Published : 24 Apr 2014 07:57 AM
Last Updated : 24 Apr 2014 07:57 AM
அந்தப் பெரியவருக்கு சரியாகத் தூக்கம் வருவதில்லை. மருத்துவரிடம் சென்று என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார். மருத்துவர் ‘சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு என் அறைக்கு வாங்க’ என்று சொன்னார். பெரியவரும் இரவு பன்னிரண்டு மணிக்கு டாக்டரின் அறைக்குச் சென்றார். உடனே டாக்டர் மேஜையிலிருந்து ஒரு சீட்டுக் கட்டை எடுத்து ‘எனக்கும் இரவெல்லாம் தூக்கம் வருவதில்லை. போரடிக்குது. வாங்க ஒரு கை போடுங்க’ என்று சீட்டுகளைக் கலைக்க ஆரம்பித்தார். அந்த மருத்துவருக்கும் வயது எழுபது.
வயதானாலே தூக்கம் குறைந்துவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறந்த குழந்தை ஒரு நாளுக்கு 20 மணிநேரம் தூங்கும். வயதாக ஆக அந்த அளவு நான்கைந்து மணிநேரமாகக் குறைந்துவிடும்.
தூக்கத்தின் அளவு மட்டுமின்றி தூக்கத்தின் ஆழமும் குறையத் தொடங்கும். அடிக்கடி விழிப்பு தட்டுவது, சிறிய சத்தம் கேட்டால்கூட விழித்துக்கொள்வது என்று இருக்கும்.
தூக்கம் வராமல் இருப்பதற்கு மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் ஒரு முக்கிய காரணம் என்றாலும் வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதன்மையான காரணம் பெரிதாக ஏதும் செயல்பாடுகள் இல்லாமல் சும்மாவே இருப்பது. வேலைக்குச் செல்லும்போது அலுவலகம் செல்வது, வீடு திரும்புவது, தொழில் செய்பவராக இருந்தால் கடையை அடைப்பது என்று பல விஷயங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நடக்கும். இவை ஆங்கிலத்தில் Time markers (நேரக் குறிப்பான்கள்) என்று அழைக்கப்படும். நம் உடல் குறிப்பிட்ட செயல்களைச் செய்துவிட்டுத் தூங்கிப் பழகியிருக்கும். அவை இல்லை எனும்போது தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடுகிறது.
ஆகவே ஒரு அட்டவணைப்படித் தினமும் காலையிலிருந்து குறிப்பிட்ட செயல்களைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழகவேண்டும். மாலை வெளியே சென்று வருவது, டைரி எழுதுவது, பேரன் பேத்திக்குக் கதை சொல்வது என்று குறிப்பிட்ட செயல்களைச் செய்தபின் தூங்குவது என்று வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூக்கம் வரவில்லை என்று படுக்கையிலேயே புரண்டு கொண்டிருக்காமல் எழுந்து விட வேண்டும். ‘பின் நவீனத்துவம்: எழுநூறு பக்கங்களில் ஒரு எளிய அறிமுகம்’ போன்ற புத்தகங்களைப் படிக்கலாம். தூங்குவதற்கு ஓரிரு மணி நேரங்களுக்கு முன் அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. மெகா சீரியல்களில் அடுத்து யார் வாழ்க்கை வீணாகப் போகிறதோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் தூக்கம் கெடுவது உறுதி.
குறிப்பாக, தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டால் இருக்கும் தூக்கமும் போய்விடும். ‘தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்’ என்பது ஓஷோவின் வாக்கு. பணம், புகழ்போல் அது தூக்கத்துக்கும் பொருந்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT