Published : 28 Oct 2014 12:51 PM
Last Updated : 28 Oct 2014 12:51 PM
தூக்கத்தின்போது தங்களையும் அறியாமல் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இன்றைய குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைவாக இருப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணம்தான். என்றாலும், இன்றைய பெற்றோரின் கவனக்குறைவும், இந்தப் பிரச்சினைக்கு வழி விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் எப்படிப் பல் துலக்க வேண்டும், உணவை எப்படிச் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைக்கு நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். இதேபோல் இரவுத் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், எப்படிக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்பதைக் கற்றுத் தந்து பழக்கப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமை.
ஆனால், இன்றுள்ள பரபரப்பான வாழ்க்கைமுறையில், பெற்றோர் இருவருமே வேலைக்குப் போகிறவர்களாக இருப்பதால், குழந்தையுடன் அவர்கள் செலவிடும் நேரம் குறைவு. அதிலும் ‘இரவில் படுக்கையை நனைக்கும் பழக்கம்’ (Nocturnal enuresis) போன்ற அவசியமான பயிற்சி முறைகளைக் கற்றுத்தருவது பெற்றோரிடம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் ஐந்து வயதைத் தாண்டியும் சில குழந்தைகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
முதல் நிலை பிரச்சினை
படுக்கப் போகும்போது அதிக அளவில் தண்ணீர், பால், காபி போன்ற திரவ உணவுகளைப் பருகிவிட்டுக் குழந்தை தூங்கச் செல்வதும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு காரணம். ஜங்க் ஃபுட் எனப்படும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம், இன்றைய குழந்தைகளிடம் அதிகரித்துவருகிறது. இதில் நார்ச்சத்து மிகவும் குறைவு. இதனால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலில் இறுகிய மலம் சிறுநீர்ப் பையை அழுத்தி இரவில் படுக்கையை நனைக்க வைக்கிறது.
குழந்தைப் பருவத்தில் பெற்றோர் இருவருக்கும் இந்தப் பிரச்சினை இருந்திருந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படலாம். இந்த மாதிரிக் காரணங்களால் ஏழு வயதுவரை இந்தப் பிரச்சினை தொடர்வதை ‘பிரைமரி எனுரெசிஸ்’ (Primary enuresis) என்று சொல்கிறார்கள்.
இதைக் குணப்படுத்தக் கீழ்காணும் வழிகள் உதவும்:
# இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே திரவ உணவு வகைகளைக் கொடுத்து முடித்துவிட வேண்டும்.
# சிறுநீர் கழித்துவிட்டு வந்து தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும்.
# கடிகாரத்தில் அல்லது செல்போனில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்வதை வழக்கப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர் உடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைகள் அலாரத்தை அமர்த்திவிட்டுத் தூங்கிவிடலாம்.
# இப்போது இதற்கென்றே சில கருவிகளும் கிடைக்கின்றன.
இரண்டாம் நிலை
இந்தத் தடுப்பு முறைகளால் பிரச்சினை சரியாகிவிட்ட குழந்தைகள், சில வருடங்களில் திடீரென்று மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பிப்பார்கள். இதற்கு ‘செகண்டரி எனுரெசிஸ்’ (Secondary enuresis) என்று பெயர். இதற்கு மனம் சார்ந்த பிரச்சினைதான் அடிப்படைக் காரணமாக இருக்கும்.
வீட்டில் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, குழந்தைகளுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பது, அதிகக் கண்டிப்பு, பள்ளியில் அதிகப் பாடச்சுமை, தேர்வு பயம், ஆசிரியர் மீதான பயம், பாலியல் வன்முறை, இரவில் பேய், பிசாசு, வன்முறை மிகுந்த படங்களைப் பார்க்கும் பழக்கம் போன்ற சூழலில் வளரும்போது, அது குழந்தையின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் தங்களுக்குள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல மாட்டார்கள்; அதேவேளையில் பயத்துடன் கூடிய மனஅழுத்தம் அதிகரித்துக்கொண்டேவந்து, படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
டைப் 1 சர்க்கரை நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், அதிக வெட்கமும் கூச்சச் சுபாவமும் உள்ள குழந்தைகளுக்கும், கவனக்குறைவாகவும் பரபரப்பாகவும் இருக்கிற குழந்தைகளுக்கும் (Attention Deficit Hyperactivity Disease - ADHD) இந்தப் பிரச்சினை ஏற்படுவது சகஜம்.
சிறுநீரகப் பாதை அமைப்பில் மாறுதல் ஏற்பட்டாலும், நரம்பு பாதிக்கப்பட்டாலும், அங்குத் தொற்று ஏற்பட்டாலும், இந்தப் பிரச்சினை நேரலாம். ஆனால், இவர்களுக்குப் பகல், இரவு இரண்டு வேளைகளிலும் (Diurnal enuresis) இந்தப் பாதிப்பு இருக்கும். இது தவிர, தூக்கத்தில் மூச்சு திணறல், உடல் பருமன், குறட்டை, வலிப்பு போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கும் இது ஏற்படலாம்.
பெரியவர்களுக்கும் இந்தப் பாதிப்பு உண்டு. ஆனால், காரணங்கள் வேறு. நீரிழிவு நோய் உள்ளவர்களும் புராஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு உள்ளவர்களும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தில் இருப்பார்கள். முதியவர்களுக்கு அவர்கள் சாப்பிடும் தூக்க மாத்திரை போன்றவற்றின் பக்கவிளைவாகவும், வயது காரணமாகவும் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல் குறைந்துவிடலாம்.
இதன் விளைவால், சில நேரம் படுக்கையிலிருந்து எழுந்து கழிப்பறைக்குச் செல்வதற்குள் சிலர் படுக்கை விரிப்பை நனைத்துவிடுவார்கள். இவர்களது பிரச்சினையின் தன்மையைப் பொறுத்துச் சிகிச்சையும் பயிற்சியும் கொடுத்துக் குணமாக்கலாம்.
-கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT