Last Updated : 28 Oct, 2014 12:52 PM

 

Published : 28 Oct 2014 12:52 PM
Last Updated : 28 Oct 2014 12:52 PM

முகத்தின் அழகைச் சொல்லும் உணவு

ஒரு பக்கம் சிவப்பாக மாற வேண்டும் என்று கூவிக் கூவி விற்கப்படும் சிவப்பழகு கிரீம்களைப் பூசுவதாலோ, மற்றொரு புறம் கடலை மாவு, பாசிப் பருப்பு மாவு, பால், மஞ்சள், பழ விழுது போன்ற இயற்கையான பொருள்களைப் பூசுவதாலோ சருமத்தை அழகாகவும், மினுமினுப்பாகவும் மாற்றவிட முடியும் என நம்புகிறீர்களா?

செயற்கையான கிரீம்கள் மட்டுமல்ல, இயற்கையான பொருள்களைத் தோல் மீது பூசும்போதும் சருமத்துக்குத் தற்காலிகமான பலன்கள் மட்டுமே கிடைக்கும் என்கின்றனர் சரும நிபுணர்கள். சருமத்தின் அழகைத் தனியாகப் பராமரிக்க முடியாது, எல்லாமே முழு உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்ததுதான் என்பதே சரும நிபுணர்கள் வலியுறுத்தும் விஷயம்.

உணவே அடிப்படை

அதிலும் செயற்கை அழகு சாதனப் பொருட்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது அவற்றில் கலந்திருக்கும் பிளீச்சிங் பொருள்கள், பலவித சரும நோய்களை உருவாகக்கூடியவை.

செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது சருமத்தில் அங்கங்கே தோன்றும் பிக்மெண்டேஷன் (pigmentation) எனப்படும் கறுப்புத் திட்டுகள் முகத்தில் தோன்றுவதுதான், அதற்கான அறிகுறி. முகப்பரு, முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் முதல் மருந்து நாம் உட்கொள்ளும் உணவுதான். வெளிப்பூச்சு களிம்புகள் அத்தனையும் தற்காலிகத் தீர்வு மட்டுமே தரக்கூடியவை.

ஆரோக்கியம் காட்டும் கண்ணாடி

பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமென்றாலும் முதலில் உடலை நன்றாகப் பராமரிக்க வேண்டும். கூந்தல், உடல் ஆரோக்கியத்தை வெளிக்காட்டும் கண்ணாடி. ஒற்றை முடியின் நீளத்தையும் அடர்த்தியையும் வைத்தே நம் உடலின் புரதச்சத்து, நீர்ச்சத்து ஆகியவற்றின் அளவை கணக்கிட முடியுமாம்.

சமீபகாலமாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கூந்தல் நுனியில் வெடிப்பு, பொடுகுத் தொல்லை, வறண்ட சருமம் போன்றவைதான். ஏ.சி அறையில் பல மணி நேரம் இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

பூசணிக்காய், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள காய்-கனிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும், நிறைய தண்ணீர் பருகுவதன் மூலமும் இயற்கை வழியிலேயே இந்தச் சிக்கல்களை எளிமையாகச் சரிசெய்ய முடியும் என்கிறார் சஞ்சீவனம் இயற்கை அழகு மையத்தின் தலைவி அஞ்சலி ரவி.

யார் போட்ட முடிச்சு?

பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றைக்கு அனைவரையும் அச்சுறுத்தும் ஒற்றைச் சொல் ‘ஸ்டிரெஸ்’ (மனஅழுத்தம்). முடி உதிர்தல், சரும நோய்கள் எனப் பல உடல் உபாதைகளுக்கு மனஅழுத்தம்தான் காரணம் என்கிறார்கள். புற உலகம் உருவாக்கும் பதற்றம், மனஅழுத்தம் கூந்தலையும் சருமத்தையும் எப்படிப் பாதிக்க முடியும்?

"ஆயுர்வேத மருத்துவ முறைப்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள்தான் உடலின் சமநிலையைத் தீர்மானிக்கின்றன. உச்சி முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பவை இவைதான். கூந்தல் வளத்தை நிர்ணயிப்பது வாதம் மற்றும் பித்தத் தோஷங்களின் அளவுதான். சருமத்தின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது பித்தத் தோஷம்.

இப்படி இருக்கும் நிலையில் மனஅழுத்தம் ஏற்படும்போது வாதமும் பித்தமும் வேகமாக அதிகரிக்கும். இந்த நிலையில்தான் கூந்தல் உதிர்தல், தலையில் பொடுகு, முகத்தில் கருவளையம், ஆங்காங்கே கறுப்புத் திட்டுகள், சரும வறட்சி போன்ற சிக்கல்கள் ஏற்படும்" என்கிறார் சஞ்சீவனம் ஆயுர்வேத மையத்தின் மூத்த மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.ஆர். யாழினி.

எந்த ஷாம்பு?

சமீபகாலமாகக் கூந்தல் பராமரிப்புத் தொடர்பாக நம்மிடையே நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை அதிக விலையில் விற்கப்படும் கண்டிஷனர் ஷாம்புகளைத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறிவிடும் என்பதுதான்.

அதுவும் ஷாம்புவை தினமும் தேய்த்துக் குளிக்கலாம் என்று அந்த விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால், இது கூந்தலுக்குப் பெருத்த சேதத்தை விளைவிக்கும். இயற்கை பொருள்களான செம்பருத்தி இலை, புங்க மரத்தின் காய், சீயக்காய் ஆகியவற்றைத் தவிர, வேறு எதையும் தினமும் தலையில் தேய்த்துக் குளிப்பது நல்லதல்ல.

மூலிகை ஷாம்பு போன்றவை 100% இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பு என்றாலும்கூட, அதை வாரத்துக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார் டாக்டர் யாழினி. சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியம் நமது உணவு முறையோடும் வாழ்க்கை முறையோடும் நேரடி தொடர்புடையவை. தோல் சார்ந்த நோய்கள் ஏற்பட முதல் காரணம் நம்முடைய பழக்கவழக்கங்கள்தான்.

உடல் பராமரிப்பின் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. தெளிவான புரிதலுடன் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்கும்போது அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேரப் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x