Last Updated : 12 Dec, 2013 12:00 AM

 

Published : 12 Dec 2013 12:00 AM
Last Updated : 12 Dec 2013 12:00 AM

முதியவர்களை அதிக அளவில் பாதிக்கும் நோய்கள் - சென்னையில் 2 நாள் மாநாடு

முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மாதத்துக்கு சுமார் 5 ஆயிரம் முதியவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி.) முதியோர் மருத்துவப் பிரிவு மற்றும் இந்திய முதியோர் மருத்துவ அமைப்பு ஆகியவை இணைந்து வரும் 13-ம் தேதி எம்.எம்.சி.யில் முதியோர் மருத்துவக் கல்வி பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன. அதைத் தொடர்ந்து 14, 15 தேதிகளில் வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் முதியோர் மருத்துவ மாநாடு (GERICON-2013) நடக்கிறது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதியோர் மருத்துவத் துறை பேராசிரியரும், மாநாடு ஒருங்கிணைப்பு செயலாளருமான டாக்டர் சாந்தி கூறியதாவது:

சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1996 முதல் முதியோர் மருத்துவப் பிரிவு செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளது. இதேபோல செங்கல்பட்டு மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதியோர் சிகிச்சைப் பிரிவு செயல்படுகிறது. இந்த 3 மருத்துவமனையிலும் மாதத்துக்கு சுமார் 5 ஆயிரம் முதியவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.

உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகிறது. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியில் நடக்கவுள்ள பயிற்சிப் பட்டறையில் முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படும். முதியோர் மருத்துவ மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர். வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் சாந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x