Published : 02 Jul 2016 01:35 PM
Last Updated : 02 Jul 2016 01:35 PM
உலகத்தில் எத்தனையோ மருத்துவ முறைகள் இருந்தாலும், அலோபதி மருத்துவ முறைக்கு அடுத்தபடியாகப் பரவலாகப் பின்பற்றப்படும் மருத்துவ முறை ஹோமியோபதி. மருத்துவ முறைகளில் இது மிகவும் இளமையானது. இயற்கை விதிகளை, அடிப்படை விதிகளாக்கக் கொண்ட மருத்துவப் முறை. ஜெர்மனியில் மருத்துவ பட்டம் பெற்ற அலோபதி மருத்துவர் சாமுவேல் ஹானிமனால் 1796-ம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட மருத்துவ முறை இது.
ஹோமியோபதியின் சிறப்பு
ஹோமியோபதி மருத்துவ முறை, நோய்க்குப் பதிலாக நோயுற்ற மனிதரையே குணப்படுத்துகிறது. நம்பத்தகுந்த முறையில், துன்பம் விளைவிக்காத வழியில், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தத்துவத்தின் அடிப்படையில் இது குணப்படுத்துகிறது. பக்கவிளைவு இல்லாத வகையிலும் குணப்படுத்துகிறது.
இயற்கை விதிகள்
1. பொருள் என்பது எதிர்மறைப் பண்புகளின் கூட்டுச் சேர்க்கை.
2. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் அனைத்துடனும் இடைவிடாத உறவைக் கொண்டுள்ளன. இதனால் ஒரு பொருள் மாறுவது மட்டுமல்லாமல், அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
3. பொருள் என்பது ஆற்றலின் செரிவு. இதை அழிக்கவோ ஆக்கவோ முடியாது.
இந்த இயற்கை விதிகளின் அடிப்படையில்தான் ஹோமியோபதி கட்டமைக்கப்பட்டுள்ளது.
அடிப்படைத் தத்துவம்
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம் ‘ஒத்ததை ஒத்தது குணமாக்கும்’ என்பதே. இதற்கான விளக்கம்: எந்த மருந்து எந்த நோயைக் குணப்படுத்துகிறதோ, அதே மருந்து ஆரோக்கியமான மனிதருக்குக் கொடுக்கப்படும்போது அதே நோயை உண்டு பண்ணுகிறது. ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?
மருந்து என்பது ஒரு பொருள். அதற்கு இரு வேறுபட்ட பண்புகள் இருக்கின்றன. ஒரு பொருளின் ஒரு பண்பு நோயை உருவாக்கினால், அதனுடைய எதிர்பண்பு நோயைக் குணப்படுத்துகிறது. இப்படி எளிதில் புரியக்கூடிய தத்துவத்தின் அடிப்படையில் ஹோமியோபதி செயல்படுகிறது.
நோய் என்றால்?
மற்ற மருத்துவ முறைகள் பார்ப்பதுபோல், ஹோமியோபதி மருத்துவத் துறை நோயைப் பார்ப்பது இல்லை. நோயை உயிராற்றல் சீர்கேடு அடைவது என்று இது கூறுகிறது. உயிராற்றல் சீர்கேடு அடைவதால், உணர்வு நிலை மாறுகிறது. உணர்வு நிலை மாற்றத்தால், செயல்பாட்டு நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த உணர்வுநிலை மற்றும் செயல்பாட்டு நிலைப் பாதிப்புகள் மனதிலும் உடலிலும் அறிகுறிகளாக வெளிப்பட்டுப் புறஉலகுக்குத் தெரிகின்றன. அந்த அறிகுறிகளின் தொகுப்பு, நோயைப் பற்றிய வரைபடத்தைத் தருகிறது. இதுதான் ஹோமியோபதியில் நோயைப் பற்றிய வரையறை. எனவே, ஹோமியோபதி இன்ன நோய் என்று பார்ப்பதற்குப் பதிலாக நோயுற்ற முழு மனிதனையும் பார்க்கிறது.
மருந்துகள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஹோமியோபதி மருந்துகளே. ஏனென்றால் அனைத்தும் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்துமே எதிர்மறைப் பண்புகளின் தொகுப்பே.
அதேநேரம், ஹோமியோபதியில் முற்றிலும் வேறுவிதமாக மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்துகள் பருப்பொருட்களாகக் கொடுக்கப்படுவதில்லை. அவை கணித முறைப்படி வீரியப்படுத்தப்பட்டு ஆற்றலாகக் கொடுக்கப்படுகின்றன.
நோய் என்பது உயிராற்றலுக்கு ஏற்படும் பாதிப்பு, இந்தப் பாதிப்பை ஏற்படுத்துவது நோயாற்றல். பாதிக்கப்பட்ட உயிராற்றலைச் சரிசெய்வதற்குப் பருப்பொருளால் முடியாது. ஆற்றலால்தான் முடியும் என்பதால், மருந்துகள் மருந்தாற்றலாக மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
ஹோமியோபதியும் மனமும்
ஹோமியோபதி மற்ற மருத்துவ முறைகளைப் போல் அல்லாமல், மனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒரு மனிதரைத் தனித்துவப்படுத்துவதில் அவருடைய மனநிலையும் சுபாவமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால்தான் டாக்டர் ஹானிமன், ஒரு துயருடைய மனநிலையும் சுபாவமும் மருந்து தேர்வு செய்வதைத் தீர்மானிக்கும் காரணிகளில் முதன்மையானதாக இருப்பதாகக் கூறுகிறார். மேலும் தீவிர நோயாக இருந்தாலும் மற்ற அறிகுறிகளோடு மனநிலையிலும் சுபாவத்திலும் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கும் அறிகுறிகளையும் சேர்த்துக்கொண்டு மருந்து தேர்வு செய்தால் மட்டுமே ஹோமியோபதி இயற்கையோடு இயைந்த வகையில் நோயைக் குணமாக்குகிறது என்று கூறுகிறார். மனிதர்களுடைய சுபாவம் பாதிக்கப்படாமல் நோய் வருவதில்லை என்பதையும் ஹோமியோபதி அறுதியிட்டுக் கூறுகிறது.
மருந்து கொடுக்கும் முறை
ஹோமியோபதி, மனிதர்களை முழுமையாகப் பார்க்கிறது. இயந்திர கதியாக, பகுதிப் பகுதியாகப் பார்ப்பதில்லை. நோய் என்பது ஒரு மனிதர் முழுமையாகப் பாதிப்படைவது. குணம் என்பது ஒரு மனிதர் முழுமையாக நலமடைவது.
முழு மனிதரையும் நலப்படுத்த முதலில் அந்த மனிதரின் தனித்துவத்தைக் கண்டறிய வேண்டும். அதாவது அந்த மனிதரை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுத்துகிற பண்பைக் கணித்துத் தனித்துவப்படுத்த வேண்டும். பிறகு துயருற்றவரிடம் உள்ள அறிகுறிகளைத் தொகுத்து, அந்தத் தொகுப்பில் உள்ள துயருக்கே உண்டான தனித்துவமான அறிகுறிகளைக் கண்டறிந்து, உகந்த மருந்தைத் தேர்வு செய்து நுண்ணிய அளவில் கொடுக்கும்போது, நோய் குணமாகிறது.
மாறாத ஒன்று
ஹோமியோபதி இயற்கை விதிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மருத்துவம். இயற்கை விதிகள் மாறாததுபோல், ஹோமியோபதியும் மாறுவதில்லை. ஹோமியோபதியில் மருந்துகள் நிரூபணம் செய்யப்பட்டவை. நிரூபணம் செய்யப்பட்டபோது எந்த அறிகுறிகளை ஏற்படுத்தினவோ, அதே அறிகுறிகளுக்குச் சம்பந்தப்பட்ட பொருளே மருந்து. இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும். இந்த மருந்துகள் காலாவதி ஆவதில்லை.
டாக்டர் ஹானிமன் 1790-ல் நிரூபணம் செய்த சின்கோனா மருந்து அன்றைக்கு என்ன அறிகுறிகளைத் தோற்றுவித்ததோ, அதே அறிகுறிகளுக்கு அன்றும் இன்றும் ஒரே மருந்துதான். ஹோமியோபதி மருந்து இப்படி மாறாத ஒன்று.
கட்டுரையாளர், ஹோமியோபதி சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர்
மற்ற மருத்துவ முறைகள் பார்ப்பதுபோல், ஹோமியோபதி மருத்துவத் துறை நோயைப் பார்ப்பது இல்லை. நோயை உயிராற்றல் சீர்கேடு அடைவது என்று இது கூறுகிறது.
- சாமுவேல் ஹானிமன்
தொடர்புக்கு: supremexeroxdgl@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT