Published : 13 Aug 2016 12:07 PM
Last Updated : 13 Aug 2016 12:07 PM
உடல் உறுப்புகளின் பாதுகாப்பில் கண் நலம் மிக முக்கியம். இன்றைய நவீன வாழ்க்கை சூழலாலும் மேற்கத்திய உணவு முறையைப் பின்பற்றுவதாலும் குழந்தைப் பருவத்திலேயே கண் பாதிப்புகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேநேரம், கண்ணில் ஏற்படும் பல பாதிப்புகளைக் குழந்தைப் பருவத்திலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றால்தான் முழுமையாகக் குணப்படுத்த முடியும். நடுத்தர வயதினருக்கு நீரிழிவு நோய் காரணமாகக் கண்புரை, விழித்திரை பாதிப்பு, கண் நீர்அழுத்த நோய் எனப் பலதரப்பட்ட நோய்கள் தாக்கிப் பார்வையைப் பறிக்கின்றன. இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முறையான கண் பரிசோதனைகள் அவசியம்.
சில முக்கியமான கண் பரிசோதனைகள்:
பார்வைத் திறன் பரிசோதனை (Refraction Test):
பார்வையில் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. இப்போதெல்லாம் பலருக்கும் பள்ளிப் பருவத்திலேயே பார்வையில் குறை உண்டாகி, கண்ணுக்குக் கண்ணாடி அணிய வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். எனவே, எட்டு வயதுக்குள் எல்லாக் குழந்தைகளும் ஒருமுறை இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
பொது ஆரோக்கியப் பரிசோதனை (Regular general check up):
கண்ணில் சத்துக்குறைவு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. கண்ணைப் பாதிக்கும் சத்துக்குறைவு நோய்களில் பெரும்பாலும் வைட்டமின் ஏ பற்றாக்குறையால்தான் பலரும் துன்பப்படுகிறார்கள். இதைச் சாதாரணக் கண் பரிசோதனையிலேயே தெரிந்துகொள்ள முடியும். டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்களை நேரடியாகப் பார்த்து விழிவெண்படல நோயைக் கணிப்பார்கள். இதை எல்லா வயதினரும் எல்லா மருத்துவர்களிடமும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளலாம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் குறைபாட்டால் கார்னியாவில் ஏற்படும் குறைபாடுகளையும் கண்புரை நோயையும் (Cataract) இந்தப் பரிசோதனை மூலம் ஆரம்ப நிலையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.
மாறு கண் பரிசோதனை: குழந்தைகளின்
பார்வை வித்தியாசமாகத் தெரிந்தால், அது மாறுகண்ணா இல்லையா என்பதைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, குழந்தைகளின் மாறுகண் பிரச்சினைக்கு எவ்வளவு விரைவாகச் இயலுமோ, அவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு அறுவைசிகிச்சை தேவைப்படுபவர்கள் மூன்று வயதுக்கு மேல் செய்துகொள்ளலாம்.
விழித்திரைப் பரிசோதனை (Retina Test) :
பார்வைப் பிரச்சினைக்காகக் கண்ணாடி அணிபவர்கள், கண்ணாடியை மாற்றும்போது அல்லது வருடத்துக்கு ஒருமுறை இந்தப் பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். முக்கியமாக, தூரப்பார்வைக் குறைபாடு, நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இதைத் தவறாமல் செய்துகொள்ள வேண்டும். இதில் விழித்திரை மற்றும் கண் நரம்புகள் பரிசோதிக்கப்பட்டுக் கூடுதல் பாதிப்புகள் உள்ளனவா என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கப்படும். பார்வை நரம்பு மேன்மேலும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
கண் நீர்அழுத்தப் பரிசோதனை (Intra Ocular Pressure Test) :
விழி அழுத்தமானி (Tonometer) எனும் கருவியைக் கொண்டு கண்ணின் அழுத்தத்தைத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 20 மி.மீ. மெர்குரி. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் ஆண்டுக்கு இருமுறை இதைச் செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் குளுக்கோமா நோய் உள்ளதா என்பதை அறியலாம். ஏற்கெனவே இந்தப் பாதிப்பு இருந்தால், அது மேன்மேலும் அதிகரிப்பதைத் தடுத்துவிட முடியும்.
பெரிமெட்ரி பரிசோதனை (Perimetry Test) :
கண் நீர்அழுத்த நோய் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பக்கப் பார்வைக் குறைபாட்டை அறிந்து, பார்வை நரம்பின் நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம். அது பாதிக்கப்படாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும்.
வண்ணப் பார்வைப் பரிசோதனை (Colour Vision Test) :
குளோரோகுவின் விழித்திரைப் பரிசோதனை (Chloroquine Retinopathy Test) என்றும் இதைக் கூறுவார்கள். நாட்பட்ட மூட்டுவலிக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு, பொருளின் நிறத்தை அறியும் தன்மை பாதிக்கப்பட்டு நிறக்குருடு வரலாம். இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்பதை இந்தப் பரிசோதனைமூலம் தெரிந்துகொண்டு, நிறக்குருடு வராமல் பார்த்துக்கொள்ளலாம்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
உறவுக்குள் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருக்க அதிக வாய்ப்பு உண்டு. குழந்தைகளுக்குப் பொதுவாக மூன்று மாதங்களுக்குள் அம்மாவின் முகம் தெரிய ஆரம்பிக்கும். அந்த மாதங்களுக்குப் பிறகும் அம்மா முகத்தைக் குழந்தை உள்வாங்கவில்லை என்றால், மற்ற உருவங்களையும் பார்க்க முடியவில்லை என்றால், உடனடியாகக் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு ஒருமுறை கண் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. காரணம், குழந்தையின் கவனக்குறைவு, பார்வைக் குறைபாட்டாலும் இருக்க வாய்ப்பு உள்ளது.
ஏழு வயதுவரை குழந்தையின் கண் வளர்ச்சி வேகமாக இருக்கும். கண்ணில் உள்ள குறைபாடுகளை இந்த வயதுக்குள் கண்டறிந்து சிகிச்சை பெற்றுவிட்டால் நல்லது. அதற்கடுத்த வயதுகளில் சில கண் நோய்களை முழுவதுமாகச் சரிப்படுத்த முடியாது என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
குழந்தையின் கண் நலனுக்காக, 9-வது மாதத்திலிருந்து மூன்று வயதுவரை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை வைட்டமின் ஏ சொட்டு மருந்தை வாய்வழி போட்டுக்கொள்வது அவசியம். இது எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகப் போடப்படுகிறது. பார்வைக் குறைபாடுகளைத் தவிர்க்க இது உதவும்.
இருசக்கர வாகனங்களில் செல்வோருக்குக் கண்களில் வறண்ட காற்று, சிறு தூசுகள் தொடர்ந்து படும்போது, விழிவெண்படலத்தில் பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தரமான கூலிங் கிளாஸ் மற்றும் ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
கணினித் திரையைத் தொடர்ந்து பார்க்கும்போதும் இதே பிரச்சினை வரும். இதைத் தவிர்க்க 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கணினியிலிருந்து பார்வையை விலக்கி, தூரமான பொருட்களைப் பார்ப்பது நல்லது அல்லது அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பது என்று வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
காரட், பீட்ரூட், வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, அரைக் கீரை, முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, சிறு கீரை உள்ளிட்ட அனைத்துக் கீரைகள், ஆப்பிள், மஞ்சள் நிறப் பழங்கள், மீன் போன்ற வைட்டமின் ஏ மிகுந்த உணவைக் குழந்தைப் பருவத்திலிருந்தே சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொண்டால், கண் பார்வையை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.
கண் சிவத்தல், எரிச்சல், உறுத்தல் போன்ற எந்தப் பிரச்சினைக்கும் சுயமருத்துவம் செய்துகொள்ளக்கூடாது.
கண் பிரச்சினைகளுக்கு விளக்கெண்ணெய், ஆட்டுப் பால், கோழி ரத்தம் போன்றவற்றைக் கண்ணில் போடக்கூடாது.
வெளிப்பொருள் ஏதாவது கண்ணில் குத்தியிருந்தால், அதை நாவால் தடவி எடுக்கக் கூடாது.
ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து வயதினருக்கும் கண் பரிசோதனை அவசியம்.
நீரிழிவு நோயாளிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் கு. கணேசன் -கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
(அடுத்த வாரம்: கர்ப்பிணிகளுக்கு என்ன பரிசோதனை?)
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT