உடனடியாகச் சிகிச்சை தேவைப்படுகிறவர்களுக்கு ஆம்புலன்ஸில் வைத்தே முதலுதவி அளிக்கப்படுகிறது. எல்லாவிதமான உபகரணங்களும் ஆம்புலன்ஸில், எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன. மகப்பேறின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுக்குள் வைக்கும் உபகரணம் அவற்றுள் குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கின்றன. பச்சிளங் குழந்தைகளுக்கும், மலை யோரப் பகுதிகளுக்குமான வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. நகரங்களைவிடக் கிராமப் பகுதிகளில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கிறார்கள். தேவையைப் பொறுத்து ஒரு இடத்துக்கே பல ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அனுப்பி வைக்கிறார்கள்.
செம்மைப்படுத்தும் பயிற்சி
கிட்டத்தட்ட 3,500 பேரின் ஒத்துழைப்போடு நடைபெறுகிறது இந்தச் சேவை. வாகனம், மருத்துவம், காவல்துறை என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பணியில் இருப்பவர்கள் எப்போதும் விழிப்புடனும் மனத் தெளிவோடும் விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும். காரணம், வெளியூருக்கு வந்து விபத்தில் சிக்கிக்கொள்பவர்களுக்குத் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாது.
படிப்பறிவில்லாத மக்களுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாது. இதுபோன்ற நேரத்தில் அழைப்பாளரிடம் பொறுமையாகப் பேசி தொடர் கேள்விகள் கேட்டு, அவர்களுக்கு உதவ வேண்டும். 108 சேவை மையத்தில் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் மருத்துவ உதவியாளார்களுக்கும்
அழைப்பை ஏற்றுப் பதில் சொல்லும் பதிவு அலுவலர்களுக்கும் இங்கே 45 நாட்கள் பயிற்சி தரப்படுகிறது. தவிர அடிக்கடி புத்தாக்கப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன.
பாராட்டும் புகாரும்
"இது தவிர எங்கள் பணியாளர் களுடன் சேர்ந்து ‘விடியல்’ என்ற பெயரில் தன்னார்வ சேவையையும் நேரம் கிடைக்கும்போது செய்து வருகிறோம்" என்று சொல்லும் பிரபுதாஸ், தங்கள் ஊழியர்கள் மீது தெரிவிக்கப்படும் புகார்களையும் ஒப்புக்கொள்கிறார்.
"சில இடங்களில் எங்கள் சேவை குறித்த புகார்கள் வரத்தான் செய்கின்றன. பாராட்டை எப்படி எதிர்கொள்கிறோமோ, அதேபோலத்தான் புகார்களையும் கவனத்தில் கொள்கிறோம். வாகனம் வருவதில் தாமதம், ஊழியர்களின் அலட்சியம், தகாத நடத்தை போன்றவைதான் பெரும்பாலும் குற்றச்சாட்டுகளாகப் பதிவுசெய்யப்படுகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கிறோம்" என்கிறார்.
வெளியுலகின் எந்தப் பாதிப்பும் இல்லாமல் அழைப்புகளை ஏற்றுப் பதில் சொல்கிறார்கள் பதிவு அலுவலகர்கள். இடைவிடாத இதயத்துடிப்பு போல் உயிரைக் காக்கும் நோக்கத்துடன், அழைப்புகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
வேண்டாமே விளையாட்டு
வழக்கம்போலவே இங்கும் தேவையற்ற அழைப்புகள் அதிகம். சம்பந்தமில்லாமல் பலர் போன் செய்து இடையூறு ஏற்படுத்துவதும் நடக்கத்தான் செய்கிறது. ஒரு நாளுக்கு வரும் அழைப்புகளில் கிட்டத்தட்ட 40 சதவீத அழைப்புகள் இதுபோன்ற வீணான அழைப்புகளாகவே இருக்கின்றன. இப்படித் தேவையில்லாமல் தொடர்புகொண்டு தொல்லை தரும் இந்த நேரத்தில் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களின் அழைப்பு, காத்திருக்க வேண்டியதாகிப் போகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பின்தொடர்ந்து மற்ற வாகனங்களை முந்திச் செல்வது எத்தனை கொடூரச் சிந்தனையோ, அதைவிடக் கொடூரம் நிறைந்தது இப்படித் தேவையில்லாமல் அழைத்து தொந்தரவு செய்வதும். இதைத் தவிர்ப்பதே மனிதத்தன்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT