Published : 01 Apr 2017 10:29 AM
Last Updated : 01 Apr 2017 10:29 AM
பசுவின் பாலில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் நிறைய உள்ளது என்று குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் தினசரி அதிகப் பால் குடிப்பது வழக்கில் உள்ளது. பாலில் எல்லாச் சத்துகளும் உள்ளன என ஊடக விளம்பரங்கள் மூலம் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் பால் விற்பனைக்குச் செய்த தந்திரத்தின் விளைவு இது. ஆனால், பசுவின் பாலிலுள்ள கால்சியம் சிறுகுடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலப்பதற்குத் தேவைப்படும் வைட்டமின் ‘டி'யும் மக்னீசியமும் பாலில் போதுமான அளவில் இல்லை. அதைவிட கீரைகள், காய்கறியில் இருந்து கிடைக்கிற கால்சியம் முழுமையாக உடலில் கலக்கிறது.
இப்படி ‘மெல்லக் கொல்லும் பால்’ புத்தகம் மூலமாகச் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதுநிலை மருத்துவரான ஜெகதீசன் முன்வைக்கும் பல தகவல்கள், பொதுப்புத்தியில் நிலவுகிற பல்வேறு நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவருடைய கருத்துகள் பால் பற்றிய புனைவைக் கட்டுடைக்கின்றன.
அமெரிக்க கார்பரேட் நிறுவனமான மான்சாண்டோ மூவாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்த ஆர்.பி.எஸ்.டி. என்ற ஹார்மோனை ஊசி மூலம் பசு மாடுகளுக்குச் செலுத்திப் பால் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்தது, முழுக்க வணிக நோக்கமுடையது. அந்தச் செயல் மனிதக் குலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுவிட்டது என்று வருந்துகிறார் நூலாசிரியர்.
தாய்ப்பாலும் மாட்டுப்பாலும்
இந்த நூலில் மனித இனத்தின் தாய்ப்பால், பசு உள்ளிட்ட மற்ற விலங்குகளின் பாலுடன் ஒப்பிடப்பட்டுத் தரப்பட்டுள்ள விளக்கம் முக்கியமானது. தாய்ப்பாலில் புரதமும் கொழுப்புச்சத்தும் குறைவாக இருந்தாலும், லாக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்து கூடுதலாக இருக்கிறது. அதிலுள்ள கேலக்டோஸ் குழந்தையின் மூளை செயல்திறனுக்கு அவசியமானது. ஒரு வயது வரையிலும் தாய்ப்பால் மட்டும் அருந்தும் குழந்தைகளின் புத்திசாலித்தனமானது (IQ), பசு அல்லது பவுடர் பால் குடிக்கிற குழந்தைகளைவிட 10.2% அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒப்பீட்டு நிலையில் பசு அல்லது எருமைப் பாலில் கொழுப்புப் பொருளின் சதவிகிதம் அதிகம். விலங்குகளுடைய குட்டிகளின் உடல் வளர்ச்சி அதிவேகமாக இருப்பதால், அதற்குத் தக்கவாறு அவற்றின் பாலில் கொழுப்பும் புரதச் சத்தும் கூடுதலாக உள்ளன. தாய்ப்பாலைவிட விலங்குகளின் பால் குடித்து வளரும் குழந்தைகள், சிறுவயதிலே உடல் பருமன் (Obesity) நோயால் அவதிப்பட வாய்ப்புண்டு என்று ஜெகதீசன் சுட்டிக்காட்டுகிறார். குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களால் வருகிற அலர்ஜி நோய்களில் பால் புரத ஒவ்வாமை முதன்மையானது.
நோய் ஆபத்து
ஒரு வயதுக்கு உட்பட்ட இளம் குழந்தைகளின் திடீர் மரணம் (SIDS) எதனால் ஏற்படுகிறது என்பது புரியாத புதிர்தான். தாய்ப்பாலால் பீட்டா கேசோமார்பின் உருவாகாத காரணத்தால், தாய்ப்பால் மட்டும் குடிக்கிற குழந்தை SIDS நோயினால் இறப்பதில்லை என்ற மருத்துவரின் எச்சரிக்கை கவனத்திற்குரியது. பாலில் இருந்து உற்பத்தியாகும் BCM-7, வலியை மறக்கடிக்கும் போதைப் பொருளான மார்பின் போன்று செயல்படும் தன்மையுடையது.
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அபூர்வமாக இருந்த ரத்தப் புற்று நோய், இன்று பரவலானதற்குக் காரணம் பால் பொருட்களின் பயன்பாடு அதிகரித்ததுதான் என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தற்போதுள்ள கலப்பினப் பசுக்களில் 80% அளவுக்கு மாட்டு ரத்தப் புற்றுநோய் வைரஸ் கிருமிகளின் தாக்கம் உள்ளது. இத்தகைய பசுக்கள் நிரம்பிய பண்ணைகளில் இருந்து சேகரிக்கப்படும் பாலிலுள்ள கிருமிகளைப் பாஸ்சரைசேஷன் (Pasteurisation) முற்றிலும் அழிக்க முடியாது. பாக்கெட் பாலைக் காய்ச்சாமல் தயாரிக்கப்படும் மில்க் ஷேக், கோல்டு காபி, ஐஸ்கிரீம், கிரீம்கேக் போன்றவற்றை உண்பவர்களுக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
சமூக அக்கறை
‘வெண்மைப் புரட்சி' என்ற பெயரில் கார்பரேட் நிறுவனங்கள் உருவாக்கிய கொள்ளைக்குப் பின்னால் பொதிந்துள்ள மனித குலத்துக்கு எதிரான விஷயங்களை அம்பலப்படுத்தியுள்ள மருத்துவர் ஜெகதீசனின் முயற்சி, சமூக அக்கறையின் விளைவாகக் கருதலாம். ‘வெளுத்தது எல்லாம் பால்' என்ற சொலவடை சத்தியத்தைச் சொல்வதாகும். அந்தப் பாலுக்குப் பின்னால் மக்கள் உடல்நலத்துக்கு விரோதமான அம்சங்கள் அடங்கியிருக்கின்றன. ஆய்விதழ்க் கட்டுரைகளின் பின்புலத்தில் குழந்தை மருத்துவரான டி.ஜெகதீசன் எழுதியுள்ள ‘மெல்லக் கொல்லும் பால்' என்கிற இந்தப் புத்தகம் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது அவசியம்.
மெல்லக் கொல்லும் பால்,
டாக்டர் த. ஜெகதீசன்,
52, கானாபாக் தெரு, திருவல்லிக்கேணி,
சென்னை-5 தொடர்புக்கு: 044-28525759
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mpandi2004@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT