Published : 27 Aug 2016 02:24 PM
Last Updated : 27 Aug 2016 02:24 PM

மது வருமானத்தை ஏன் ஒழிக்க வேண்டும்?

மனித இனம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை

*போர்களில் இறந்தவர்களைவிட, மதுவால் மடிந்தவர்கள்தான் அதிகம்.

*தொற்று நோய்களால் இறந்தவர்களைவிட, மதுவால் முடிந்தவர்கள்தான் அதிகம்.

*இதய நோயால், புற்று நோயால் இறந்தவர்களைவிட மதுவால் இறந்தவர்கள்தான் அதிகம்.

*இயற்கை சீற்றங்களால் இறந்தவர்களைவிட, மதுவால் சீரழிந்தவர்கள்தான் ஏராளம்.

*நோய்கள், விபத்து போன்றவற்றால் இறந்தவர்களையெல்லாம் சேர்த்துப் பார்த்தாலும், அவர்களைவிட குடியால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கைதான் பெரிது.

மது எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை

ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், பதவியிலிருப்பவர், பாமரர், பெரியவர், சிறியவர், சாதித்தவர், சாதாரணமானவர், கறுப்பர், வெள்ளையர், வெளிநாட்டவர், உள்நாட்டவர், திருமணமானவர், திருமணமாகாதவர், ஆண், பெண் என்று யாரிடமும் குடிநோய் வேறுபாடு பார்ப்பதில்லை. குடிநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், யாரும் பாதிக்கப்படலாம். சொல்லப்போனால் இந்நோயால் பாதிக்கப்படாத மனிதச் சமூகமே இல்லை.

வரலாற்றுச் சான்றுகள்

சமூகவியலாளரும் பேராசிரியருமாகிய டாய்ன்பீ, “மனிதச் சமூகத்தின் 21 நாகரிகங்களில் 19 நாகரிகங்கள் மதுவால் அழிந்துள்ளன” என்று எழுதியுள்ளார். எனவே, மது நோயால் சீரழியாத மனித நாகரிகங்களே இல்லை எனலாம். ஆதி காலத்திலிருந்தே மது அருந்தும் பழக்கம் மனிதச் சமூகத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவில் வேதக் காலத்தில் சோமபானம், சுராபானம், மிருத்சஞ்சீவினி போன்ற மது வகைகள் இருந்ததாகப் புராணங்களும் இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. சீனாவில் ஷம்ஸீ என்ற அரிசியிலிருந்து மது தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன. கிரேக்க நாட்டில் மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாகவும், மாமன்னன் அலெக்சாண்டர் 32 வயதில் இறக்க மதுதான் காரணமென ஆதாரங்கள் கூறுகின்றன. எகிப்தில் பீர் அருந்தும் பழக்கம் இருந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன. ரோம் நாட்டில் ஒயின் பரிமாறப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன. அரேபியா மதுவுக்குப் பெயர் போனதாக இருந்ததாகவும், அங்கிருந்துதான் மதுவுக்கு ஆல்கஹால் என்ற பட்டப் பெயரே வந்ததாகவும் வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.

சமூகத்தில் உள்ள பல நோய்களும், அந்நோய் கண்டவர்களை நேரடியாகப் பாதிக்கின்றன. அதேநேரம், குடிநோய் மட்டுமே மது அருந்துபவரை மட்டுமல்லாமல் அவருடைய உறவினர்கள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மட்டுமில்லாமல் தெரியாதவர்கள், அறிமுகமில்லாதவர்களிடம்கூடப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. இது ஒரு தனிமனித நோயல்ல, சமூகத்தைப் பாதிக்கும் நோய்.

பெரியோர் மொழி

“நம்மிடையே ஆயிரக்கணக்கான மது அருந்துபவர்கள் உலவுவதைவிட, ஓட்டாண்டியான இந்தியாவே மேல்” என்று சொல்லியிருப்பதோடு, மதுபான வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை ஒழிக்க வேண்டும் என்றார் காந்தி. நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, மதுவால் ஏற்படும் தீங்குகளை உணர்ந்து மதுவிலக்கைப் பூரணமாக அமல்படுத்த விரும்பினார்.

அமெரிக்க அனுபவம்

வளர்ச்சி பெற்ற நாடுகளில் முதன்மையானதாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மது அருந்துவதைத் தடுக்கத் தனி இயக்கம் உருவானது. 1920-ல் அங்கே உருவாக்கப்பட்ட மதுவிலக்குச் சட்டம், மதுபானம் உற்பத்தி செய்வதையும் ஏற்றுமதி செய்வதையும் இறக்குமதி செய்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்தது. இதனால் அந்நாட்டின் உற்பத்தி 10 சதவீதம் பெருகியது, முதலீடுகளோ 150 சதவீதம் உயர்ந்தது. அதேநேரம் இறப்பு விகிதம் குறைந்தது, மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்தது, குற்றங்கள் குறைந்தன. ஆனால், மதுவிலக்குச் சட்டம் நிலைக்கவில்லை. மதுவிலக்குச் சட்டம் விலக்கப்பட்ட பின் குடிப்பவர் எண்ணிக்கை பெருகியது, குற்றங்கள் மலிந்தன. விபத்துகள் அதிகரித்தன, நோய்கள் பெருகின. குடிப்பழக்கமோ 235 சதவீதம் உயர்ந்தது, அதன் காரணமாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகரித்தது.

மதுவைப் பற்றி சிந்திப்போம்

மதுவால் தனிமனிதர்கள், குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள், ஏன் உலகே பெரும் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் ஆளாகியும், ஏன் இதிலிருந்து மனிதச் சமூகம் முழுமையாக விடுபட முடியவில்லை? மது ஏன் இன்னும் நம் சமூகத்தில் பெரும் அழிவு சக்தியாக உள்ளது? நம் நெஞ்சில் எழுகிற கேள்வியெல்லாம், மதுவுக்கு ஏன் இந்த முன்னுரிமை? மதுவுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? ஒன்று மட்டும் தெளிவு. இது எளிதான பிரச்சினையல்ல. தொடர்ந்து சிந்திப்போம். தொடர்ந்து செயல்பட்டு மாற்று வழியைக் காண்போம்.

நன்றி: போதையைத் தவிர்க்கும் நமது குடும்பம்,

டாக்டர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன், அனல் வெளியீடு.

நூல் கிடைக்குமிடம்: திருவள்ளுவர் நூல் நிலையம், அலைபேசி: 94425 84238.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x