Published : 20 Aug 2016 03:48 PM
Last Updated : 20 Aug 2016 03:48 PM
மொச்சை பயறுத் தாவரம், அவரைக் குடும்பத் தாவரங்களுள் (ஃபேபேசியே) முக்கியமானது. தமிழகத்தில் புரதத் தேவையை நிறைவு செய்வதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறி வகை, அவரைக் குடும்பத் தாவரங்களே. அந்த வகையில் மொச்சை மிக முக்கியமானது.
பொங்கல் பண்டிகைக்கான படையல் விருந்தில் மொச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது. மொச்சை கெட்டிக்குழம்பு, மொச்சைப் பிரட்டல் போன்றவையும் பிரபலமானவையே. தமிழகம் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் புரதத் தேவையை நிறைவு செய்யும் முக்கியப் பயறு வகை இது.
பயன்பாடு
மொச்சைப் பயறு, பயிராக்கப்பட்ட தாவரங்களில் மிகப் பழமையான ஒன்று. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் இந்தத் தாவரம், உலகெங்கும் உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் உண்ணப்படுகிறது.
மொச்சையில் பல்வேறு வகைகள் உண்டு. வகைக்கு ஏற்பப் பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் நெற்று இருக்கும். பொதுவாகப் பிரகாசமான கருஞ்சிவப்பு, வெளிறிய பச்சை நிறங்களில் நெற்று காணப்படும். விதைகள் வெள்ளை, பழுப்பு, சிவப்பு, கறுப்பு நிறங்களில் வருகிறது. நாட்டு மொச்சை வகையும் பாம்பு மொச்சை வகையும் பரவலாக அறியப்பட்டவை.
மொச்சையும் அவரைக்காயும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. மொச்சையின் மேலுறையைச் சாப்பிட முடியாது, கடினமாக இருக்கும். உள்ளிருக்கும் விதை சாப்பிடப்படுகிறது. அதேநேரம் அவரைக்காயை மேலுறையுடன் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், அவரை விதை காய வைத்துச் சாப்பிடப்படுவதில்லை.
மொச்சையின் விதை பச்சையாகவும் காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து உண்ணப்படுகிறது. மொச்சையில் டானின், டிரைப்சின் போன்றவை இருப்பதால் சமைப்பதற்கு முன் ஊறவைத்து, மேற்கண்ட வேதிப்பொருட்களை நீக்க வேண்டும். அவித்தே சாப்பிட வேண்டும். உப்பு சேர்த்து அவித்தால் சுவையாக இருக்கும்.
மொச்சை பயற்றை முளைகட்டி மேல்தோல் நீக்கிச் சாப்பிட்டால், அதற்குப் பெயர் பிதுக்குப் பருப்பு. மொச்சையை ஊற வைத்து, மேல்தோலை நீக்கிவிட்டு உப்பு, காரம் சேர்த்து உலர்த்தி, நெய் விட்டு வறுத்துச் சாப்பிடுவது கிராமத்து நடைமுறை. சில இடங்களில் உப்பு, கார்ப்பு இன்றி வேறு காய்கறிகளுடன் கலந்தும் பயன்படுத்தப்படுகிறது.
மொச்சை பயற்றை உண்பதால் சிலருக்கு அரிப்பு ஏற்படும். அதைத் தவிர்ப்பதற்கு மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் நூதன முறையைப் பயன்படுத்துகின்றனர். மொச்சையை அவிக்கும்போது, முழு தும்பைச் செடியை இட்டு அவித்தால் மொச்சை சிறிது இனிப்பைப் பெறும், அரிப்பும் ஏற்படாது.
சாப்பிடும் போது தும்பையை நீக்கிவிடலாம்.
மற்றப் பயன்கள்
பொதுவாகப் பயறுக்காகப் பயிரிடப்பட்டாலும், கால்நடைத் தீவனமாகவும் அலங்காரத் தாவரமாகவும் மருத்துவத் தாவரமாகவும்கூட இது வளர்க்கப்படுகிறது. புதர் போல வளரும் இந்தத் தாவரம் கேழ்வரகு, கம்பு, சோளம், இருங்குசோளம், நிலக்கடலை, ஆமணக்கு போன்றவற்றுக்கு இடையே ஊடுபயிராகவும் பயிரிடப்படுவது உண்டு.
மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்துவதற்கு மொச்சை உள்ளிட்ட அவரைக் குடும்பத் தாவரங்களைப் பயிர் சுழற்சி முறையில் பயன்படுத்துவது வழக்கம். அது மட்டுமல்லாமல், மொச்சைத் தாவர இலைகள் மக்குவதன் காரணமாகவும் மண்ணுக்கு அதிக அளவில் நைட்ரஜன் கிடைக்கிறது. அதனால் மூடாக்கு பயிராகவும் இயற்கை உரமாகவும் மொச்சைத் தாவரம் பயன்படுத்தப்படுகிறது. வறட்சியிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய திறனைக் கொண்டது.
ஊட்டச்சத்து
l மொச்சையில் 20-28 சதவீதம் புரதம், அதேபோல வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகம்.
l காய்ச்சலை மட்டுப்படுத்தும், அளவாகச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமலைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும், மலத்தைப் பெருக்கும்.
l வலிப்பு நோயை மட்டுப்படுத்தும்.
l உடலைத் தேற்றக்கூடியது.
l நமீபியாவில் மொச்சையின் வேர் இதயக் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
l பிலிப்பைன்ஸ், சீனாவில் பாலுணர்வு தூண்டியாக மொச்சை கருதப்படுகிறது.
l கென்யாவில் உள்ள கிகுயு பழங்குடிகள் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மொச்சைப் பயற்றையும் வாழைப்பழத்தையும் காலம்காலமாகக் கலந்து கொடுத்து வருகின்றனர். எனவே, சத்து மாவுக் கலவையிலும் மொச்சையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
l வாயுவைத் தூண்டும் என்பதால், இதை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
தாவரவியல் பெயர்: Lablab purpureus
ஆங்கிலப் பெயர்: Lablab-bean / Indian bean
நவதானியங்களில் ஒன்று
l உடலை வளர்க்கும் இனிப்பு சுவை கொண்டது மொச்சை. உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. ‘கோர உட்டிணம் தணிக்கும்’ என்ற சித்தர் அகத்தியரின் பாடல் வரியின் மூலம், மிகுதியான உடல்சூட்டை மொச்சை குறைக்கும் என்பது தெளிவாகிறது.
l பாலுண்ணி (Molluscum contagiosum) மீது மொச்சையை உரைத்து வெளிப்பிரயோகமாகத் தொடர்ந்து பூசிவர, பாலுண்ணி மறையும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT